ஒரு கிராமத்தின் வரலாற்றை ஆராயுமுன் அக்கிராமம் அமைந்துள்ள தேசத்தையும், பெரும் பிரிவையும் ஆராய்வது சாலச் சிறந்ததாகும்.

இலங்கை 'எங்கள் இலங்கையடி பாப்பா' இத்தொடரை முதலாகவுடைய பாடலைப் பலமுறை சொல்லித் தந்தார் எனது பாலர் வகுப்பாசிரியர். அன்று காதுக் கினிக்கும் ஒரு பாடலாகவே எனக்குத் தோன்றியது. ஆனால், வருடந்தோறும் வகுப்புக்களேறின. இலங்கையின் கலைச் செல்வங்களையும், இயற்கை காட்சிகளையும், சரித்திரச் சார்புடைய சின்னங்களையும், நெடுந் தீவிலிருந்து தேவேந்திரமுனை வரையும், கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரையும் காணும் பாக்கியம் எனது ஆசிரிய வாழ்க்கையிலே அநுபவத்தில் நேர்ந்தது. இப்பரந்த உலகில் இலங்கையின் உன்னத ஸ்தானம் எவ்வளவு சிறப்புற்றோங்கி வளர்ந்திருக்கிறதென்பதை இன்று நாம் அறியக் கூடியதாக இருக்கிறது.

இலங்கையை இராவணன் ஆண்டானென வரலாற்று நூல்கள் கூறும், விரசிவசு என்பவனுக்கும், கேகசி என்பவளுக்கும் புத்திரனாகப் பிறந்த இராவணன் இலங்கையை அரசாண்ட மன்னனெனக் கலைக்களஞ்சியம் 2ஆம் தொகுதி 77ஆம் பக்கத்திற் கூறப்படுகிறது. அதே கலைக் களஞ்சியத்தில் இராமன் திரேதாயுகத்தில் இருந்த அரசனெனவும், அக்காலத்திற்றான் வான்மீகி என்ற புலவரும் வாழ்ந்தாரெனவும் சிலரின் அபிப்பிராயம் என்று கூறுகிறது. அதே இராமரே இலங்கைக்கு வந்து இராவணனைப் போரில் வென்று சீதையைச் சிறைமீட்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன. கம்ப இராமாயணம் மிக விரிவாக எடுத்தியம்புகின்றது. ஆகவே, இலங்கை என்ற பெயர் புராதனமான தென்பதற்கையமில்லை. அப்பெயராற் குறிக்கப்படும் இலங்கை தற்போதைய இலங்கைதான் என்பதற்காய காரணங் களையும், வரலாற்றுச் சான்றுகளையும் ஆராய்ந்தால் சீதா பிராட்டியாரின் பெயருடன் இணைப்புடைய தாக சீத்தலவா (சீதைவெளி) சீதால (சீதையருவி) என்ற பெயர்கள் தற்போதும் காணப்படுகின்றன. இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த பாலத்தை இராமரணை என்று கூறுவதினால், இராம இராவண யுத்தம் நடை பெற்றவிடம் இலங்கையெனக் கூறுவதினால், இராமாயணம் கூறும் இலங்கை எமது தாய் நாடே எனத் துணியலாம். அதுவு மன்றி கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் இயற்றப்பட்ட மணிமேகலை என்ற நூலிலும் இலங்கை என்ற சொல்லே எடுத்தாளப்படுகிறது.

மகாவம்சத்திற் கூறப்படும் கால அட்டவணையின்படி கி.பி.2ஆம் நூற்றாண்டில் 1ஆம் கயபாகு வேந்தன் இலங்கையை ஆண்டான். அவன் 'கடல் சூழிலங்கை கயபாகு வேந்தன்' எனச் சிலப்பதிகாரத்தில் அழைக்கப்படுகிறான். ஆகவே, கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இலங்கை யென்ற பெயரிலேயே இத்தீவு இருந்ததென்பதற்குச் சந்தேகமில்லை. ஆயினும், இத்தீவு இரத்தினத் தீபம், ஈழம், மும்முடிச் சோழ மண்டலம், சிங்களத் துவீபம், தாபிரபன, பாலாசிமுண்ட, சாலிக, சலாப தீபம், செறண்டிப், இயக்க தீவு, நாகதீவு எனவும் சிலரால் அழைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்

'எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற முதுமொழிக்கிணங்க இலங்கை இத்துணைச் சிறப்புப் பெற்றி லங்கக் காரணம் எழில் கொண்ட யாழ்ப்பாணம் இலங்கையின் வடபால் அமைந்திருப்பதுதானா என்பது சரித்திர ஆராய்ச்சியாளர்களின் சிந்தனைக்குரிய விருந்தெனவே நான் கருதுகின்றேன். 'யாழ்ப்பாணம் ஒரு பாணனுக்குப் பரிசிலாக வழங்கப்பட்ட ஒரு மணற்றிடர்' எனச் சரித்திராசிரியர்களிற் சிலர் கூறுகின்றனர். 'அவர் பரிசிலாகப் பெற்றவிடம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதுமல்ல. தற்போதைய யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் கரையூர், பாசையூர், பறங்கித் தெரு, பண்ணை முதலிய கடற்கரைப்பிரதே சங்களே என ஒரு சில சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். இலங்கையின் வடபகுதியை முற் காலத்திலேயிருந்து நாகவரசர்கள் ஆண்டார்களெனவும், கந்தரோடை பல நாகவரசர்களது இராசதானியாகவும், நாகதீவு (நயினாதீவு) பல நாகவரசர்களதும், சிற்றரசர்களினதும் இராசதானியாகவும் இருந்தனவென நாம் அறியக்கூடியதாக இருக்கிறது.

