அமைவிடமும் தொன்மைச் சிறப்பும்

இலங்கையின் வடபால் அமைந்துள்ள சப்த தீவுகளின் நடுநாயகமாகத் திகழ்வது, நாக பூஷணித் தாயின் அருள் சுரக்கும் நயினையம்பதி. கடலன்னையின் அரவணைப்பில் கண்வளர்ந்து அருளன்னையின் ஆலயமணி ஓசையில் புலர்ந்து உலகில் தனக்கென தனியொரு வதிவிடப் பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குவது இம் மணித்தீவு. மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப சிறிய தீவாக இருப்பினும் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே அறிஞர்கள், கவிஞர்கள், புலவர்கள் இங்கு வாழ்ந்துள்ளமையால் கல்வி மேம்பாட்டிலும் சிறப்புண்டு. கண்ணுடையோர் என்போர் கற்றோர் என்று கூறுவார் வள்ளுவப்பெருந்தகை. கல்வியானது அறியாமையைப் போக்கி அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை வளர்த்து ஒழுக்கசீலர் களான மக்களை உருவாக்கவல்லது. அத்தகைய கல்வியிலும் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் நயினை மக்கள் மேம்பட்டு, மற்றையோர் வியக்கும் வகையில் உள்ளனரென்றால் அதற்கு அடிப்படையாக அமைந்த இக்கிராமத்தின் நீண்ட கல்விப் பாரம்பரியத்தையும் வளர்ச்சியையும் அதற்காக அற்பணிப்புடன் பணியாற்றியவர்களையும் நோக்குவதில் பெருமையடை கின்றோம்.

குடியியல் பண்பும் தொழிலும் கல்வியும்

நயினையில் வாழ்ந்த பழம் குடிமக்கள் தமிழர்களாகவும் சைவ சமயத்தவர்களாகவும் வாழ்ந்ததால் தாய்மொழிப்பற்றும் இறைநம்பிக்கையும் உடையவர்களாக இருந்தனர். அவர்களது பிரதான தொழில் விவசாயமாகும். இவர்கள் தமது ஓய்வு நேரங்களில் கல்வி அறிவையும் வளர்த்து வந்தனர். நாற்று நடுதல், ஏற்றம் இறைத்தல், களை பிடுங்குதல் போன்ற வேளைகளில் இசையோடு கூடிய பாடல்களைப் பாடினர். இப்பாடல்களை மீண்டும் மீண்டும் பாடி மகிழ்ந்தனர். இப்படியாக செவிவழிக் கல்வி அக்காலத்தில் வளர்ந்தது. வீடுகளில் பாரதம், இராமாயணம், போன்ற நூல்களை வாசிக்கத் தெரிந்த ஒருவர் வாசிக்க அயலவர்கள் கூடியிருந்து கேட்பர். எழுத வாசிக்கத் தெரியாத நயினை முதியவர்கள் பலர் பாரதம், இராமாயணச் செய்யுள்களை பிழையின்றி மனனம் செய்து வைத்துள்ளமையை இன்றும் நாம் காணலாம்.

நயினைக் கல்வியில் அடுத்தபடியாக அமைவது திண்ணைப் பள்ளிக் கூடங்களும், புராண படனக் கலாசாரமுமாகும். பாடசாலைகள் ஏதுமற்ற காலத்தில் இப்பகுதி அறிவறிந்த பெரியோர்கள் தம் வீட்டுத் திண்ணையில் தம்மிடம் வரும் பிள்ளைகளுக்கு கல்விபோதித்தனர். வேதனம் ஏதுமின்றி எழுத்தறிவித்தலைப் புண்ணியமாகக் கருதிப் பணியாற்றி வந்தனர். இத்தொண்டு புரிந்தவர்களில் முக்கியமானவர்கள் திருவாளர்கள் வேலாயுதர், வே.வைரமுத்து (தம்பிப்பரியாரியார்), சு.வீரகத்தியர், சிவகுரு ஆறுமுகம், கந்தப்பண்டாரம், சின்னத்தம்பி என்போர் நினைவுகூரத்தக்கவர்கள். அவர்கள் தொண்டு வாழ்க. குருகுலக்கல்வி முறையிலான கல்வி நல்ல பண்பாட்டுடன் வளர்ந்தது. ஆசிரியர் வீடு சென்று ஆசிரியருக்குரிய பணிவிடைகளைச் செய்து உடனுறைந்து கற்பதே குருகுலக் கல்வி முறை. இக்கல்விமுறையினால் இலக்கணம், இலக்கியம், கணிதம் என்பன பற்றிய விளக்கமான அறிவு மாணவர்களுக்கு ஏற்பட்டது.

நயினையில் ஆலயங்கள் பலவற்றில் அக்காலங்களில் கந்தபுராணம், வாதவூரடிகள் புராணம் என்பன படித்து பயன் சொல்லும் மரபு இருந்தது. அதன் மூலம் கல்வி அறிவையும், இலக்கிய ரசனையையும், இறை பக்தியையும் வளர்த்த பெருமை இக்கிராமத்து மூதறிஞர்களையே சாரும்.

திருச்சபை பாடசாலை

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1881-1900) வட்டுக்கோட்டையை தலை மையகமாகக் கொண்டு விளங்கிய அமெரிக்க கிறிஸ்தவ திருச்சபையினர் இன்று மகாவித்தியாலயம் இயங்கு மிடத்திற்கருகில் ஒரு தேவாலயத்தையும், மடாலயங்களையும் அமைத்து சமயப்பணி செய்தனர். இவர்களால் ஆரம்பத்தமிழ் பாடசாலை ஒன்று நிறுவப்பட்டது. இதன் அதிபராக யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கிறிஸ்தவ ஆசிரியர் ஒருவர் கடமையாற்றினார். உதவியாசிரியர்களாக உள்ளூர் பிரமுகர்கள் சிலரும் கடமையாற்றினர். அவ்வாறு பணியாற்றியோரில் ஒருவர் ஆசிரியர் கார்த்திகேசு அவர்களின் தந்தையார் நா.கனகரெத்தினம் அவர்கள். திருச்சபையினர் தமது சமய வளர்ச்சியையே நோக்காகக் கொண் டிருந்தனர். ஒரு சிலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர். எனினும் அதில் நிலைத்திருக்கவில்லை. பொது மக்களின் ஆதரவு இப்பாடசாலைக்கு கிடைக்கவில்லை. தில்லையம்பல வித்தியாசாலையின் ஆரம்பத்துடன் இப்பாடசாலையின் வகுப்புக்கள் மூன்றாம் வகுப்பு வரை குறைந்து நாளடைவில் நலிவடைந்து செயலற்றது. இப்பாடசாலையில் கல்விகற்ற சிலர் ஆங்கில அறிவுள்ளவர்களாகத் திகழ்ந் தார்கள். எனவே அக்காலத்தில் ஆங்கிலக் கல்விக்கு இப்பாடசாலை உதவியுள்ளது எனலாம்.

