மணிமேகலா தெய்வம் இத்தீவுகளைப் பாதுகாத்து வந்ததென்ற ஐதீகம் ஒன்றுண்டு. மணிமேகலா தெய்வமானது அரக்கர் வதைபண்ணாதபடி இந்திரன் ஏவலாலே சில தீவுகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. மணிமேகலை மணிபல்லவத்தைத் தரிசித்தாளென மணிமேகலையெனும் காப்பியம் கூறுகின்றது. மணிபல்லவம் என்பது காவிரிப் பூம்பட்டினத்திற்குத் தெற்கே 30 யோசனையளவிலுள்ள ஒரு சிறுதீவு என்பது மணிமேகலை யெனும் நூலிற் கூறப்பட்டுள்ளது. மணிமேகலை மணிபல்லவத்தில் இறங்கி அமுதசுரபியெனும் அக்ஷயபாத்திரத்தைப் பெற்றாள் என மேற்கூறிய நூல் தெரிவிக்கின்றது. மகாவம்சத்தில் இவ்வரலாறு சிறிது வேறுபடக் கூறப்பட்டுள்ளது. நாகதீபத்தைப் பற்றி புத்த ஜாதகக்கதைகளில் அநேக குறிப்புக்கள் காணப்படுகின்றன.

நாகதீவு அல்லது மணிபல்லவம் எதுவாயிருக்கலாம் என்பதுபற்றி அபிப்பிராய பேதமுண்டு. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதுமே மணிபல்லவம் அல்லது நாகதீவு என்றழைக்கப் பட்டதெனக் காலஞ்சென்ற முதலியார் இராசநாயகம் அவர்கள் கருதினார்கள். டாக்டர் போல்பீரிஸ் அவர்களும் இக்கொள்கையை ஆதரித்து எழுதியுள்ளார். வல்லிபுரக் கோயிற் பொற்சாசனத்தைப் பற்றி டாக்டர் எஸ் பரணவிதாரண அவர்கள் எழுதிய கட்டுரையிலும் இக்கொள்கையினை வலியுறுத்தியே எழுதியுள்ளார். இப்பொழுது நயினாதீவு எனப்படுவதே பண்டைகாலத்தில் மணிபல்லவம், நாகதீவு, மணித்தீவு எனப் பல பெயர்களால் வழங்கப்பட்டதென்பர் பிரிதொருசாரார். இக்கொள்கையினை ஆதரித்து திரு. செல்லையா தில்லையம்பலம் அவர்கள் "நற்றவம் மிக்க நயினாதீவு" என்னும் கட்டுரையொன்று எழுதியுள்ளார். இங்கனம் ஆராச்சியாளர் வாதமிடினும் பொதுஜனங்கள் இவற்றைப் புறக்கணித்து நயினாதீவையே புண்ணியஸ்தலமாகக் கொண்டு வழிபடுகின்றனர். பெளத்தர்களும் தங்கள் புத்தர் பெருமானின் பாதம் படிந்த புண்ணிய தலமாகிய நாகதீவு இந்த நயினாதீவே யென்று கருதி அங்கே ஒரு விகாரை கட்டியுள்ளார்கள். இப்பொழுது ஏறக்குறைய நாடோறும் யாத்திரீகர்கள் அநேகர் செல்கின்றனர். எதிர்காலத்தில் இந்த விகாரை பல்லாயிரக்கணக்கானோர் பக்தியுடன் சென்று வணங்கும் ஆலயமாக விளங்கும் என்பதற்குச் சந்தேகமில்லை. கடலோட்டுகாதை, வெடியரசன் நாடகம், வையாபாடல் முதலியவற்றை நோக்குமிடத்து நயினாதீவு யாத்திரை ஸ்தலமாக விளங்கியிருத்தல் கூடுமெனக் கருத இடமுண்டு.

நாகநயினார் அல்லது நாகதம்பிரான் கோயில் கொண்டேளுந்தருளிய ஸ்தலமாதலின் இது நாகநயினாதீவு எனப் பெயர் பெற்றதெனவுங்கொள்ளலாம்.