கி.மு.563ஆம் ஆண்டு தொடக்கம் கி.மு.483ஆம் ஆண்டு வரை வாழ்ந்த புத்த பெருமான் குலோதரன், மகோதரன் என்னும் நாகவிளவரசர்களுக்கிடையில் ஒரு மணிபதித்த அரச பீடத்தைப் பற்றியேற்பட்ட பிணக்கிற் சமாதானஞ் செய்துள்ளார். ஆகவே, கி.மு.483இன் முன் யாழ்ப்பாணக் குடா நாட்டில் குடிமக்கள் வாழ்ந்தனர். அரசர்களுமிருந்தனர். எல்லாள மன்னன் (கி.மு.2ஆம் நூற்றாண்டு) காலத்தில் அல்லது குலசேகர சிங்கையாரியச் சக்கர வர்த்தி (கி.பி.13ஆம் நூற்றாண்டு) காலத்தில் யாழ்ப்பாடி எனக் கூறப்படும் அந்தக் கவிவீரராக முதலியார் யாழ்ப்பாணத்தைப் பரிசிலாகப் பெற்று, இந்தியாவில் இருந்து சனங்களைக் கொண்டு வந்தார் என்பதும், அவர் மணற்றிடர் என்ற யாழ்ப்பாணக் குடா நாட்டைக் காடு திருத்தி நாடாக்கினாரென்பதும் பொருத்தமுடையதன்று. யாழ்ப்பாடி இந்தியாவில் இருந்து வந்து கி.பி.13ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணக் கரையோரமாக விருந்த
பிரதேசத்தை அரசனிடம் பெற்று, தமது இனத்தவரைக் கொண்டுவந்து குடியேற்றியிருக்கலாம். அக்குடியேற்றம் அவரது பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம். அல்லது 'யாழ்ப்பாணன்' என்று அழைக் கப்பட்டிருக்கலாம். போத்துக்கேயர் காலத்தில் அப்பகுதிகளிற் கோட்டைகள் கட்டப்பட்டன. அவர்கள் யாழ்ப்பாணம் எனத் தங்கள் கோட்டைப் பிரதேசத்தைக் குறிப்பிட்ட சொல்லால் குடாநாடு முழுவதும் யாழ்ப் பாணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. எனவே, யாழ்ப்பாடி வரலாற்று சரித்திர ஆசிரியர்களிற் சிலரால் மிகைப்படுத்திக் கூறப்பட்டதேயெனக் கருத இடமுண்டு. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு என்ற தனிப்பகுதிகள் தற்போது கொழும்பென அழைக்கப்படுவதைக் காண்க.

சப்த தீவுகள்

சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கிரீடங்களை யாக்கி அணிவர். கிரீடமின்றேற் சிறப்பில்லை யல்லவா? இலங்கையின் கிரீடமெனப் போற்றப்படுபவைகள் சப்த தீவுகளே.

நயினாதீவு

சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ் பெற்ற நயினாதீவு யாழ்ப்பாணத்தி லிருந்து தென்மேற்கே ஏறக்குறையப் பதினெண் மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. இத்தீவின் மறுபெயர்களாவன நாகதீவு, நாகத்தீவு, நாகதிவயின, நாக நயினாதீவு, நயினார்தீவு, நாக தீபம், நாகதீப, மணிபல்லவம், மணிபல்லவத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம் என்பனவாம். ஒல்லாந்தர் காலத்தில் ஹார்லெம் என அழைத்தனர்.

நாகதீவு, நாகத்தீவு, நாகதிவயின

நாகதீவு என்ற பெயர் நாகர்களின், குடியிருப்பாலும் நாகவழிபாட்டாலும் நாகங்கள் அதிகமாக வாழ்ந்தமையாலும் ஏற்பட்டதே. சிங்கள மன்னர் இலங்கையை அரசாண்ட காலத்தில் நாகதிவயின என அழைக்கப்பட்டதாக இருக்கலாம். திவயின என்ற சிங்களச் சொல் தீவு என்னும் பொருளுடையது.

