“பார்புரந்த திருவடியும் அடியவர்க ளீடேறும் படிக்குப் பைம்பொற்
றார்பரந்த வடிவழகு மழகெழுமங் கலநாணுந் தயங்குஞ் சோதிக்
கார்புரந்த கருங்குழலும் வெண்ணகையுஞ் செவ்விதழுங் கருணைக்
கண்ணுஞ் சீர்புரந்த பிடியன்ன மென்னடையம் பிகைபாதஞ் சிந்தை செய்வாம்”.

தக்ஷண கைலாச புராணம்

அன்னை பராசக்தி வழிபாடு அகிலமெலாம் பரவியிருப்பதை யாவரும் நன்கறிவர். சக்தியும் சிவமும் ஒன்றே, விளக்கும் ஒளியும் போல.
"அருளது சக்தியாகும் அரண் தனக்கு அருளை யின்றித்
தொருள்சிவம் இல்லை, அந்தச் சிவமன்றிச் சக்தியில்லை"

எனச் சிவஞானசித்தியாரில் வரும் அடிகள் இவ்வுண்மையினை நன்கெடுத்துக் காட்டுகின்றன.

"அகிலாண்ட கோடி யீன்ற அன்னையே; பின்னையுங் கன்னியென மறை பேசும் ஆனந்த ரூப மயிலே!" எனத் தாயுமான சுவாமிகள் போற்றிப் பரவிய அன்னை கோயில் கொண்டெளுந்தருளியிருக்கும் தலங்களுள் வட இலங்கையிலுள்ள நயினாதீவு நாகேஸ்வரி ஆலயம் மிக மிகத் தொன்மை வாய்ந்தது.

பொங்கிடு நெடுந்திரைப் புணரி நாற்றிசையும் பொருந்த, நடு மேவியுலகிற் புகழ் பெருகு நயினை மா நகரிலிருந்து புதுமை தரு புனித தாயின் கருணை தவழும் திருக்கோலம், கல்நெஞ்சக் கசடனேனையே கனியுறச் செய்யுமெனின், அன்னையின் அரவணைப்பிலுள்ள அடியார் நெக்குநெக்குருகுவது வியப்பன்று.

"இலங்கையின் புராதன சிவாலயங்கள்" என்ற வரிசையில் அநேக நூல்களை எழுதி வெளியிட வேண்டுமென்ற எண்ணம் எனக்கு நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதன் பயனாகச் சில நூல்களை வெளியிட்டு வருகிறேன். இப்பொழுது நயினை நாகேஸ்வரியின் வரலாறும் தோத்திரத் திரட்டும் ஒரு சிறு நூலாக வெளியிட அருள்பாலித்த அன்னையை வணங்குகின்றேன்.

இப்புனித் தலத்தின் புராதன வரலாற்றை என்னாலியன்றவரை ஆராய்ந்து தொகுத்து இந்நூலின் முதற் பகுதியாகவும், யான் சேகரித்த அநேக தோத்திரப்பாடல்களுட் சிலவற்றைத் தெரிந்தெடுத்து இந்நூலின் இரண்டாம் பகுதியாகவும் வெளியிடுகின்றேன்.

என்னுடைய பெற்றோர் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் மீது அளவிறந்த பக்திகொண்டோழுகி வந்தமையினால், யானும் இளமைக்காலந் தொடக்கம் இப்புனித தலத்தைத் தரிசித்து வணங்கி வருவது வழக்கம். யான் சிறு குழந்தையாய் இருந்த பொழுது, அம்பாள் சந்நிதானத்திலே என்னை அர்ப்பணித்து அவள் ஈந்த பிள்ளையாகவே என்னை வளர்த்து வந்தனர் என் பெற்றோர். மேலும் ஆண்டு தோறும் நயினாதீவு அம்பாள் ஆலய பூசைக்காக மீசுபொலி நெல் சேகரிக்க வரும் தொண்டருக்கு என் அன்னை உணவும் உறையுளும் கொடுத்து பக்தியுடன் ஆதரித்து வரும் வழக்கம் உடையராதலின், அம்பாள் மீதுள்ள பக்தி என் இளம்வயதிலேயே வேரூன்றக் காரணராய் இருந்தவர் என் அன்னையே. அன்னைக்கு அன்னையாய் அண்டகோடி புகழ் நயினை வாழும் அகிலாண்ட நாயகியென் அம்மையைப் பற்றிய இச்சிறு நூலை அம்மையன்பர் பொருட்டு வெளியிடத் துணிந்தேன். அருள்சுரக்கும் அன்னையை அடியார் நினைத்துருக இந்நூல் உதவுமாயின் இந்நூலின் பயன் நிறைவேறியதாகும்.

இந்நூலுக்கு அணிந்துரை அளித்த "ஆத்மஜோதி" ஆசிரியரும், நாகேஸ்வரி அன்னையின் நற்தொண்டருமாய உயர்திரு. க. இராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.

இந்நூலை அழகுற அச்சிடுவதில் மெய்கண்டான் அச்சக அதிபரும் எனது அருமை நண்பருமான திரு. நா. இரத்தினசபாபதி அவர்கள் முன் வந்து கைகொடுத்து உதவினார்கள். இந்நூல் அமைப்பிற்கும் உரியகாலத்தில் வெளியிடுவதற்கும் மெய்கண்டான் அழுத்தக அலுவலகத்து திரு. நல்லதம்பி நமசிவாயம் அவர்கள் அதிக ஊக்கத்துடன் உழைத்தார்கள்.

இந்நூலினையும், தோத்திரப்பாடல்களையும் பிரதி செய்வதில் உதவி புரிந்த திருமதி. அ. தெய்வேந்திரன், திரு. க. தில்லைநாதன் ஆகியோருக்கும் அன்னை அருள் பாலிக்குமாறு பிரார்த்திக்கின்றேன்.

அன்னை பராசக்திக்கு வணக்கம்.

குல. சபாநாதன்
"முருகன் அருள்" 3/2, இராமகிருஷ்ண ரெறெஸ்,
வெள்ளவத்தை. 4 - 6 - 62