தேரின் உறுப்புக்களாகிய பூதப்பார், கன்னிலப்பார், முதலாவது நிலம், கபோதப்பார், ஆனைத்தொட்டிப்பார், அச்சப்பார், அச்சப்பூத்தலைப்பார், பூத்தளைப்பார், இரண்டாவது நிலம், சிம்மப்பூத்தளைப்பார், மூன்றாவது நிலம், நாகத்தளைப்பார், விஸ்தாரப்பார், தேவாசனம், சிம்மாசனம், கம்பங்கள், பண்டிகை, கர்ணக்குடம், மணிமுடி முதலியன சிற்பசாச்திர முறைப்படி செவ்வனே அமைக்கப்பட்டுள்ளன. நயினாதீவு கோயிலைப் பற்றிய ஐதீகங்கள், சரித்திரத் தொடர்புள்ள சம்பவங்கள், கிருஷ்ண லீலைகள், அட்டமங்கலம், அட்டதிக்குப் பாலக சக்திகள், அட்டலக்குமிகள், அம்பாளின் உருவ பேதங்களாகிய உருத்திர சக்திகள் பதினொன்றும் அவர்களுக்குரிய வாகனம், ஆயுதம் முதலியவற்றுடன் சிற்ப முறைக்கமைய திறம்படப் பொறிக்கப்பெற்றுள்ளன. நாகம் ஒன்று புளியந்தீவிலிருந்து பூப்பறித்துக்கொண்டு வரும் வழியில் கருடனால் தாக்கப்பட்ட வரலாறு மிக அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.


திரு. குல. சபாநாதன் தேர்த் திருப்பணிச் சபை மலரினைப் புதிய தேரினைச் செய்த திரு. எஸ். குமாரசாமி ஆசாரியார் அவர்களுக்கு வழங்குகின்றார். மத்தியில் நிற்பவர் பதிப்பாசிரியர் திரு. வே. கிருஷ்ணபிள்ளை அவர்கள்

திரு. ம. ஸ்ரீகாந்தா அவர்கள் தேர்த் திருப்பணிச் சபை மலரின் முதல் பிரதியைத் திரு குமாரசாமியவர்களுக்கு விற்கும் காட்சி. மத்தியில் நிற்பவர் கோவில் தர்மகத்தா சபைத்தலைவர் திரு எஸ். சிவஞானம் காரியதரிசி, சாவகச்சேரி

சக்திக்குரிய தேர் வழிகாட்டி

அல்லியரசாணி ஆட்சி செய்த பொழுது அவளுக்கு மந்திரி, பிரதானி, பணியாளர் எல்லாரும் பெண்களாகவே இருந்தார்களாம். ஆண்கள் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவும் முடியாதாம். அதுபோலவே உலக மாதாவாகிய நாகேஸ்வரி எழுந்தருளி வீதிவலம் வருவதற்குரிய சித்திரத் தேரிலும் சக்திகளுக்கே முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சுவாமி எழுந்தருளும் தேருக்கும் தேவி எழுந்தருளுந் தேருக்குமுள்ள பிரதான வேற்றுமை இதுவேயாகும் என்பதை மனதிற் பதித்துக்கொள்ளல் வேண்டும்.

இந்தத் தேரில் நான்கு அழகிய குதிரைகள் இருக்கின்றன அல்லவா? நான்கு வேதங்களாகிய குதிரைகளை ஓட்டுபவள் பிரமாணி (பிரமாவின் மனைவி) எனும் சக்தியாவள். இந்தக் குதிரைகள் இருக்கின்ற பக்கம் கிழக்கு முகமாக அல்லது தேரின் கிழக்குப் பக்கமாகக் கருதப்படும். எனவே குதிரைகள் உள்ள பக்கத்தைக் கிழக்குப் பக்கமாகக் கருதினால், முதலில் அந்தப் பக்கத்தைதானே பார்க்கவேண்டும். நீங்கள் தேரிலுள்ள சித்திரங்களையெல்லாம் விக்கினமின்றிப் பார்த்து முடிக்க விநாயகர் துணையை நாடத்தானே வேண்டும். எனவே ஆகக் கீழேயுள்ள வரிசையில் கிழக்குப் பக்கத்தில் மூஷிகவாகன விக்கினேஸ்வரர் எங்கேயிருக்கின்றார் என்று தேடிக் கண்டு பிடியுங்கள். அவருக்கு முன்னர் கும்பிட்டுக்கொண்டு அலங்காரச் சித்திரங்களைப் பார்க்கத் தொடங்குங்கள்.