நயினார்தீவு

இத்தீவுக்கு வழங்கப்படும் பல பெயர்களுள்ளும் நயினாதீவு என்னும் பெயர் ஆராய்ச்சிக்குரியது. மதுரையில் மாநாய்கன் என்னுமொரு வைசியர் இருந்தாரெனவும், அவரே நயினாதீவு வடகீழ் திசையில் நாகபூஷணிக்கொரு சிறந்த ஆலயம் கட்டவித்தாரெனவும் மதுரை வைசியர் களிடமிருந்த பெற்ற ஏடுகள் கூறுகின்றன. மாநாய்கன் என்னும் வைசியரே நயினார் பட்ட ரென்ற அந்தணரையும், கண்ணப்பன் என்ற வேளாளரையும் நயினாதீவுக்குக் கொண்டு வந்தார். அக்காலத்தில் நாகதீவெனவே வழங்கப்பட்டது. நயினார்பட்டர் அறிவிற் சிறந்தவராகவும், அரசினர் தொடர்புடையவராகவும் வாழ்ந்தபடியால் தனது ஞாபகத்தைப் பிற்காலத்தவரும் நினைக்க விரும்பி நாக நயினாதீவு என மாற்றினார். காலப் போக்கில் நயினார் பட்டரின் செல்வாக்கும், அவர் சந்நிதியாரின் செல்வாக்கும் விருத்தியடைய நாக என்ற சொல்விடப்பட்டு நயினாதீவு என அழைக் கப்படலாயிற்று. இது பற்றியே கொக்குவில் வாக்கிய பஞ்சாங்கத்தில் இன்றும் நயினாதீவு வீரகத்தி விநாயகர், நயினாதீவு நாக பூஷணியம்மை எனக் குறிக்கப்படுகின்றன. நயினார்பட்டரின் 20ஆம் தலை முறையினரான இளையதம்பி உடையார் காலத்தில் பட்டர் மரபினர் நாகபூஷணிக்குப் பூசை செய்வதை விடுத்து அரசாங்க சேவையிற் சேர்ந்தனர். பிற்காலத்தில் பட்டர் மரபினர் செல்வாக்கொழிய நயினாதீவு என்ற சொல்லில் "ர்" விடப்பட்டு நயினாதீவு ஆகியது. இது ஆச்சரியமானதல்ல. இன்றைய இலங்கையில்
வீதிப் பெயர்களும் இடப்பெயர்களும் மாறிவருவதைக் காண்க.

பூந்தோட்டம்

பூந்தோட்டமென்பது புராதன பெயராகும். இந்தியாவிற் சிதம்பரத்தைத் தில்லை யெனவும் அழைப்பர். அங்கேயுள்ள ஆலயங் களுக்குத் தேவையான பூக்களைப் பெறு வதற்காக நயினாதீவுத் தில்லை வெளியில் ஒரு பெரிய பூந்தோட்டமமைக்கப்படடுப் பூக்கள் சிதம் பரத்துக்குக் கொண்டு செல்லப் பட்டன. தில்லைக் கோயிலுக்குத் தேவையான பூந்தோட்டமாகையாற் தில்லைப் பூந்தோட்டமென அழைக்கப்பட்டது. காலப் போக்கில் இந்தியாவிலே தேவையான பூக்கள் கிடைத்தமையால் இத்தோட்டம் கைவிடப் பட்டு பூமரங்கள் அழிந்து, பரந்த சமவெளியாகியபடியால் தில்லை வெளி யென அழைக்கப்படுகிறது. இப்பகுதி தற் போது பிடாரி கோயில் இருக்கின்ற பகுதியாகும். தில்லை வெளி என்னும் காணி தோம்பேட்டில் 200 பரப்புடையதாகக் காணப்படுகிறது. சிதம்பரக் கோயிலின் முற்கால ஏடுகளில் இவ்விபரங்கள் காணப் பட்டதாக அறியக்கிடக்கின்றது. தற்போது நுவரெலியாவில் உற்பத்தியாகின்ற பூக்கள் யாழ்ப்பாணம் வரையும் வருவது போல, முற்காலத்தில் இங்கிருந்து பூக்கள் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

நாகதீபம்

இச்சொல் யாழ்ப்பாணக் குடா நாட்டைக் குறிப்பதாகக் கூறுவர் சிலர். தீபம் என்ற சொல் தீவு என்ற பொருளையுமுடையது. யாழ்ப்பாணக் குடா நாடு ஒரு தீவு அல்ல. அது நான்கு பக்கமும் கடலாற் சூழப்படவில்லை. ஆகவே, நாகதீவே நாக தீபமாகும். நாகதீப - இச்சொல் சிங்களச் சொல்லாக இருக்கலாம். யாழ்ப்பாணம் யாப்பனய என்பது போல நாகதீபம் நாகதீப என அழைக்கப்பட்டுள்ளது.

நாவலந்தீவு, சம்புத்தீவு, நரித்தீவு

சம்பு என்ற சொல், சிவன், நாவல், நாவலந்தீவு, நரி என்பவற்றைக் குறிக்கும். நாவலந்தீவு என்ற சொல்லுக்கு (வுயஅடை டுநஒiஉழn) தமிழ் லெக்ஸிகன் அகராதியில் 2229ஆம் பக்கத்தில் ஏழு தீவுகளில் உப்புக் கடல் சூழ்;ந்த தீவு எனக் குறிக்கப்பட்டிருக்கிறது. சம்பு என்ற சொல் நரியையும் குறிப்ப தினால் சிலர் நரித்தீவு எனச் சம்புத்தீவு என்ற பெயருக்கு மாறான கருத்துக் கொண்டிருக்கலாம்.

மணிபல்லவம்

கலைக்களஞ்சியம் தொகுதி 8இல் ஒரு சிறு தீவு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தெற்கே முப்பது யோசனைத் தொலையில் உள்ளது. அங்கே தன்னைத் தரிசித்தவர்களுக்குப் பழம்பிறப்பின் செய்தியைத் தெரிவிக்கும் புத்தபீடிகையொன்றும், கோமுகி என்னும் பொய்கையும் இருந்தன. மணிமேகலை தன் பழம் பிறப்பை இப்புத்த பீடிகையால் உணர்ந்தாள். அமுதசுரபி என்னும் பாத்திரத்தை தீவதிலகையின் உதவியால் இக் கோமுகியிலே பெற்றாள் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் உள்ள பெயராகும் இது.