தில்லையம்பல வித்தியாசாலை

கிறிஸ்தவப் பாடசாலைகளில் நடைபெற்ற மத மாற்றத்தை கண்டித்து ஆறுமுக நாவலரின் பிரசாரங்கள் தீவிரமடைந்திருந்த காலம் இது. குடாநாட்டின் பல பாகங்களிலும் சைவப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. நயினாதீவிலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் ஆரம்பிக்கப்பட்ட சைவப்பாடசாலை தில்லையம்பல வித்தியாசாலையாகும். இதன் தாபகர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரியார் சின்னக் குட்டியார் அவர்கள். அவர் தனது நண்பர் நயினைப் பெரியார் கதிரேசு அவர்களின் வேண்டுகோளுக்கமைய காலம் சென்ற தன் புதல்வன் தில்லையம்பலத்தின் பெயரால் இவ்வித்தியாலயத்தை நிறுவினார் என்பர். இதற்கான நிலத்தை திரு. மு.செல்லப்பா என்னும் வள்ளல் நன்கொடையாக அளித்தார். இக்காணி தற்போது நயினை மகா வித்தியாலய விளையாட்டுத்திடலுக்கு சற்று வடக்குப் புறமாக உள்ளது. பெரியார் சிவனடியார் அவர்களும் அவர் பின் அவரின் மகன் சட்டத்தரணி பொன்னம்பலம் அவர்களும் பாடசாலை முகாமைத்துவத்தை பார்த்து வந்தனர். கிராமத்தின் மாணவர்கள் இங்கு தம் கல்வியைத் தொடந்தனர்.

தில்லையம்பல வித்தியாலயத்தில் வித்துவ சிரோன்மணி கணேசையர் (புங்குடுதீவு சிவ ஸ்ரீசோமசுந்தரக் குருக்கள்) தலைமை ஆசிரியராக இருந்து அரும் பணியாற்றினார் இவர் பின் வேலணை தம்பு வாத்தியார் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் 8ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டது. சிறந்த சைவ ஆசார சீலரான இவரைப் பின்பற்றிய மாணவர்கள் சிறந்த ஒழுக்க சீலராகத் திகழ்ந்தனர். மாணவர்களின் தொகை பெருக உள்ளூர் பிரமுகர்கள் சிலரும் தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். ஆரம்பத்தில் திருவாளர்கள் மு.பரமலிங்கம், கா.கந்தையா, என்போரும் பின்னர் ச.வைத்திலிங்கம், த.கதிரேசு, ப.சுந்தரம்பிள்ளை, வை.சடையப்பசுவாமி, மு.நாகலிங்கம், திருமதி.வை. இராசம்மா, செல்விகள் க.நாகம்மா, ச.சிவக்கொழுந்து ஆகியோரும் ஆவர். முதன்மை ஆசிரியர் தம்பு அவர்கள் ஆர்வமுள்ள படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி ஓய்வுவேளை களில் புராண படனம், பயன் விரித்தல் போன்ற துறைகளில் பயிற்சிகளை வழங்கினார். அமரர்களான திருவாளர் ப.கந்தசாமி, க.மாணிக்கம், த.அமர்தலிங்கம், கா.ஆறுமுகம் போன்ற புராண படனப்பரம்பரை தோன்றிற்று தம்பு வாத்தியார் நயினை மக்களின் மனத்தில் என்றும் நீங்காத இடத்தினைப் பெறுகிறார்.

தில்லையம்பல வித்தியாலயம் இவ்வாறு விருத்தியடைந்து வருகையில் முகாமையாளர் சட்டத்தரணி சி.பொன்னம்பலம் அவர்கள் 1926ஆம் ஆண்டு பாடசாலையின் முகாமைத்துவத்தை யாழ்ப்பாணம் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்திடம் ஒப்படைத்தார். சங்கத்தினால் புலோலியூர் வே.விசாகர் அவர்கள் முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கல்வித் தகைமை உடைய உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தகைமை பெற்றிருந்த மு.நாகலிங்கம், செல்வி க.நாகம்மா, என்போர் நிரந்தர ஆசிரியர்களாக ஏனையோர் இளைப்பாறிக் கொண்டனர். விசாகர் அவர்களது சேவை மாணவர் களாலும், பெற்றோராலும் புகழ்ந்து பேசப்பட்டது என அறிய முடிகிறது. 1928ஆம் ஆண்டு திருவாளர் ச.நா.கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியரானார். நயினை மக்களால் பெரிய உபாத்தியாயர் என அழைக்கப்பட்ட இவரது காலப்பகுதி நயினைக் கல்வி வளர்ச்சியில் பொற்காலமெனப் போற்றத்தக்கது. கனிஷ்ட பாடசாலைத் தராதரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றிச் சித்தியடையத் தொடங்கினர். இப்பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயம்

கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தின் மாணவர் பரம்பலின் வீழ்ச்சி

ஆண்டு 96 97 98 99 00 01 02 03 04 05 06 07 08 09 10
மா. தொ 168 251 123 128 121 123 150 142 127 121 115 113 110 111 109

அட்டவணை - 01

கடந்த சில ஆண்டுகளாக வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

ஆண்டு 96 97 98 99 00 01 02 03 04 05 06 07 08 09 10
மா. தொ 13 21 16 14 12 16 09 23 19 25 11 23 18 16 17
சித்தி 02 01 03 - - 01 - 01 01 - 01 02 - 01 -