சித்திரங்கள் பார்ப்போம் வாரீர்

முதலாவது அடித்தள வரிசை

கிழக்கு:
1. மூஷிகவாகன விக்கினேஸ்வரர்
2. கம்பாநதி
3. பாலசுப்பிரமணியர்
4. நாககன்னிகை இருவருடன் நாகபூஷணி அம்மன்
5. துவாரசக்தி
6. கனிஷ்டா
7. வல்லி சுந்தரி

இவை தவிர விக்கினேஸ்வரருக்கு முன்
அ) வேறு ஆயுதந்தாங்கிய நாகபூஷணி அம்மன்
ஆ) துவாரசக்தி
இ) இராஜராஜேஸ்வரி
ஈ) வல்லி சுந்தரி ஆகிய இவர்களின் சித்திர வடிவங்களுமுண்டு.

தெற்கு:
8. தக்ஷிணாமூர்த்தி
9. சரஸ்வதி
10 சிவதுர்க்கை
11. சங்கு பூதம்
12. தாமரை ஊதும் பூதம்
13. சங்கு பூதம்
14. பஸ்மாசுர மோகினி
15. பூத சம்மாரம்
16. கோபிகா கிருஷ்ண லீலை

மேற்கு:
17. வல்லி சுந்தரி
18. சுப்பிரமணியர் (வள்ளி தெய்வானை சகிதம்)
19. துவாரசக்தி
20. காளி
21. பிராம்மினி
22. புவனேஸ்வரி
23. மகேஸ்வரி
24. சேஹாஷனி
25. துவாரசக்தி
26. நர்த்தன விநாயகர்
27. வல்லி சுந்தரி

வடக்கு:
28. துவாரசக்தி
29. மோகினி
30. சாமுண்டி
31. கத்தி கேடயம் உடைய பூதம்
32. இரட்டைத்தாரை ஊதும் பூதம்
33. கத்தி கேடயம் உடைய பூதம்
34. மனோன்மணி
35. சரஸ்வதி
36. துவாரசக்தி
இதைத்தவிர ஒவ்வொரு மூளைக்கும் 5 உருவங்கள் சேர்ந்த குதிரை நான்கும் இடையிடையே சிம்மக் கட்டைகளும் அமைந்திருக்கின்றன.

இரண்டாவது வரிசை

கிழக்கு:
1. தேவி திருஞான சன்பந்தருக்குப் பாலூட்டுதல்
2. கஜகெளரி
3. கைலாச வாகினி
4. சிவபாதவிருதையர் சம்பந்தரைப் பார்த்து 'உனக்குப் பால் கொடுத்தது யார்?'
கேட்கும் காட்சி
5. இலக்குமி அனுக்கிரகம்

தென்கிழக்கு:
6. சோணங்கி முனிவர்
7. அன்னபூரணி
8. கோணங்கி முனிவர்

தெற்கு:
9. நயினாப்பட்டருக்கு அம்பாள் ஐந்தலை நாகமாகக் காட்சியளித்தல்
10. புளியந்தீவில் நாகம் பூக்கொய்தல்
11. நாகம் வாயில் பூ எடுத்துக்கொண்டு கடல் கடத்தல்
12. கடலில் கருடன் பாம்பைக் கொத்த எத்தனித்தல்
13. வணிகன் கருடனை வேண்டிக் கொள்ளல்
இந்தக் கதையின் எஞ்சிய பகுதியை வடக்கு வரிசையில் உள்ள சித்திரங்கள் மூலம் பார்க்கலாம்.