மணித்தீவு, மணிநாகதீவு

இப்பெயர்களில் மணி என்ற சொல் நாகரத்தினத்தையே குறிக்கின்றது. நாகரத்தினத்தை வாங்க வந்த வைசியர் களினால் இப்பெயர்கள் அழைக்கப்பட்டதாக மதுரை வைசியர்களது பழைய ஏடுகள் கூறுகின்றன. பிராமணத்தீவு கி.பி.1658ஆம் ஆண்டளவில் எடுக்கப்பட்ட நயினாதீவு குடிசன மதிப்பு பின்வருமாறு:-

பார்ப்பார் - புரோகித வேலை செய்வோர் குடி : 2
பார்ப்பார் - புரோகிதர் அல்லாதவர் குடி : 65
வேளாளர் குடி : 40
பரதவர் குடி : 15
கொல்லர் 10 தச்சர் குடி : 3
அம்பட்டர் குடி : 3
வண்ணார் குடி : 2
தோப்பேறிய நளவர் குடி : 13
பறையர் குடி : 7
:150

ஆகவே, பிராமணக்குடிகள் 67, குடிமக்களில் பெரும்பான்மையோரின் பெயராற் பிராமணத் தீவு என அழைக்கப்பட்டது.

நாகேஸ்வரம்

முற்காலத்தில் நயினாதீவில் இறைவன் சந்நிதியும், இறைவி சந்நிதியும் ஒரே ஆலயத்தில் வௌ;வேறாக இருந்தன. அப்பனும் அம்மையும் கோயில் கொண்டருளி இருந்த ஆலயமே நாகேஸ்வரமென அழைக்கப்பட்டது. அவ்வாலயப் பேரே ஊர்ப்பெயராக வழங்கி வந்திருக்கிறது.

நயினாதீவு, பிறநாட்டார் தொடர்பும்

நயினாதீவிற் சிறந்த துறைமுகங்களும், யாத்திரைத் தலங்களும் இருந்தமையால் பல வெளிநாட்டு வணிகர்களும், பல வெளிநாட்டு யாத்திரிகர்களும் காலத்துக்குக் காலம் இத்தீவைத் தரிசித்தனர்.

புத்தர் பெருமான் கி.மு.523இற்கும் கி.மு.483 இற்குமிடையில் தமது யாத்திரை காரணமாக நாகதீவைத் தரிசித்து நாக வழிபாடியற்றியிருக்க வேண்டும். அவர் வந்தபோது ஏற்பட்ட அரச சபைப் பிணக்கையும் தீர்த்து வைத்துள்ளார். சாவக நாட்டு மன்னன் புத்தரது பாதபீடிகையைத் தரிசிக்க மரக்கல மேறி வந்தனனென மணிமேகலை கூறும், பர்மாவில் இருந்து தர்மசோக மகா ராசா புத்திரசோகத்தால் வருந்தி நாக வழிபாடியற்றிப் புத்திரப் பேறடைய நாகதீவு வந்தாரென அறியக்கிடக்கிறது.

பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனன் நாகவழிபாடியற்ற மணிபுரத்துக்கு வந்த நாககன்னிகையை மணஞ்செய்து பப்பிர வாகன் என்னும் புத்திரனைப் பெற்றானெனவும், பப்பிரவாகனது பெயரே பப்பிரவாகன் சல்லியென ஸ்ரீ நாகபூஷணி ஆலயம் அமைந்த விடமென அறியக் கிடக்கின்றத. ஆபுத்திரன் வந்த அட்சயபாத்திரமெனும் அமுத சுரபியைக் கோமுகிப் பொய்கையிலிட்டுச் சென்றான்.

நெடுமுடிக்கிள்ளி என்னும் சோழவரசன் யாத்திரை காரணமாக மணிபல்லவத்துக்கு வந்து பீலிவளை என்பாளை மணந்து அதன் பேறாகத் தொண்டைமான் இளந்திரயனைப் பெற்றானென யாழ்ப்பாணச் சரித்திர நூல் கூறும்.

நயினாதீவில் கிரேக்க, உரோம, இந்திய, சீனப் பழைய நாணயங்கள் காலத்துக்குக் காலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவிற் கி.பி.12ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்ட சாடிகள் நயினாதீவு கிணறு ஒன்றிற் கண்டுபிடிக்கப்பட்டன. மகாபராக்கிரமபாகுவின் சிலசாசனப்படி அநேக வெளிநாட்டுப் பிரயாணக் கப்பல்களும், வணிகக் கப்பல்களும் நயினாதீவு துறைமுகங்களுக்கு வந்துள்ளன.

