எவர் எவர் எவ்வெச்சமயத்தைக் கைக்கொண்டபோதிலும் இறுதி இலட்சியம் ஒன்றே என்பதைக் காட்டுவதற்கான தலங்கள், உலகாயதம் பரவிவரும் இக்காலத்திலும் உலகெங்கணும் இருக்கத்தான் செய்கின்றன! எங்கள் சிறிய இலங்கையிலும் கானக மத்தியில் விளங்கும் கதிர்காமம், வானுறவோங்கும் சிவனொளிபாதம், ஆழ்கடல் சூழ் நயினாதீவு என்பன எம்மதத்தவர்க்கும் சம்மதம் கொடுப்பனவாய் அமைந்துள்ளன.

நயினாதீவைப் பற்றிப் பல ஐதீகங்களுள. அத்தீவிலுள்ள நாகேஸ்வரி ஆலயத்தைப்பற்றியுள்ள ஐதீகங்களும் மிகப் பல. இஃது எப்பொழுது தோன்றியது? எவ்வாறு விருத்தியாகிப் புகழ்பெற்றது? என்னும் இன்னோரன்ன வினாக்களுக்கு ஆராச்சியாளர் திருப்தியடையக்கூடிய விடை கூறும் சரித்திர நூல்கள் இல்லை. எனவே கர்ண பரம்பரையாக வழங்கும் கதைகளைக் கொண்டும் பிற்காலத்தவர் ஆங்காங்கு எழுதிய குறிப்புக்களைக்கொண்டும் இத்தலத்தின் வரலாற்றை ஊகிக்கமுடியுமேயன்றி நிதார்த்தமாக அதுபற்றிக் குறிப்பிடத் துணியவொண்ணாது.

நயினாதீவுக்கு நந்தாப் புகழையளிப்பது ஆண்டுள்ள நாகேஸ்வரி ஆலயமாகும். இது நாகம்மாள் கோயில், நாகபூஷணி அம்பாள் கோயில் எனவும் வழங்கப்படும். யாழ்ப்பாணத்திலிருந்து காரைதீவுக்குச் சென்று அங்கிருந்து வத்தைகள், 'போட்டுக்கள்', 'மோட்டார் லாஞ்சிகள்' மூலமாக யாத்திரீகர்கள் நயினாதீவுக்குச் செல்வது வழக்கம். புகழ்பெற்ற இச்சிறு தீவின் சுற்றளவு ஏறக்குறைய நாலு மைல் வரையிருக்கும்.

இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடுதீவுக்கு நேராகச் செல்வதர்க்குச் சாலை வசதி ஏற்பட்டுவிட்டது. எனவே யாத்திரீகர்கள் புங்குடுதீவு சென்று, யந்திரப் படகு மூலம் நயினாதீவுக்குப் போதல் சுலபமும் துரிதமும் ஆகும்.