அட்டவணை - 02

1938ஆம் ஆண்டு தில்லையம்பல வித்தியாலயம் ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்து பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் ஆசிரியர்கள் திருவாளர்கள் வே.கந்தையா, செ.தில்லையம்பலம், செல்வி. சீதேவிப்பிள்ளை ஆகியோர் உதவி ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். மாணவர் தொகை அதிகரிக்கவே ஆசிரியர்கள் பெற்றோர்கள், நலம் விரும்பிகள் முயற்சியால் தற்போது வித்தியாலயம் அமைந்துள்ள காணி கொள்வனவு செய்து உறுதியான கட்டடம் அமைக்கப்பட்டு 1941ஆம் வருடம் இயங்கத் தொடங்கியது. ஏறத்தாள ஒரு கால் நூற்றாண்டுக்கு முன் ஆசிரியர்களாக உதித்த அனைவருமே அதிபர் உயர் திரு. ச.நா.கந்தையா அவர்களின் மாணவர்களே. நயினைத்தீவின் கல்வி வளர்ச்சியில் அவர் ஓர் கலங்கரை விளக்கு எனலாம். பல ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றிய இவர் காலத்தில் வித்துவான்கள், பண்டிதர்கள், சைவப் புலவர்கள், பேரறிஞர்கள் உருவானார்கள். அவர்கள் இன்று நம்மிடையே இல்லாத விடத்தும் அவர்கள் வளர்த்துவிட்ட விழுதுகள் எம் தீவகத்தின் கல்வி விருட்சத்தை தாங்கி நிற்கின்றனர். 1942ஆம் வருடமே சி.பா.த பரீட்சைக்கு இவ்வித்தியாலய மாணவர் தோற்றினர். நயினாதீவு மக்களின் கல்விக் கண்ணை திறந்து விட்ட பெருமை ஸ்ரீ நாக பூஷணி வித்தியாலயத்துக்கு உரியது. 1946இல் நயினாதீவின் கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலை உதயத்துடன் இவ்வித்தியாலயத்துக்கு வகுப்புகள் படிப்படியாகக் குறைந்து 5ஆம் வகுப்பு வரை நடத்தப்படலாயிற்று. 1960இல் இப்பாடசாலையை அரசு பொறுப்பேற்றது. இவ்வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக அதிபர்களான திருவாளர்கள் ச.ந.கந்தையா (1938-1951), (1956-1961) எஸ்.பொன்னுத்துரை (1952-1955) கே.கணபதிப்பிள்ளை, செ.ஐயாத்துரை (1961- 1970) க.சி.தருமலிங்கம் (1971-1972), நா.விசுவலிங்கம் (1972-1978), நா. கந்தசாமி (1978-1983), தா.பாலசிங்கம் (1983-1986), நா.பத்மநாதன்(1986-1990), சி.வை.சபாரத்தினம் (1991-1997) ஆகியோர் நற்சேவையாற்றியுள்ளர்.

பண்டிதர் நா.கந்தசாமி அவர்கள் அதிபராக இருந்த வேளை பாடசாலைச்சுற்றாடலை ஓர் அழகிய சோலையாக்கியுள்ளார். சி.வை.சபாரத்தினம் அதிபராக இருந்தபொழுது பாடசாலையின் மேற்குப் புறமான காணி அன்பர் க.மாணிக்கம் அவர்களிடமிருந்து இரண்டு பரப்பு அன்பளிப்பாகவும் மிகுதிக் காணி பெற்றோர் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடனும் வாங்கப்பட்டது.

திருவாளர்கள் க.கிருஷ்ணசாமி, வி.தனி நாயகம் திருமதிகள் க.பாலசிங்கம், ப.அகிலாண்டேஸ்வரி என்போர் இவ்வித்தி யாலயத்தில் கற்பித்த நல்லாசிரியர்களில் சிலர்.

13-10-1997ஆம் ஆண்டு முதல் அதிபர் திரு. சோ.குகனேசன் அவர்கள் சிறந்த முறையில் பாடசாலையை வழிநடத்தி வந்தார். 03-05-2010 முதல் இவர் நயினாதீவு மகா வித்தியாலய அதிபராகவும் திரு. சொ.பகீரதன் அதிபர் ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்துக்கு அதிபராகவும் கடமையேற்றுள்ளனர்.

பாடசாலையின் பௌதீக வளங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் சுற்றுமதில் திணைக்களத்தினதும், சுவிஸ் நயினை அபிவிருத்திக் கழகத்தின் உதவியுடனும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்து வருவதுடன் சிறப்பாக கற்பித்தல், கற்றல் செயற்பாடுகள் நடை பெறுகின்றன.

நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயம்.

நயினாதீவுக் கிராமத்தின் வடபகுதியிலிருந்த தில்லையம்பல வித்தியாலயத்துக்கு தென் பகுதி மாணவர்கள் வெகுதூரம் நடந்து வரவேண்டியிருந்ததாலும் தில்லையம்பல வித்தியாலயத்தின் மாணவர் தொகை அதிகரித்ததாலும் தென் பகுதிப் பெற்றோரின் பெரு முயற்சியால் 1929இல் உருவாக்கப்பட்டதே கணேச வித்தியாசாலையாகும். நாகமணிப் புலவராலும் அவரது சகோதரர்களாலும் உவந்தளிக்கப்பட்ட பெருநிலப் பரப்பிலே இப்பாடசாலை உதயமாயிற்று. திரு. இ.கணபதிப்பிள்ளை அவர்களும் வடபால் உள்ள நிலத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். பெரியார் ப. இராமசந்திரன் அவர்கள் தனது சொந்த வளங்களையே பயன்படுத்தி பாடசாலை உருவாக முன்னின்றுழைத்தார். உள்ளூர் ஆசிரியர்களே ஆரம்பத்தில் பணியாற்றினர். குறுகிய காலத்தில் அதாவது 1929இல் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்திடம் பாடசாலை ஒப்படைக்கப்பட்டது. முதல் அதிபராக வேலணை க.செல்லையா உபாத்தியாயர் நியமனம் பெற்றார். 1932ஆம் ஆண்டு வரை ஐந்தாம் வகுப்பு ஈறாகக் கற்கும் ஓர் ஆரம்பப் பாடசாலையாக இயங்கியது. 1933ஆம் ஆண்டு புங்குடுதீவு திரு. வி.செல்லையா என்பவர் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