போர்த்துக்கேயர் காலம்

போர்த்துக்கேயர் வருகை நயினா தீவுக்குப் பெரும் நட்டத்தையே விளைவித்திருக்கிறது. நாகபூஷணியம்மன் கோயில் முற்றாக அழிக்கப்பட்டது.பொருள்கள் சூறை யாடப்பட்டன. இக்காலம் கி.பி.1620 இற்கும் கி.பி1624இற்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம். கி.பி.1623இல் பறங்கியரால் காணித் தோம்பேடுகள் எழுதப்பட்டதாகக் கருத இடமுண்டு. ஆனால் கி.பி.1645இல் தொம் பிலிப்மஸ்கறிஞ்ஞா அவர்களால் திருத்தமான தோம்பேடுகள் எழுதப்பட்டன. அக்காலத்தில் நயினாதீவில் நிரந்தரக் குடிபதிகளாகவிருந்தவர்களுக்குத் தான் நயினாதீவுத் தோம்பேடுகளில் காணிகள் காணப்படுகின்றன. போர்த்துக்கேயரது சமயம் இங்கே பரவவில்லை. ஆனால், இவர்கள் தங்கள் பெயர்களிற் சிலவற்றைப் பட்டமாகச் சிலருக்குக் கொடுத்துள்ளனர். கந்த உடையார் மகன் கதிர்காம உடையார் உலுவீசு கதிர்காம உடையார் என அழைக்கப்பட்டுள்ளார். நயினாதீவு 32 கோயிற் பற்றில் ஒன்றாக்கப்பட்டது.

ஒல்லாந்தர் காலம்

ஒல்லாந்தர் காலத்தில் நயினாதீவுக் கடலில் சங்கு குளித்தற் தொழில் மிக விசேடம் பெற்றுள்ளது. அவர்கள் காலத்தில் நயினாதீவு கோவிற் பற்று நொத்தாராகவும், கிராம வரி அறவிடுபவராகவும் இராமச் சந்திரர் கதிரித்தம்பி நியமிக்கப்பட்டார். போத்துக்கேயர் அழித்த கோயில் திரும்பச் சிறிதாகக் கட்டப்பட்டிருந்தது. அதையே ஒல்லாந்தர் அழிக்கமுற்பட்டனர். கட்டிய காலம் கி.பி.1788. கட்டுவித்தவர். இராமலிங்கர் இராமச்சந்திரர். இவர்காலத்தில் கி.பி.1792இல் ஒல்லாந்தர் நாகபூஷணியம்மன் தேவாலயத்தை அழித்துச் சூறையாட வந்தனரெனவும், அவர் தான் ஒல்லாந்த இறப்பிறமாது சமயத்துக்கு உதவி செய்வதாகவும் கூறி கிராமவரியையும் அறவிட்டுக் கொடுத்தார். ஒல்லாந்தர் தமது பட்டத்தை இவருக்கு வழங்கிப் பிறான்சீக் கதிரித்தம்பி என அழைத்தனர். இவரது கையொப்பங்கள் எல்லாம் யாழ்ப்பாணக் காணிக் கக்தோரில் பிறன்சீக் கதிரித்தம்பி எனவே அமைந்துள்ளன. இறப்பிறமாது சமயமே புரட்டாஸ் தாந்து மதமாகும். ஒல்லாந்தர் காலத்திற் தான் நயினாதீவில் புரட்டாஸ்தாந்து மதத்துக்குரிய ஒரு நிலையத்தை அமைக்கவிரும் பினார்களோ யான் அறியேன். ஆனால், தற்போது ஒரு இடம் நயினாதீவு 5ஆம் வட்டாரத்தில் இருக்கிறது. ஆயினும், தற்போது அச்சமயத்தைப் பின்பற்று வபரெவருமில்லை. இவர்கள் காலத்திற் தான் தூத்துக் குடி முஸ்லிங்கள் நயினாதீவில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். தென்னந் தோட்டங்கள் அமைத்தனர். பள்ளிவாசல் ஒன்றையுமமைத்தனர் எனத் துணிந்து கூறலாம்.

ஆங்கிலேயர் காலம்

2-3-1815இல் தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்தது. நயினாதீவு வடமாகாணத்தில் யாழ்ப்பாணப் பெரும்பிரிவில் தீவுப்பகுதி மணியகாரனின் நிர்வாகத்தின் கீழ் ஒரு பகுதியாக அமைந்தது. பரிபாலனத்துக்காக உடையாரும் விதானையாரும் நியமிக்கப்பட்டனர். பிற்காலத்தில் மணியகாரன் முறை மாற்றமடைந்து தீவுப்பகுதிக் காரியாதி காரியின் கீழ் நிர்வாகம் மாறியது. விதானையென்ற ஒரு தலைமையின் கீழ் பொதுமக்களது விவகாரங்களும் அரசினரின் விவகாரங்களும்
அமைந்தன. கிராமச் சங்க முறை உருவாகியது. மக்களாற் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கிராமச் சீர்திருத்தங்களில் ஈடுபட்டனர்.

சுதந்திர காலம்

4-2-1948இல் இலங்கை சுதந்திர மடைந்தவுடன் நயினாதீவு தீவிரமாக முன் னேற்றமடைந்தது. ஸ்ரீநாகபூஷணி அம்மன் தேவாலயமும், ஸ்ரீநாக விகாரையும் மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டன. தற்போதைய காலத்தில் நிகழ்ந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிகள் ஸ்ரீநாகபூஷணியம்மனின் திருத்தேர் அமைப்பும், நயினாதீவு யாத்திரிகர் அன்னதான சபையாரின் அமுதசுரபி மண்டபமுமாம்.

