தீர்த்தோற்சவத்துக்கு அடுத்தநாள் சாயங்காலம் நாகேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அதன்பின்னர் பூசை நடைபெறும். இரவு தெப்போற்சவம் நடைபெறும். கோவிலுக்கு முன்னுள்ள கடலில் மூன்று தோணிகளை ஒன்றாகப் பிணைத்து அதன்மீது மேடை தயாரித்து அதன்மீது நாகேஸ்வரி அழகிய சப்பரத்தில் ஆரோகணித்து கொலுவீற்றிருக்கும் காட்சி அற்புதமானது. சப்பரம் முழுவதும் மின்சார விளக்குகளால் அலங்காரம் செய்யப்பெற்றிருக்கும். இந்தத் தெப்பம் கடலிலே மிதந்து அசைந்து வரும்பொழுது கடலிலே கோயில் ஒன்று மிதப்பது போல இருக்கும். இவ்வழகிய தெப்பம் கோயில் வலம் வரும் பாவனையில் பாலத்தையடுத்துச் சிறிது தூரம் சென்று திரும்பும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் நின்று இவ்வற்புதக் காட்சியைக் கண்டு தொழுது கண்ணீர் உகுப்பார்கள். கடலிலே தெப்போற்சவம் நடைபெறுவது இந்தக் கோயிலுக்குரிய சிறப்பு அம்சங்களுள் ஒன்றாகும்.

திருவிழாக் காலத்தில் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் சேவாசங்கத்தினரும் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் அன்னதான சபையினரும் யாத்திரீகர்களின் உணவு, தண்ணீர் முதலிய வசதிகளை ஏற்படுத்தித் தொண்டாற்றுகின்றனர்.