முன்னொரு காலத்தில் நயினாதீவிலுள்ள அம்பிகையை ஒரு நாகம் பூசித்துவந்ததாம். ஒருநாள் அந்நாகம் அர்ச்சனை செய்வதற்காகப் பூக்கள் கொய்வதற்காகச் செல்லும் வழியில் ஒரு கருடன் அதனைக் கொல்லும்பொருட்டு எதிர்த்து வந்தது. கருடனைக் கண்டஞ்சிய நாகம் கடற்கரைக்குச் சமீபத்திலிருந்த கல்லொன்றினைச் சுற்றிக்கொண்டிருந்தது. கருடனும் அந்த நாகத்தைக் கொல்லாமலும் அதனை விட்டகலாமலும் அதற்கெதிரே இருந்த கல்லொன்றின்மீது இருந்தது. இங்ஙனம் இவையிரண்டும் பகமைகொண்டிருக்கும் சமயத்தில், அக்கடல் வழியாக மரக்கலத்திற் சென்ற வைசியன் ஒருவன் அந்நாகத்தின் பயத்தைக் குறிப்பாலுணர்ந்து, மரக்கலத்தை நிறுத்தி அக்கருடனை விலகும்படி கேட்டான். "உனது செல்வம் யாவற்றையும் கொணர்ந்து என்முன் வைத்தால் விலகுவேன்" என்றது கருடன். வணிகனும் அங்ஙனமே செய்தான். நாகமும் தனது நன்றியைச் செலுத்தி நயினாதீவை அடைந்தது. வணிகனும் தனது நாட்டுக்குத் திரும்பினான். நடந்தவற்றை எல்லாம் தனது மனைவியிடம் கூறினான். அன்றிரவு வணிகனும் மனைவியும் நித்திரை கொள்ளும்பொழுது ஒரு பேரொளி தோன்றி அவர்களுடைய கண்களைச் சிறிது நேரம் கூசச் செய்தது. பின்பு அவர்கள் எழும்பிப் பார்த்தபொழுது நாகரத்தினக் கற்கள் அவ்வறையில் இருப்பதைக் கண்டார்கள். நயினாதீவிலுள்ள அம்பிகையின் திருவருள் இருந்தவாறென்னேயென அவர்கள் வியப்புற்று நயினாதீவுக்கு யாத்திரை செய்யப் புறப்பட்டார்கள். அவர்கள் நயினாதீவுக்குச் சென்று வடகிழக்குக் கடற்கரையில் நாகம்மாளுக்குச் சிறந்ததோர் ஆலயம் கட்டுவித்தார்கள்

எழு வீதிகளும் கோபுரங்களும் அமைத்தார்கள். நயினாப்பட்டர் எனும் பிராமண குருவைப் பூசகராக நியமித்தார்கள். இத்தீவுக்கருகில் இப்பொழுதும் பாம்பு சுற்றிய கல், கருடனிருந்த கல் என இரு கற்களைப் பொதுமக்கள் காட்டுகின்றார்கள். இக்கற்கள் அலைகளினால் மோதுண்டு இயற்கையாகப் பெற்ற வடிவங்களை ஆதாரமாகக் கொண்டு மேற்கூறிய கதைகள் உருவாகியிருத்தலும் கூடும்.