இன்றுவரை நயினாதீவு தனது கடந்த காலச் சரித்திரத்தை நினைவூட்டித் தனது எதிர்காலச் சரித்திரத்தை மிகச் செழிப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

நயினாபட்டர்

இவர் காலம் கி.பி.3ஆம் நூற்றாண்டெனக் கொள்ளலாம். நாகபூஷணி அம்பாளின் பூசை செய்வதற்காக மாநாய்கன் என்னும் வணிகராற் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வரவழைக்கப்பட்டார். பட்டர் மரபிற் பல வருணங்கள் உண்டு. அவையாவன: சம்பந்தப்பட்டர், வையக்கரைப்பட்டர், பிள்ளையார்பட்டர், அத்தியயனப்பட்டர், பாம்புக்குட்டிப்பட்டர் என ஐம்பெரும் பிரிவாம். நயினார்பட்டர் பாம்புக்குட்டிப் பட்டரின் மரபினராகும். பட்டர் என்றால் அம்பட்டரென நினைத்து நயினாதீவில் அம்பட்டர்களும் வாழ்ந்தார்களெனக் கூறுவது முரணான தாகும். நயினார்பட்டரின் 20ஆம் சந்ததியினரான இளைதம்பி உடையாரே பட்டர் மரபிலுள்ள ஸ்ரீநாகபூஷணி பூசை செய்த கடைசி அருச்சகராவார். நயினார் பட்டர் குடியிருந்த காணியே தற்போது 7ஆம் வட்டாரத்தில் பட்டர்வளவு என அழைக்கப்படுகிறது. தற்காலம் அக்காணியில் திரு.வி.எஸ்.நாகலிங்கம் அவர்கள் இருக்கிறார்கள். நயினார்பட்டரின் மரபினரான மதுரை விநாயகபட்டரின் சந்ததியாரே தற்கால நயினாதீவு ஸ்ரீவீரகத்தி விநாயகராலயம் பிரதம குரு சாம்பசிவக் குருக்களின் வம்சாவழியினராகும்.

வெடியரசன் - மீகாமன்

கி.பி.2ஆம் நூற்றாண்டில் வெடியரசன் என்னுமரசன் தீவுப்பகுதிகளை அரசாண்டான். அவனது மனைவி நீலகேசி. அக் காலத்திற் கண்ணகியின் காற்சிலம்புக்குத் தேவையான நாகரத்தினம் வாங்க மீகாமன் என்னும் வணிகனொருவன் சோழ வரசனின் உத்தரவு பெற்று இன்னும் பல வணிகர்களுடனும் வேலையாட்களுடனும் நயினாதீவை நோக்கி வந்தான்.

வெடியரசனின் இராசதானி நெடுந்தீவு. வெடியரசனின் இராசப்பிரதிநிதிகளில் ஒருவன் நயினாதீவில் இருந்தான். அவன் மீகாமனை நயினாதீவில் இறங்க விடாமற் தடுத்து அவனது வரவை வெடியரசனுக்கு அறிவித்தான். மீகாமன் வெடியரசன் சமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டான். மீகாமன் நாகரத்தினம் வாங்கவந்ததாகக் கூறியும் வெடியரசன் கோபத்துடன் மீகாமனுடன் சண்டை செய்தான். போர் நடப்பதாக எண்ணிய நீலகேசி தனது மைத்துனருள் ஒருவரான விரநாராயண தேவனுக்கு விடயத்தைத் தெரிவிக்க அவன் வந்து ஆராய்ந்து விடயத்தை அறியாமல் மீகாமனுடன் சண்டை செய்தான். அச்சண்டையில் வீரநாராயணன் மடிகின்றான்.

வெடியரசனின் ஏனைய சகோதரர்களான விளங்கு தேவன், போர்வீரகண்டன், ஏரிலங் குருவன் ஆகிய மூவரும் தத்தம் சேனையுடன் வந்து மீகாமனுடன் சண்டை செய்கின்றனர். மீகாமன் சரணடைகின்றான். மீகாமனை வெடியரசனின் முன்கொண்டு செல்ல அவன் தான் வந்த நோக்கம் நாகரத்தினம் பெறவேயென்றும், நாட்டைப்பிடிக்கவல்லவென்றும் கூறுகிறான். வேண்டிய பெறுமதியைப்பெற்றுக் கொண்டு மீகாமனுக்கு நாகரத்தினகத்தைக் கொடுங்கள் என வெடியரசன் கூறத் தம்பியார் அப்படியே செய்கின்றனர். மீகாமன் சோழ நாடு சென்றடைகின்றான். இச் சம்பவம் மிகைப்படுத்திக் கூறப்பட்ட தாகக் கருத இடமுண்டெனினும் முற்காலத்தில் பண்டமாற்று முறையில் வியாபாரக் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றதென்பதை வணிக நூல்கள் வற்புறுத்திக் கூறியுள்ளன. இக்காலத்திற் கூட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வியாபார நோக்கமாகப் பலர் வருவதையும், இங்கிருந்து போவதையும் தடுக்க இலங்கை அரசினர் முயலுவதைப் போல வெடியரசனும் தனது நாட்டில் அந்நியர் அத்துமீறிப் பிரவேசிப்பதைத் தடுத்திருக்கலாம்.

