புராதனப் பெருமைவாய்ந்த நாகேஸ்வரி ஆலயம் வர்த்தகரின் பொருள் கொண்டு விஸ்தரிக்கப்பட்டு விளங்குவதைக்கண்ட போத்துக்கீசர் இதனைச் சும்மா விட்டுவைப்பார்களா? இந்த ஆலயத்தில் உள்ள பொருள் பண்டத்தை அபகரிக்கும் பேராசைபிடித்த போத்துக்கீசர் இதனை அழிக்கத் தொடங்கினர். கோயில் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த வன்கணாளரின் கொடிய செயலைக் கண்டு சைவ மக்கள் அனலிடைப்பட்ட புழுப்போலத் துடிதுடித்தனர். தாங்கள் பக்தியுடன் வழிபட்டுவந்த மூர்த்திகளையும் பூசைப் பாத்திரங்களையும் தேர்களையும் அந்நியர் தீண்டக்கூடாதெனக் கருதிய சைவ நன்மக்கள் அவற்றை வெவ்வேறிடங்களில் ஒளித்து வைத்தார்கள். அம்பாளை மேற்குக் கடற்கரையிலுள்ள ஓர் ஆலமரப்பொந்தில் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த மரம் "அம்பாள் ஒளித்த ஆல்" என வழங்கப்பட்டதென ஓர் ஐதீகம் உண்டு. அந்நியர் கோயிலை இடித்தபோதிலும் அம்பாள் வழிபாட்டை நிறுத்த முடியவில்லை. அவள் நயினாதீவு மக்கள் ஒவ்வொருவருடைய உள்ளமாகிய பெருங்கோயிலில் உறுதியான இடம்பெற்று விளங்கினாள். அந்நிய மதத்தினர் இன்னல் செய்தவிடத்தும் நயினாதீவு மக்கள் சைவப்பற்றினைக் கைவிடவில்லை என்பதனை இது உறுதிப்படுத்துகின்றது.

இக்கோயிலை அந்நியர் அழிக்க வந்தபொழுது கோயிற் தேர் தானாகவே உருண்டு மேற்குக் கடலில் ஆழ்ந்துவிட்டதாம். ஒருசமயம் அக்கால சைவமக்கள் அதனைக் கடலினுள் தள்ளிவிட்டிருத்தலும் கூடும். சிற்சில காலங்களில் தேர்முடி கடலில் பெளர்ணிமைத் தினத்தில் தெரிகிறது என்ற ஒரு கதையும் அடிக்கடி கேட்கப்படுவதுமுண்டு. இது பண்டைக்காலத்தில் தேர் முதலியன கடலினுள் தள்ளப்பட்ட நிகழ்ச்சியின் எதிரொலியாக இருக்கலாம். இவ்வாலயத்திற்குச் சமீபமாகவிருக்கும் தென்னந் தோப்புக்களிற் கிண்டிப் பார்த்தபொழுது, தரையின்கீழ் பழைய கட்டிடங்கள் காணப்பட்டன. திருக்குளமொன்று வெட்டியபோழுது கோயிற் பூசைக்குரிய வெண்கலப் பொருள்கள் சில வெளிக்கிளம்பின.


போத்துக்கீசர் நாகபூஷணி அம்பாள் கோயிலை இடித்தல்

போத்துக்கீசர் தேரைக் கண்ணுறல்