தென்மேற்கு:
14. தும்புரு
15. நயினாப்பட்டர் மறைந்து நின்று நாகம் செய்வதைப் பார்க்கின்றார்
16. நாரதர்

மேற்கு:
17. தேவி அனுமனுக்கு அனுக்கிரகித்தல்
18. குண்டோதரன் அன்னம் விழுங்கும் காட்சி
19. மீனாட்சி திருமணம்
20. மது, கைடப சம்மார அனுக்கிரகம்
21. சரவணப் பொய்கையில் தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைக்கும்
காட்சி

வடமேற்கு:
22. அகஸ்தியர்
23. அம்பாளை ஆலமரப் பொந்தில் ஒளித்து வைத்தல்
24. வசிட்டர்

வடக்கு:
25. திரவியத்தை ஆலயத்தில் சேர்க்குமாறு கருடன் வணிகனுக்குக் கட்டளையிடுதல்
(தெற்கு வரிசையிலுள்ள கதையின் தொடர்ச்சி)
26. வணிகன் திரவியத்தை ஆலயத்திற்குச் செலுத்தல்
27. போத்துக்கீசர் பவளத் தேரை கண்ணுறல்
28. போத்துக்கீசர் ஆலயத்தைத் தாக்குதல்
29. செப்புத்தேர், பவளத்தேர்களைக் கடலிலே தள்ளுதல்

வடகிழக்கு:
30. வீரமுஷ்டி
31. அம்பாள் முருகனுக்குச் சக்திவேல் அளித்தல்
32. கெளதமர்
இவற்றைத் தவிர எட்டு மூலைகளிலும் எட்டு யாளிகள் அமைக்கப்பெற்றுள்ளன.

மூன்றாவது வரிசை

கிழக்கு
1. விக்கினேஸ்வரர்
2. இந்திராணி
3. அட்டலக்குமியில் வீரலக்குமி
4. அட்டமங்கலத்தில் தர்ப்பணம் - கண்ணாடி
5. பதஞ்சலி முனிவர் வழிபாடும் காட்சி
6. அட்டமங்கலத்தில் பூரணகும்பம் - நிறைகுடம்
7. அட்டலக்குமியில் தனலக்குமி
8. அக்கினி தேவி
9. நவசக்தி உற்பவம்

தென்கிழக்கு:
10. நாகம், கன்னிகை (அலங்காரச் சித்திரம்)
11. ஆபுத்திரன் பசுவினிடத்துக் கருணை கொள்ளுதல் - இந்தக் கதை
மணிமேகலையில் உள்ளது
12. ஆபுத்திரன் தவம் செய்தல்
13. ஆபுத்திரன் அட்சய பாத்திரத்துடன் நாகதீபத்துக்கு வருதல்
14. ஆபுத்திரன் அட்சய பாத்திரத்தை\கோமுகிப் பொய்கையில் இடல்
15. அட்ட நாகபந்தம்
16. நாகம், கன்னிகை (அலங்காரச் சித்திரம் )

தெற்கு
17. நவநாரி குஞ்சரம் ; ஒன்பது பெண்கள் ஒன்று சேர்ந்து நிற்குமிடத்து அவர்கள்
எல்லாருடைய நிலையையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் ஒரு யானை
தெரிகிறதல்லவா?
18. யமதேவி
19. தனலக்குமி
20. அட்டமங்கலத்தில் ரிஷபம் - எருது (3)
21. அனுமனுக்கு மைநாகமலை உதவி புரிதல்
22. அட்டமங்கலத்தில் யுக்மசாமரம் - இணைக்கவரி (4)
23. அட்ட லக்குமியில் தானியலக்குமி
24. நைருதிதேவி
25. அருச்சுனன் நாககன்னிகையைத் திருமணம் புரிதல்

தென்மேற்கு :
26. அலங்காரச் சித்திரம்
27. அட்டநாகபந்தம்
28. காளி தாண்டவத்தில் மகாவிஷ்ணு புல்லாங்குழல் வாசித்தல்
29. காளி தாண்டவம்
30. பிரமன் தாளம் போடுதல்
31. நந்தி மிருதங்கம் வாசித்தல்
32. அலங்காரச் சித்திரம்

மேற்கு
33. திருவானைக்காவில் யானையும் சிலந்தியும் அருள் பெற்ற வரலாற்றுச் சித்திரம்
34. வருணதேவி
35. அட்டலக்குமிகளில் ஐசுவரியலக்குமி
36. அட்டமங்கலத்தில் ஸ்வஸ்திகம்
37. ஐந்தலைநாகம் நாகரத்தினமளித்தல்
38. அட்டமங்கலத்தில் ஸ்திரீவற்சம் - தாயும் சேயும் (6)
39. அட்டலக்குமிகளில் ஆதிலக்குமி
40. வாயுதேவி
41. நயினாப்பட்டர் அம்பாளைப் பூசித்தல்