தற்காலிகமான கொட்டிலாக இருந்த பாடசாலையை பெற்றோர் மாணவர்களின் உதவியுடன் 1600 ச.அடி கொங்கிறீற் கட்டடம் அமைக்கப் பெற்றது. அதிபரின் பெரு முயற்சியால் வருடம் ஒவ்வொரு வகுப்பாக உயர்ந்து 1936இல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒரு கனிஷ்ட வித்தியாலயமாகிற்று. 1938இல் இவர் மாற்றலாகிச்சென்றார். இன்றும் இவர் பணியை கிராமத்துப் பெரியோர்கள் நினைவு கூருகின்றனர். இவரின் பின் இடைக்காடு ஞா.சுப்பிரமணியம் என்பவர் 1940இல் தலைமையாசிரியரானார். வகுப்புகள் சி.பா.த.வகுப்பு வரை உயர்த்தப்பட்டது. அவ்வருடம் பரீட்சைக்கு தோற்றிய 9 மாணவர்களில் 8பேர் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர். சில ஆண்டுகள் நயினாதீவின் சிரேஷ்ட பாடசாலை வரை வகுப்புகள் உள்ள ஒரே வித்தியாலயமாக விளங்கியது.

1945இல் எழுவைதீவு திரு. ந.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமை ஆசிரியரானார். இவ்வாண்டிலேயே இலவசக் கல்வி முறை அறிமுகமானது. நயினாதீவு ஆங்கிலப் பாடசாலையின் உதயத்துடன் இங்கு வகுப்புக்கள் 5 வரையாகக்குறைக் கப்பட்டது. 1949ஆம் ஆண்டு திரு. வி.இராமசாமி அவர்கள் தலைமை ஆசிரியரானார். 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். 1952இல் புலமைப் பரிசில் பரீட்சையில் 9 மாணவர்கள் சித்தியடைந்தனர். 1952 - 1956 வரை பெரிய உபாத்தியாயர் என்று எல்லோராலும் மதிப்புடன் அழைக்கப்படும் நயினை திரு. ச.நா.கந்தையா அவர்கள் அதிபரானார். இவரே நயினை ஆசிரியர் அனைவருக்கும் எழுத்தறிவித்த குருவாக விளங்கியவர். 1956 -1970 ஆண்டு வரை திரு. செ.தில்லையம்பலம் அவர்கள் அதிபராகச் சிறந்த சேவை யாற்றியுள்ளார். 1960இல் பாடசாலையை அரசு பொறுப்பேற்றது. உள்ளூர் ஆசிரியர்களின் சேவை மாணவர்களுக்குக் கிட்டியது. மாணவரிடம் கல்வியையும் ஒழுக்கத்தையும் இரு கண் போல் வளர்த்தெடுத்தனர்.

1970 தொடக்கம் 1978 வரை சிறந்த நிர்வாகியான நயினை திரு. த.தியாகராஜா அவர்கள் அதிபரானார். 1972இன் மத்தியில் பாடசாலை புனரமைப்புச் செய்யப்பட்டது. 1972ஆம் ஆண்டு இது ஓர் கனிஷ்ட மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. இதற்கு முன்னின்று உழைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னாளில் வித்தியாலயத்தில் அதிபராக இருந்தவராகிய பா.அ.ச. செயலாளர் திரு. கு.சாந்திலிங்கம் அதிபர் அவர்கள். அதிபர், பெற்றோர், ஆசிரியர்களின் முயற்சியால் பல கட்டடங்கள் ஆய்வு கூடங்கள் என்பன அமைக்கப்பட்டதுடன் பாடசாலையில் வர்த்தகப் பாடப்பிரிவும் உதயமாயிற்று. அக்காலத்தில் ஒன்றிணைந்த பாடத்திட்டம் செயற்பட்டது. வகுப்புக்கள் தரம் 10 வரை உயர்ந்தது. தே.க.பொ.த பரீட்சைக்குத் தோற்றி சிறப்பான தேர்ச்சிகளை மாணவர் பெற்றனர்.