பாம்பு - சுற்றியகல் - கருடன்கல்

முன்னொரு காலத்தில் நயினாதீவிலுள்ள அம்பிகையை ஒரு நாகம் பூசித்து வந்ததாம். ஒரு நாள் அந்நாகம் அர்ச்சனை செய்தற்பொருட்டுப் பூவொன்றை வாயில் வைத்துக்கொண்டு புளியந்தீவிலிருந்து நயினாதீவு நோக்கிக் கடலில் வரும்வழியில், ஒரு கருடன் அதனைக் கொல்லும் பொருட்டு எதிர்த்து வந்தது. கருடனைக் கண்டஞ்சிய நாகம் கடற்கரைக்குச் சமீபத்திலிருந்த கல்லொன்றினைச் சுற்றிக்கொண்டது. கருடன் அந்நாகத்தைக் கொல்லாமலும் அதனை விட்டகலாமலும் அதற்கெதிரேயிருந்த கல்லொன்றின் மீதிருந்தது. அவ் வேளையில் அக்கடல் வழியாக மரக்கலத்திற் சென்ற மாநாய்கன் என்ற வைசியன், அந்நாகத்தின் பயத்தை யறிந்ததுமன்றி, அதன் வாயில் ஒரு பூவைத்திருப்பதையு முணர்ந்து, கருடனைப் பார்த்து தேவி பூசைக்குச் செல்லும் நாகத்தை மறியாதே எனக் கூறினான். உடனே கருடன் உனது செல்வத்தைக் கொண்டு வந்து நாகம்மாளுக்குக் கொடுப்பாயாயின் நான் விலகு வேன் எனக்கூறியது. வணிகன் உடன்படக் கருடன் விலகியது. நாகம் தனது நன்றி யுணர்ச்சியைத் தெரிவித்து நயினாதீவையடைந்தது.

வணிகன் தனது நாட்டுக்குச் சென்று மனைவிக்கு நடந்தவற்றைக் கூறினான். அன்றிரவு இருவரும் நித்திரை கொள்ளும் போது ஒரு பேரொளி தோன்றி அவர்களது கண்களைக் கூச வைத்தது. அவர்கள் எழும்பிப் பார்த்தபோது நாகரத்தினங்களைக் கண்டுவியப்புற்று நயினாதீவுக்கு வந்து தீவின் வடகீழ்திசையில் ஏழுவீதிகளும், இராசகோபுரமும் அமைந்த ஒரு பெரிய ஆலயமும் கட்டுவித்தனர். பாம்பு சுற்றியகல் பாம்புசுற்றிக் கல்லெனவும், கருடன் இருந்த கல் கருடன் கல்லெனவும் அழைக்கப்படுகின்றன.

வீராசாமிச் செட்டியார்

இவர் நாகபூஷணி தேவாலயத்தை அமைப்பித்த மாநாய்கரது நான்காம் சந்ததி யாரென நாகதுவீப மகத்துவம் என்னும் நூல் கூறும்.

இவர் வியாபார நோக்கமாகப் பிரயாணஞ் செய்யும் காலங்களில் நாகபூஷணி யம்பாளையும் தரிசிப்பது வழக்கம். இவருக்கு அம்பாள் ஐந்து தலை நாகபடத்தின் கீழ் நாகேந்திரனாகக் காட்சியளித்தாள். அப்போது பின்வரும் பாடலை அவர் பாடியுள்ளார்.

அண்டகோடிக ளெல்லா மொரு தலையில்
   நீ சுமந்தரு ளிதலினா லல்லவோ
அம்புயப் பிரமன் படைக்கத் தொடங்கினான்
   அகிலமும் சிதைவிலாமல்
புண்ட ரீகலோசன் பாதுகாக்கின்றான்
   புராந்தகன் சங்கரித்துப்
புகழ் மருவுகின்றான் இணங்கி நீ
   தயைசெய்து
அருள் புரியாதிருந்தனை யெனில்
   எண்டிசைகளும் புவியுங்கிரிகளும்
எப்படி நிலைத்திருக்கும்
   எவ்விதத்தினில் அந்த மூவர் தொழிலீ
டேறு மீசனரவிந்த பாதத்
   தொண்டர் கணிறைந்திடு மிலங்கை
நயினார்தீவு துதிசெய்யும் படியமர்ந்தோய்
   சுரலோக லோகேந்திர நரலோக
புவனேந்திரர்
   தொழவேறு நாகேந்திரனே.

அக்காட்சியைக் கண்ட வீராசாமிச் செட்டியாரும் தனது பணத்தைக் கொண்டு கோயிற் திருப்பணிகளைச் செய்வித்துள்ளார்.

நயினாதீவுக் குடி

நாகர் வாழ்ந்த காலத்திலிருந்தே நயினாதீவில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஏறக்குறையப் பதினாலாயிரம் வருடங்களுக்கு முன்பே நயினாதீவில் குடியேற்ற மிருந்திருக்க வேண்டும். அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட நாகபூஷணியம்மன் மூலஸ் தானத்திலுள்ள நாகம் பதினாலாயிரம் வருடங்களுக்கு மேற்பட்டதெனக் கட்டிடக் கலை, சிற்பக்கலைப் பொறியியல் நிபுண ரான திரு.எம்.நரசிம்மன் அவர்கள் கருது கிறார். ஆகவே, நாகர் குடியேற்றம் பதினாலாயிரம் வருடங்களுக்கு முன்னெனக் கருதலாம். மக்களில்லாமல் வழிபாடு இருந்திருக்க முடியாது.