வடமேற்கு:
42. அலங்காரச் சித்திரம்
43. சோழ மன்னன் பீலி வளையைக் காந்தருவ விவாகஞ் செய்தல்
44. பீலிவளை தன்மகன் ஆதொண்டனைச் சோழ தேசம் அனுப்புதல்
45. புயலில் அகப்பட்டுக் கப்பல் கவிழ்தல்
46. ஆதொண்டனைச் சோழ மன்னனிடம் ஒப்படைத்தல்
47. ஆதொண்டனுக்கு மணிமுடி சூட்டுதல்
48. அலங்காரச் சித்திரம் (நாகமும் கன்னிகையும்)

வடக்கு:
49. ஹம்சநாரி
50. குபேரதேவி
51. அட்டலக்குமிகளில் கஜலக்குமி
52. அட்டமங்கலத்தில் தீபம் (7)
53. மீகாமன் நவரத்தினம் பெறுதல்
54. அட்டமங்கலத்தில் சங்கம் (8)
55. அட்டலக்குமியில் சந்தானலக்குமி
56. ஈசான்ய தேவி
57. மகிஷாசுரமர்த்தநி

வடகிழக்கு:
58. அலங்காரச் சித்திரம் - நாகமும் கன்னிகையும்
59. மீகாமனும் வெடியரசனும் சண்டையிடுதல்
60. மீகாமன் அம்பாளைப் பூசித்தல்
61. அப்பர் சுவாமிகள்
62. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
63. மாணிக்கவாசக சுவாமிகள்
64. அலங்காரச் சித்திரம்

இந்தச் சித்திரக் கட்டிகளுக்கு மேலே தளம் உண்டு. தளத்தில் இடப்பட்ட ஆசனத்தில்தான் அம்பாள் வீற்றிருந்து பக்தகோடிகளுக்குக் காட்சிகொடுத்துத் திருவருள் பாலிப்பாள்.


வீரச்சாமிச் செட்டியாருக்கு அம்பாள் நாகமாகத் தோற்றமளித்தல்.


ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்து அழகான காஞ்சியிற் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியின் திருக்கோலம்


மகிஷாசுரமர்த்தநி


கைலாயவாகனத்தில் அம்பாள் வீற்றிருக்கும் காட்சி


நயினை நாகபூஷணி அம்மன் தேர்

அட்டமங்கள தரிசனம்

தெய்வ சந்நிதானத்தை யாதல் வேறு எவ்விடத்தையாதல் தரிசிக்கச் செல்வோர் முதலில் அட்டமங்களத்தைத் தரிசனை செய்துகொண்ட பின்னரே தாம் வந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்வது சைவமரபு. எனவே இந்த இரத சந்நிதானத்தை அடையும் போதும் மங்களங்களைத் தரிசிக்கவேண்டும்; எப்பொழுதும் மங்களமாகவே வாழ வேண்டும் என்ற கோட்பாட்டுக்கியைய கண்ணாடி, நிறைகுடம், எருது, இணைக்கவரி, ஸ்வஸ்திகம், தாயும் சேயும், தீபம், சங்கு எனப்படும் அட்டமங்கலங்கள் பொறிக்கப்பெற்றிருப்பதைக் காணலாம். புடைப்புச் சிற்பங்களில் நவநாரிகுஞ்சரம் மிக அழகாகப் பொறிக்கப்பெற்றுள்ளது. மானிடப் பிறவியின் ஒன்பது தத்துவங்களையும் அடக்கியாள ஒரு பாகன் வேண்டும் என்பதைச் சிற்பி, பெண்கள் ஒன்பதின்மரின் உருவத்தைக்கொண்டு ஒரு யானை உருவம் சமைத்து அதன்மேல் ஒரு பாகனையும் பொறித்திருப்பது மிக அழகாகவிருக்கின்றது. இதில் சிற்பியின் கைத்திறன் நன்கு பிரதிபலிக்கின்றது. இவ்வாறே அம்சநாரியும் அமைந்திருக்கின்றது. பெண்கள் பலர் சேர்ந்து நடத்தும் லீலா வினோதங்கள் முழுத் தோற்றத்தில் ஓர் அன்னப் பட்சி உருவம் போலக் காட்சியளிக்கும் முறையில் சிற்பி சித்தரித்திருக்கின்றார். ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்யும் காஞ்சி காமாட்சியைக் கங்காநதி கோலத்திலும், காசி விசாலாட்சியை அன்னபூரணி கோலத்திலும், மதுரை மீனாட்சியைத் திருக் கல்யாணக் கோலத்திலும் அமர்த்தியிருக்கின்றார். விஷ்ணு புல்லாங்குழல் ஓத, பிரமன் தாளம் போட, நந்தி மிருதங்கம் வாசிக்க, நாரதர் தும்புரர் தம்பூராக்களுடன் ஆடிப் பாடிக் களிக்க, காளி தேவி தாண்டவமாடும் காட்சி களிபேருவகையளிப்ப தொன்றாகும்.