1978 தொடக்கம் திரு. க.சி.தருமலிங்கம் அவர்கள் அதிபரானார். இவர் காலத்தில் வள்ளல் திரு. மு.இ.அம்பலவாணர் அவர்களால் அவர் பெயரில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டது. புதிய கட்டடங்கள் இரண்டு கல்வித்திணைக்களத்தால் கட்டப்பட்டது. 1983இல் - 1986 வித்துவான் ப.க.காமாட்சிசுந்தரம் அவர்கள் அதிபரானார். பாடசாலை பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது. பாடசாலை முன்பக்க மதில் வே.க.த.தம்பிமுத்து அவர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. 1987 - 1993 வரை மேற்கூறிய அதிபர்களின் காலத்தில் பிரதி அதிபராக பாடசாலையின் உயர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்த திரு. கு.சாந்தலிங்கம் அவர்கள் அதிபரானார். அவரது காலத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த.(சா.த) பரீட்சை என்பவற்றில் சிறந்த பெறுபேறுகள் பாடசாலைக்கு கிடைத்தது. பாடசாலையின் முன்புறக்காணி விளையாட்டு மைதானமாக் குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியால் பல அன்பர்கள் மைதானத்திற்குரிய நிலத்தை நன்கொடையாக வழங்கினார். தொண்டர் திரு. வி.சபாநாதன் ஒரு பகுதிக் காணியை விலையாக வாங்கி பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தார். இவ்வாறு பாடசாலை விளையாட்டு மைதானம் பெறப்பட்டது. கணேச சனசமூக நிலையப்பாலர் பாடசாலைக்கு அருகிலுள்ள தனது காணியை திரு. க.பாராஜசிங்கம் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இக்காலத்தில் சுமார் 700இற்கு மேற்பட்ட மாணவர்கள் வரை கல்விகற்று வந்தனர். இவ்வித்தியாலயத்தில் நற்சேவையாற்றிய ஆசிரியப் பெருந்தகைகள் மாணவர்களால் என்றும் போற்றப்படுகின்றனர். திருவாளர்கள் நா.கணபதிப்பிள்ளை, வே.கந்தையா, க.பரநிருபசிங்கம், வே.தம்பிப்பிள்ளை, க.சோமசுந்தரம், பண்டிதர் சோமசுந்தரம், சு.சங்கரலிங்கம், சோ.தில்லைநாதன், இ.சிவபாதசேகரம், இ.கனகசபாபதி, வி.உதயகுமாரன், இ.திரவியநாதன், திருமதிகள் பா.உருக்குமணி, வீ.பரமேஸ்வரி, ந.பேரின்பநாயகி, து.சவுந்தலாதேவி, ந.சியாமளா ஆகியோர் இங்கு கற்பித்த நூற்றுக்கணக்கான நல்லாசிரியர்களில் சிலர். தரமுயர்த்தப்பட்ட கணேச வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சி 70 - 80களில் வீறுநடை போட்டது எனலாம். திரு. கு.சாந்தலிங்கம் அவர்கள் ஓய்வுபெற நயினையின் முதற் பெண்ணதிபராக திருமதி தவமணி சபாநாதன் அவர்கள் (1993 - 1998) பதவி வகித்தார். இக்காலத்திலும் சகல பரீட்சைகளிலும், இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். இவரின் பின் திரு. ப.க.ஞானசுந்தரம் (1998 - 2000) அவர்கள் அதிபரானார். அனைவரையும் அன்போடு அரவணைத்து பாடசாலையின் உயர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருந்த வேளையில் அவர் இறைவனடி சேர்ந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வாகும். இவரின் பின் திரு. த. இலங்கைநாதன் அவர்கள் (2000) அதிபரானார். இவர்களிருவரது காலத்திலும் 'ஞான கணபதி' செயற்பாட்டறை அமைக்கப் பட்டு திறந்து வைக்கப்பட்டது. கல்வி, விளையாட்டு, கலைத்திறன் எனச்சகல துறைகளிலும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை தொடர்ந்து பெறுகின்றனர். 01.11.2000 முதல் திரு.க.கணேஸ்வரன் அதிபரானார். பாடசாலையின் வடக்கு மேற்கு மதில்கள் பழைய மாணவர் திரு. க.கேதீஸ்வரனாலும் தெற்கு மதில் திரு. அம்பலவாணர் சர்வானந்தராசா அவர்களாலும் கட்டுவித்துக் கொடுக்கப்பட்டது. பாடசாலையின் தென் கிழக்குக்காணி கொழும்பு நயினாதீவு சமூக பொருளாதார, கல்விகலாசார அபிவிருத்திச் சங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் திரு. தி.சிவபாலன் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடத்தி வருகின்றார். உபஅதிபர் திரு. க.ஜீவசீலன் மற்றும் உள்ளூர் வெளியூர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையால் கணேச வித்தியாலயம் தன்பணியை செவ்வனே தொடர்கின்றது.

நயினாதீவு மகாவித்தியாலயம்

நயினைக் கல்வியின் இரு கண் போல இயங்கிய இவ்விரண்டு பாடசாலைகளுக்கும் மேலாக ஒரு நெற்றிக்கண் போல் அமைந்ததே நயினையின் தற்போதைய மகாவித்தியாலயம். இது 1946இல் தோற்றம் பெற்றது. ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையின் ஆலயத்திற்கு தென்புறமாக இருந்த ஒரு மடாலயமே இதன் தோற்றிடம்.

இலவசக் கல்வியின் தந்தை என வர்ணிக்கப்படும் அக்காலத்துக் கல்வி யமைச்சர் ஊ.று.று.கன்னங்கராவால் இலங்கை எங்கணும் ஆங்கிலப் பாடசாலை களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தின்படி நயினையின் இப்பாடசாலை கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலையாக உருவாக்கம் பெற்றது. இதனால் வசதி படைத்த ஒரு வகுப்பினருக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கிலக் கல்வி சகலருக்கும் கிடைக்க வழியுண்டாயிற்று. மடாலயத்தில் ஆரம்பமான பாடசாலையை 1947இல் நிரந்தர இடமான வட்டுக்கோட்டை திருச்சபையினரின் காணியில் அமைப்பதற்கு முன்னின்று உழைத்தவர்கள் திரு. த.அமிர்தலிங்கம் அவர்களும் (முன்னாள் கிராமத் தலைவர்) ஆ.நாகலிங்கம் அவர்களும் ஆகும். அக்காலச் சபாநாயகர் சேர் வை.துரைசாமி அவர்களின் உதவியுடன் உயரிய இந்நற்கருமத்தை ஆற்றியமைக்காக என்றும் நயினை மக்கள் இவர்களுக்கு நன்றியுடையவர் களாவார்கள்.

