சில வருடங்களுக்குமுன் பப்பரவன் சல்லி என்னும் காணியிற் கிணறு ஒன்று தோண்டியபோது சில சாடிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றைக் கொழும்பு நுதனசாலைக்கனுப்பி வைத்தபொழுது அவை சீன தேயத்துச் சாடிகள் எனவும், 12ம் நூற்றாண்டிற் செய்யப்பட்டவையாயிருத்தல் கூடுமெனவும், நுதனசாலை அதிகாரிகள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். பெளத்த மதம் இலங்கையிற் பரவியிருந்த காலத்தில் புங்குடுதீவு (புவங்குதிவயின), நயினாதீவு (நாகதிவயின), ஊறாத்துறை (தன்னிதிவயின), அனலைதீவு (அக்னிதிவயின), காரைதீவு (காறதிவயின) முதலிய தீவுகள் பிரபல்யமுற்று விளங்கின. பெளத்தர்கள் இத்தீவுகளில் விகாரைகளைக் கட்டினார்கள். நயினாதீவிலும் ஒரு விகாரை கட்டப்பெற்றது. ஆனால் அந்த விகாரை இப்பொழுது அழிவுற்றுக் கிடக்கின்றது. எனினும் புத்தர் கோயிற்குளம், புத்தர் கோயிலடி, புத்தர் திடல் எனும் இடப்பெயர்கள் பண்டைக்கோயிலின் பெருமையை நினைவூட்டும் சாதனங்களாக இன்றும் மிளிர்கின்றன. புத்தர் திடலில் துளசிச் செடிகள் இப்பொழுதும் தாமே முளைத்து அழித்தலையும் காணலாம்.