“துங்கமிகு பக்குவச் சனகன் முதல்
முனிவோர்கள் தொழுதருகில் வீற்றிருப்பச்
சொல்லரிய நெறியை
ஒரு சொல்லாலுணர்த்தியே சொரூபாநூ
பூதிகாட்டிச் செங்கமலபீடமேற்
கல்லாலடிக்குள் வளர்
சித்தாந்த முத்தி முதலே”

எனத் தாயுமான அடிகள் போற்றிய தக்ஷிணாமூர்த்தி திருவுருவத்தின்முன் நிற்கும் பொழுது எங்களையறியாமலே ஒரு அமைதி குடிகொள்கிறது.

இத்தகைய அழகிய திருவுருவங்களை ஆக்கக் கூடிய சிற்பிகள் தமிழ் நாட்டில் இன்றும் இருக்கின்றார்கள் என்பது தமிழர்கட்குப் பெருமையளிக்கக் கூடிய தொன்றாகும். பெண்கள் சாதாரணமாகத் தங்களை அழகு இராணிகளாக மதிப்பது வழக்கம். இந்த மனப்பான்மை இலக்குமிக்கும் இருந்ததாம். அழகில் சிறந்தவள் தன்னைவிட வேறொருவர் இல்லை என்ற இறுமாப்பினால் முனிவர்களின் சாபத்துக்காளாகி மீண்டும் அம்பாளுடைய கடாட்சத்தால் தன் பழைய அழகைப் பெற்ற புராணக் கதையினைப் படியாதவர்களும் இந்தத் தேரிலுள்ள சித்திரத்தின் மூலம் அறிந்து கொள்ளக்கூடிய முறையில் சிற்பி அமைத்திருக்கின்றார்.

கோணங்கி முனிவரும் சோணங்கி முனிவரும் கூத்தாடுவதைப் பார்த்தால் யாருக்குத்தான் சிரிப்பு ஏற்படாது. இக்காலத்துக் கோமாளி போலக் காட்சியளிக்கின்றார் முனிவர். போத்துக்கீசர் கோயிலின் மேலே தொப்பிகளுடன் நின்று கோயிலை இடிப்பதும், கோயில் தாறுமாறாக உடைந்து விழுந் தருவாயிலிருப்பதும் மிக நுணுக்கமாகக் காட்டப்பட்டுள்ள சிற்பத்தைப் பார்க்கும்பொழுது அழுகையும் கோபமும் கலந்து கிளம்புகின்றன. அருச்சுனன் நாக கன்னியை த திருமணம் செய்தல், ஆபுரத்தின் மணிபல்லவத்திலுள்ள கோமுகியில் அட்சயபாத்திரத்தை இடுதல், சோழ மன்னன் பீலிவளையை மணந்து அவளுடைய மகனுக்கு ஆதொண்டைச் சக்கரவர்த்திப் பட்டம் சூட்டுதல், நயினாப்பட்டர் அம்பாளைப் பூசித்தல், தேவி திருஞானசம்பந்தருக்குப் பால் ஊட்டுதல், அம்பாள் முருகனுக்குச் சக்திவேல் கொடுத்தல், அம்பாளை நயினாதீவு ஆலமரப் பொந்தில் ஒளித்து வைத்தல். மீகாமன் வெடியரசன் சண்டையிடுதல் ஆதியாம் சம்பவங்கள் தேரில் சித்தரிக்கப்பட்டுள்ளன. முறுக்கு மீசையுடனும் ஆயுதங்களுடனும் தோற்றமளிக்கும் வீரமுஷ்டியைப் பார்க்கும்போது எங்களை அறியாமலே வீரம் பிறந்துவிடுகின்றது.