கனிஷ்ட ஆங்கில பாடசாலையின் முதல் அதிபராக எஸ்.அரசன் அவர்கள் 17-01-46இல் பதவியேற்றார். எனினும் ஒரு மாதத்தில் வித்தியாதரிசியாக பதவியுர்வு பெற்று அவர் செல்ல, கரவெட்டியைச் சேர்ந்த உயர் திரு. எஸ்.கந்தப்பு அவர்கள் 12.02.46இல் அதிபரானார். சரவணையூர் அ.அருளானந்த சிவம், செல்வி லீலாவதி முத்துச்சாமி என்போர் உதவி ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். புதிய அதிபரின் வருகையுடன் பாடசாலை தளிர் விடத் தொடங்கியது. பல்வேறு துறைகளிலும் தகுதிபெற்ற ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். புதிய நிரந்தரக்கட்டடங்களும் ஆய்வுக்கூடங்களும் விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டு பாடசாலை வனப்புப் பெற்றது. வகுப்புக்களும் பொதுச் சாதாரண வகுப்புவரை இடம் பெற்றது. சாதாரண தரத்தில் கலை, வர்த்தக, விஞ்ஞானப் பிரிவுகள் செழிக்கத் தொடங்கின. நீண்ட காலம் அதிபராக இருந்த எஸ். கந்தப்பு அவர்களின் (12.02.46 --- 22.12.53) காலத்தில் மாணவர் தொகை ஆசிரியர் தொகை அதிகரித்ததுடன் பௌதீக வளத்தையும் பெற்று சிறந்த கல்விக்கு வழி சமைத்தார். இவர் தன் சேவையால் நயினைக் கல்வி வளர்ச்சியில் மக்களால் என்றும் போற்றுதற்குரியவராவார். இவரின் பின் காரைநகர் வி.சண்முகம் (1953 - 03- 05-1956) அவர்களும், திரு. ரீ.கனகரத்தினம் (05.10.59 - 28.02.1966) அவர்களும், திரு. கே.சபா ஆனந்தர் (04.07.1966 - 06.12-1970) அவர்களும் அதிபர்களாக இருந்த காலங்களில் மகா வித்தியாலயத்தின் கல்வி நிலை மேம்பட்டு வந்தது. இல்லறஞானி இராமச்சந்திரா குடும்பத்தினரால் பாடசாலைக்கு நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இவர்களின் பின் நயினை மைந்தர் திரு. வே.விசுவலிங்கம் அவர்கள் 01.01.1971இல் இருந்து 12.07.1978 வரை அதிபராக இருந்தார்கள். இவரது காலத்தில் விஞ்ஞானம், வர்த்தகப் பிரிவுகளும் க.பொ.த.(உ.த) வகுப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. வர்த்தகப் பிரிவில் மாணவர்கள் அகில இலங்கை ரீதியாகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். சிறந்த நிர்வாகியாகிய வே.விசுவலிங்கம் அதிபர் காலத்தில் மகாவித்தியாலய கல்விநிலை உச்சநிலையில் இருந்தது. நயினை மண்ணில் பிறந்து கல்விப் பணிக்காக ஊரிலேயே வாழ்ந்து அரும்பணியாற்றிய நல்லாசிரியர்களை மறப்பதற்கில்லை. திருவாளர்கள் வித்துவான் சி.குமாரசாமி, வித்துவான் ப.க.குகதாசன், ஐ.சரவணபவன், க.நாகேஸ்வரன், சி.நடேசபிள்ளை, பொ.நாகமணி, சி.இரத்தினசபாபதி, வே.பூபாலசுந்தரம், க. உருத்திரகுமாரன், திருமதிகள் பண்டிதை பா.புனிதவதி, லெட்சுமி பரராசசிங்கம், செல்விகள் க.சிவானந்தி, ந.இரத்தினேஸ்வரி, மு.இ.ஜெயலட்சுமி, திருமதி தி.யோகலெட்சுமி இவர்களுடன் நூற்றுக்கணக்கான வெளியூர், உள்ளூர் ஆசிரியர்கள் சிறந்த சேவையாற்றியுள்ளனர்.

அதிபர் வே.விசுவலிங்கம் அவர்கள் ஓய்வு பெற நயினைக் கவிஞர் நா.க.சண்முகநாத பிள்ளை 18.07.1978இல் அதிபரானார். கலைப் பணிக்கு அவரோர் வற்றாத அருவி. அன்பால் அணைத்து கல்வியை வளர்த்தவர் விளையாட்டு மைதானத்தின் தென்புறக் காணிகள் பெறப்பட்டன. 1980இல் பாடசாலையின் வடக்கு மேற்கு மதில்கள் பழைய மாணவர்களின் உதவியுடன் அமைக்கப்பட்டது. 1988இல் நயினாதீவு, அனலைதீவு, எழுவை தீவு பாடசாலைகள் எட்டையும் ஒன்றிணைத்த கொத்தணிப் பாடசாலை முறைமை நடைமுறைக்கு
வந்தது. நயினாதீவு மகாவித்தியாலயமே அதன் ஆதாரப் பாடசாலையாக இருந்தது. கொத்தணிப் பாடசாலை அதிபராகவும் திரு. நா.க.சண்முகநாதபிள்ளையே கடமையாற்றினார். 1990இல் அவர் வேலணைக் கோட்டப் பணிமனைக்கு உ.க.பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்ல திரு. சோ.தில்லைநாதன் அவர்கள் 16.10.1990 முதல் நயினாதீவு மகாவித்தியாலய அதிபராகவும், கொத்தணிப் பாடசாலைகளின் அதிபராகவும் கடமையேற்றார். மகாவித்தியாலயத்தின் மேல்மாடிக் கூரை வேலைகள் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் பூர்த்திசெய்து உபயோகத்திற்கு உகந்ததாக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தின் வட கிழக்குப் பக்கமான காணி திரு. க.மாணிக்கம் அவர்களிடமிருந்து அன்பளிப்பாகப் பெறப்பட்டு மைதானம் விஸ்தரிக்கப்பட்டது. 1991 முதல் 1995 வரை யுத்தச் சூழ்நிலையில் தீகங்கள் யாழ் நிலப்பரப்புடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் யாழ் கல்வித் திணைக்களத்துடனான தொடர்புகளும் அற்றுப்போய் ஓர் இக்கட்டான காலகட்டமாக அமைந்தது. திருகோணமலையிலுள்ள மாகாணக் கல்வித் திணைக்களத்துடனும் கொழும்பு கல்வி அமைச்சினுடனும், நெடுந்தீவு கோட்டக்கல்வி அலுவலகத்துடனும் கடற்படையின் உதவியுடன் உயிர் அச்சுறுத்தலான கடல், விமானப் பயணங்களை மேற்கொண்டு பாடசாலையின் அத்தியாவசியத் தேவைகள் (பாட நூல்கள், சீருடை, ஆசிரியர் வேதனம்) அனைத்தும் பெறப்பட்டன. க.பொ.த(சாஃத), க.பொ.த(உஃத), தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றையும் தீவகத்தின் கல்வி நிலை தொய்வுபடாது நடத்தப்பட்டது. இக்காலத்திலேயே நயினாதீவுப்பாடசாலை ஆசிரியர்களுக்கு இதுவரை கிடையாதிருந்த கஸ்ரப் பிரதேசப்படியும் கிடைக்க ஆவன செய்யப்பட்டது. நெடுந்தீவுக் கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு. இரா.சின்னத்தம்பி அவர்களின் பெரு முயற்சியால் தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை ஒன்று நயினாதீவு மகாவித்தியாலயத்தில் நிறுவப்பட்டது. சிரேஷ்டவிரிவுரையாளராக திரு. சோ.தில்லைநாதன் அவர்கள் பொறுப்பேற்று நடத்தினார். ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அதிகாரி வித்துவான் க.குகதாசன் அவர்கள் செல்வி சிவானந்தி கதிரேசு என்போர் விரிவுரையாளராகக் கடமையாற்றினர். பல பட்டதாரி ஆசிரியர்கள் தமது பட்டப்பின் கல்வி டிப்ளோமாக் கற்கையை இந்நிலையத்தின் ஊடாக நிறைவு செய்தனர். 1995இல் யாழ் பெரு நிலப்பரப்புடன் தொடர்புகள் ஏற்பட இந்நிலையம் மூடப்பட்டது. நெருக்கமான மேற்பார்வையும் கட்டமைப்பானதுமான கொத்தணிப் பாடசாலை முறை 1994இல் நீக்கப்பட்டது. தற்போது வேலணைக் கல்விக் கோட்டத்தினதும் தீவகக் கல்வி வலயத்தினதும் மேற்பார்வையில் எமது கிராமத்து பாடசாலைகளின் நிர்வாகம் நடைபெறுகின்றது. 24.11.1996இல் திரு. சோ.தில்லைநாதன் கோட்டக் கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றார்.

