நவமாயமைக்கப்பெற்ற சித்திரத்தேரின் வெள்ளோட்ட வைபவம் 8 – 7 - 57 இல் நயினாதீவில் நடைபெறும் எனத் தேர்த்திருப்பணிச் சபை அறிவித்தது. அங்கே யாத்திரை செய்வதற்கேற்ற போக்குவரத்து வசதிகளையும் உணவு வசதிகளையும் திருப்பணிச்சபை செய்து வைத்தது. பெருந்தொகைப் பணச் செலவிற் புதியதொரு சித்திரத்தேர்த் திருப்பணியை நிறைவேற்றிய தேர்த் திருப்பணிச் சபையினர் தேரின் வெள்ளோட்ட வைபவத்தின் போது சிறந்த மலர் ஒன்றினை வெளியிடக் கருதி அதனை எழுதி தருமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். இருவாரங்கட்கிடையே எழுதித் தர வேண்டுமென்றனர். இதனைக் குறித்த தினத்தில் வெளியிடுவதில் திரு வே. கிருஷ்ணபிள்ளையும் திரு வே. கந்தசாமியும், திரு வே. செல்வநாயகமும் பெருமுயற்சி செய்தனர். ஒருமாத காலத்துள் இதன் இரண்டாம் பதிப்பு வெளிவரலாயிற்று. திருவாரூர்த் தேரழகும் திருவிடைமருதூர் வீதியழகும் என்ற முதுமொழியொன்றுண்டு. ஆனால் சென்ற 1957 ஆம் ஆண்டு ஆடி மாதம் தொடக்கம் திரு நயினைத் தேரழகும் திருவிடைமருதூர் வீதியழகும் என்ற மொழியே பலர் வாயிலும் வழங்குகின்றது. ஈழநாட்டிலே இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்திரத் தேர் இதுவரை அமைக்கப்படவில்லையென்று தான் கூறவேண்டும்.
ஈழநாட்டில்
"நம்முடைய ஈழநாட்டிலும் பழைய தேர்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட சித்திரங்கள் நிறைந்த மரத்தேர்கள் பல காணப்படுகின்றன. மாவிட்டபுரம், பறாளாய், சுதுமலை முதலிய இடங்களிலுள்ள தேர்களின் சித்திரங்கள் ஒத்த அழகும் அமைப்பும் பொருந்தியனவாய் விளங்குகின்றன" மாதகல் நுணசை முருகமூர்த்தி கோயிலிலுள்ள தேரும், பராளாயிலுள்ள தேரும் ஒரே காலத்தன என்றும் அவை சண்முகசேகர முதலியார் என்ற பிரதானி ஒருவராற் செய்யப்பட்டனவென்றும் என் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். நல்லூர்க் கந்தசாமி கோயில், மருதடி விநாயகர் கோயில் முதலிய ஆலயங்களிலுஞ் சித்திர வேலைப்பாடமைந்த தேர்கள் உண்டு.
இத்தகைய கீர்த்திவாய்ந்த தேர் வரிசையில் நயினாதீவு நாகபூஷணியம்மன் தேர் முக்கிய இடம் வகிக்கிக்கும் என்பதற் ஐயமில்லை. இந்த அழகிய தேரைப் பார்க்கவே பலர் நயினாதீவுக்கு யாத்திரை செய்வர் என்று அவுஸ்திரேலிய மரவேலை நிபுணர் திரு. ஹேப்ட் குறிப்பிட்டுள்ளார். இத் தேர் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கண்டு மகிழ்ந்து இவ்வறிஞர் இத் தொழிலாளரை மனமாரப் புகழ்ந்துள்ளார்.