1978ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியோரில் 1031 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அவர்களில் 71 மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

நயினாதீவு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழக அனுமதிபெற்ற மாணவர் விபரம்


வருடம் பெயர் (Name) பீடம் (Faculties)
1978த. ஸ்ரீஸ்கந்தராசாகலை
அ. சண்முகதாவர்த்தகம்
1979சு. இளமுருகன், ந. ஜெயசிவதாசன், ந. தர்மகுலசிங்கம் வர்த்தகம்
கு. கனகேஸ்வரன்கலை
1980க. கனகேஸ்வரன்கலை
மு. மகேந்திரன், மு. ரவீந்திரன், ச. மகேஸ்வரன்வர்த்தகம்
1981கே. சுசிலாதேவிகலை
போ. சதாரூபன்முகாமைத்துவம்
1982க. பொ. இ. குலசிங்கம்வர்த்தகம்
ந. ஜெயசண்முகபாமாகலை
1983வே. மகேந்திரராசா, சா. வெற்றிவேற்பிள்ளைகலை
1984ச. இராதாகிருஷணன்வர்த்தகம்
1985க. தவஈஸ்வரிமுகாமைத்துவம்
வீ. அசோகன், சு. வரதன், அ. ரவீந்திரன்கலை
1986சி. கனகசபேசன்,க. ரோகிணிமுகாமைத்துவம்
இ. கமலவதனிவர்த்தகம்
1987ந. வசந்தினிவர்த்தகம்
சா. கலைமகள், கி. கமலவேணி, கி. சிவசக்திகலை
1987இ. சுடர்மதி, சு. சத்தியபாமாகலை
1988ப. நவசக்தி, சு. நாகபூஷணி, அ. நகுலேஸ்வரி, ந. கணேசபாமா, மு. அன்னலட்சுமிகலை
1989த. சசிதரன்கலை
ச. அனுபாமாNil
1990Nil
1991Nil
1992இ. மகேஸ்வரி, P. பிரியதர்ஷனிகலை
1993Nil
1994நா. தயாளசௌந்தரி, சி. வாசன், ப. குகனேசன், ந. தயாளினி, ச. நாகேஸ்வரி, க. கோமதி, பொ. பிரியதர்ஷனிகலை
1995இ. பொன்னம்பலம்,பே. தவேஸ்வரன்கலை
1996சோ. தனலட்சுமிகலை
1997Nil
1998ச. சிவாஜினி, வி. விமலாம்பிகைகலை
1999க. சசிதாகலை
2000Nil
2001த. பாலமுருகன், பா. வினோதினி, கி. தனுவுயன், வி. விஜயவதிகலை
2002இ. கங்கேஸ்வரன், வி. சுதர்சனாகலை
2003ச. நிரஞ்சினி, அ. அருளினி, ப. வேணுகாராணிகலை
2004ப. குகப்பிரியா, பு. ஷர்மிளா, பு. ஜெயபாலன்கலை
2005Nil
2006க. சுஜாதா,ப. சுவர்ணலதா,வி. ஜெயதீபாகலை
2007Nil
2008ம. கினித்தா, சு. சஜிபாகலை
2009Nil
2010ம. வஜிதரன்கலை
2011எதிர்பார்க்கப்படுகின்றது --

25.11.1996 முதல் சொ.பகீரதன் அதிபர் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி வந்தார். விஞ்ஞான கூடத்துக்கருகில் நூலகம் நவீனமயப்படுத்தி G.E.P II திட்டத்தில் 2003 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. செயற்பாட்டு அறை, கணினியறையென்பனவும் திணைக்களத்தால் நிறுவப்பட்டது. விளையாட்டு மைதானத்தின் வடக்கு, மேற்கு, கிழக்குப் பக்க மதில்கள் சுவிஸ்ஸில் இயங்கும் நயினாதீவு அபிவிருத்திக் கழகத்தின் உதவியுடன் கட்டுமான வேலைகள் நடந்தன.

03.05.2010 முதல் திரு.சோ.குகனேசன் அவர்கள் மகா வித்தியாலய அதிபராகவும் திரு. சொ.பகீரதன் அவர்கள் ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய அதிபராகவும் மாற்றம் பெற்று கடமையாற்றி வருகின்றனர்.

மூன்று பாடசாலைகளும் கல்வியிலும் இணைப்பாட விதானச்செயற்பாடுகளிலும் (தமிழ், ஆங்கில தினப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் சாரணியம் போன்றன.) ஒன்றை யொன்று விட்டுக் கொடுக்காது முன்னேறியுள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த(சாஃத), க.பொ.த(உஃத) பரீட்சை என்பனவற்றில் நகரப் பாடசாலைகளுக்கு நிகராகப் பெறுபேறுகளைப் பெற்று வருகின்றன. விளையாட்டுப் போட்டி, தமிழ் மொழித் தினப்போட்டி என்பவற்றில் கோட்ட, வலய, மாவட்ட, மாகாண மட்டங்களில் பலர் வெற்றிபெற்றுள்ளதோடு சிலர் தேசிய மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகியுள்ளனரென்பதையும் குறிப்பிடலாம். சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கித் தந்த பெருமை நயினைப் பாடசாலைகளுக்குண்டு.

இவ்வித்தியாலயங்களில் கல்வியைப் பெற்ற பலர் (பல அமைச்சுக்களின் செயலாளராகப் பணியாற்றிய திரு .ப.க.பரமலிங்கம் திரு. க.சபாபதிப்பிள்ளை, திரு. நா.க.இராசலிங்கம் ஆகியோர் உட்பட) இலங்கை நிர்வாக சேவை உத்தியோ கத்தர்கள், நீதிவான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத் தர்கள், அதிபர்கள், தொழிலதிபர்களென இலங்கையில் மாத்திரமல்லாது உலகெங்கணும் நல்நிலையில் வாழ்கின்றார்களென்றால் அதற்கு வித்திட்ட பெருமை நயினைப் பாடசாலைகளையே சாரும். அதற்காக உழைத்தமதிப்பார்ந்த அதிபர்கள், ஆசிரியப் பெருந்தகைகளை நயினைமக்கள் என்றும் போற்றி நிற்கின்றனர்.

உதவும் உள்ளங்கள்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற எண்ணத்துடன் எம் கிராம மக்கள்தாம் எங்கு வாழ்ந்தாலும் தாய்மண் மீது கொண்ட பற்றுக் காரணமாக நயினாதீவு கல்வி வளர்ச்சிக்கு தம் பங்களிப்பை திறம்பட ஆற்றிவருகின்றனர். கொழும்பு நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கம், சுவிஸ்லாந்து நயினாதீவு அபிவிருத்திக் கழகம், நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச்சங்கம், நயினை மணிமேகலை முன்னேற்றக கழகம், ஐக்கிய இராய்ச்சியம் என்பன பாடசாலையின் தேவைகளை அறிந்து பௌதீக, கற்றல் தேவைகளைநிறைவு செய்வதுடன், மாணவர்களின் நலனோம்பும் செயற்பாடு களிலும், மேலதிக வகுப்புகள் நடத்துவதும் ஆசிரியர்களை, மாணவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் விசேடமாக சித்தியடையும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில், பரிசில் என்பனவற்றை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர். பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பனவும் கிராமத்து மக்களும் பழைய மாணவர்களும் தனிப்பட்ட முறை யிலும் பாடசாலைக்களுக்குஉதவி வழங்கி வருகின்றனர். இவற்றிற்கு மேலாக கல்வித் திணைக்களமும் வேண்டிய கற்றல், கற்பித்தல், பௌதீகத் தேவைகளையும் வழங்கிவருகின்றது. ஆரோக்கியமான பணிகள் நற்பேறுகளை நல்கவல்லன. நல்மனங்கொண்ட அனைவரும் பாராட்டு வதற்கு உரியவர்கள். அவர்கள் பணிகள் தொடரவாழ்த்துவோமாக.

அவசியத் தேவைகள்

புதிய கற்பித்தல் முறைகளுக்கமைய நயினாதீவில் கல்வி சிறந்த முறையில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இடப் பெயர்வின் காரணமாக மாணவர் தொகை தற்போது வேகமாக குறைந்து வருகின்றது. 1980இல் மூன்று பாடசாலைகளினது மாணர்வகளிது மொத்தத் தொகை 1200 ஆகவும் 2010இல் அது 600 ஆகவும் குறைந்துள்ளதை அவதானிக்கலாம். நாட்டின் போர்ச்சூழலும், தமது பிள்ளைகளினது சிறந்த கல்வி நிமித்தம் பெற்றோர் இடம் பெயர்வதும், தொழில் நிமித்தம் இடம்பெயர்வதும் காரணங்களாகலாம்.

நயினாதீவு மகாவித்தியாலயத்தில் தற்போது க.பொ.த உயர்தரத்தில் கலை வகுப்புக்கள் மாத்திரமே நடைபெறுகின்றது. இதனால் மாணவர்களின் திறனுக்கேற்ப உயர் கல்வியை பெறமுடியாதுள்ளது. நயினாதீவு பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்து கணித, விஞ்ஞான, வர்த்தகத் துறைகளில் கற்கவிரும்பும் மாணவர்கள் யாழ் நகர் சென்று தமது கல்வியைத் தொடர்கின்றனர். எமது கிராமத்திலே உயர் கல்வியைக் கற்க ஆவன செய்ய வேண்டும். அதற்குக் கல்வித் திணைக்களமும் பாடசாலை நிர்வாகமும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலக் கல்வி, கணனி கற்கை, தகவல் தொழில்நுட்பக் கல்வி என்பன மேம்படுத்தப்படல் வேண்டும். விளையாட்டு மைதானங்கள் சுற்று மதில் கட்டப்பட்டு சகல விளையாட்டுக்களுக்குமுரிய வசதிகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். இவை உடனடித் தேவைகளில் சில.

நயினாதீவின் கல்வி வளர்ச்சிப் பாதையில் மிக நீண்ட வரலாற்றை என்னால் முடிந்தவரையில் ஆராய்ந்து தந்துள்ளேன். ஊரில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சில முதியவர்கள் வாயிலாகக் கேட்டவையும், பெரியவர்கள் எழுதிய கட்டுரைகளை வாசித்தறிந்தவையும் நயினாதீவுப்பாடசாலை அதிபர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தகவல்களும் இக்கட்டுரை எழுது வதற்கு பெரிதும் துணைபுரிந்தன. வருங்காலச் சந்ததியினர் எமது கிராமத்தின் கல்விப் பாரம்பரியத்தினை அறிய இக்கட்டுரை ஓரளவேனும் உதவும் என நம்பி அமைகின்றேன்.

"ஓங்குக கல்வி"