கி.மு.563இற் பிறந்து கி.மு.483ஆம் ஆண்டிற்கிடையில் வாழ்ந்த புத்தபெருமான் குலோதரன் மகோதரன் என்பவர்களது அரசபீடச் சண்டையில் சமாதானஞ் செய்திருக்கிறார். புத்தர் பெருமான் தனது 35ஆம் வயதில் இருந்து 80ஆம் வயது வரை யாத்திரைகளிலும், தர்ம உபதேசங் களிலும், பஞ்சசீலக் கொள்கைகளைப் பரப்புவதிலும் தனது காலத்தைச் செலவிட்டுள்ளார்.

அவர் சரித்திர காலந்தொட்டேற்பட்ட நாகவழி பாட்டை ஆராய்வதற்காகவும், அதைத்தாமும் வழி படுவதற்காகவுமே நாகதீவுக்கு வந்திருக்கிறார். அப்போது தான் குலோதரன், மகோதரன் என்ற அரசர் களுக்கிடையே ஏற்பட்ட அரசபீடத்தகராறிற் சமாதானஞ் செய்துள்ளார். அப்போது அரசர்கள் வாழ்ந்தார்களென்றாற் குடிமக்கள் இருந்தேயாக வேண்டும்.

மணிமேகலை, மணிமேகலா தெய்வத்தால், மணிபல்லவத்துக்குக் கொண்டுவரப் பட்டாளென மணிமேகலையென்ற நூல் கூறும், மணிமேகலையின் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு, சீத்தலைச் சாத்தனார் என்னும் பெரும் புலவரே மணிமேகலை யென்ற நூலின் ஆசிரியராவார். அவர் கடைச்சங்க காலப்புலவர், சேரன் செங்குட்டுவன் என்ற பேரரசனின் சிறந்த நண்பர். மலைவளங் காணச் சென்ற சேரன் செங் குட்டுவனுக்கு கண்ணகியால் மதுரை யடைந்த கேவல நிலையை விளக்கினார். சேரன் செங்குட்டுவன் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டெனக் கலைக்களஞ்சியம் 5ஆம் தொகுதி எடுத்தியம்புகின்றது. ஆகவே மணிமேகலை மணிபல்லவத்துக்கு வந்த காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டெனவே கூறலாம்.

ஒரு விவாகமாகாத கன்னிகையைத் தற்பாது காப்பின் பொருட்டும், கடவுள் வழிபாட்டின் பொருட்டும் கொண்டுவந்து விடுவதாயின் சான்றோர் குடியிருக்கும் தொல்பதிகளையே தெய்வங்களும் விரும் பும். ஆகவே, மணிமேகலை காலத்தில் கி.பி.2ஆம் நூற்றாண்டிற் சான்றோர் குடியிருக்கும் தொல்பதியாக மணிபல்லவ மிருந்திருக்கிறது.

கி.பி.3ஆம் நூற்றாண்டளவில் நயினார் பட்டருடன் அவரின் இனசனங்களும் மனைவி மக்களும் வந்திருக்கவேண்டும். ஒரு பிராமணக் குடும்பம் குடியேறினால் அவரோடு இன்னும் பலர் வருவது இயற்கையே. அதன் காரணமாகவே பிற்காலத்தில் பிராமணக் குடும்பம் 67 இருந்திருக்கிறது. பிராமணத்தீவு என்றும் அழைக்கப்பட்டது. நயினார் பட்டருடன் கண்ணப்பன் என்ற வேளாளன் பிரபுவும் வந்துள்ளார். அவருடன் அவர் மனைவி, பிள்ளைகள், இனசனங்களும் வந்திருக்க வேண்டும். அவர்களும் நயினாதீவில் குடியேறி இருக்கிறார்கள். கண்ணப்பனால் கட்டுவிக்கப்பட்ட கோவிலே நயினாதீவு சிறு சல்லி என்னும் காணியின் வட கரையோரத்தில் இருக்கும் ஐயனார் கோயிலாம். அது ஓலையால் வேயப்பட்டுக் காலகிரமத்தில் திருத்தப்பட்டது.

மரக்கலமோட்டிய மங்கை தையலியாசி

நயினாதீவு குடியேற்றப் பிரிவிலும், பரிபாலப் பிரிவிலும், வர்த்தகப் பிரிவிலும் அதிக அக்கறை கொண்டவர் சிற்றரசி தையலியாசியாவர். இவரது காலம் கி.பி.16ஆம் நூற்றாண்டெனலாம். இவர் முடிநாகர் மரபிற் பிறந்தவரென அறியக்கிடக் கின்றது. இவரது கணவன் இராமகிருட்டின முதலியார் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர். இவர்கள் குடியிருந்த காணி ஆசியான் பத்தி என அழைக்கப்படுகிறது. நயினாதீவு 4ஆம் வட்டாரத்தில் இக்காணி இருக்கிறது. இதில் இப்போது வீடில்லை.

தையலியாசி முத்துக் குளிப்பித்தலிலும், உள்நாட்டு - வெளிநாட்டு வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இவரது மரக்கலங்கள் கட்டிய துறைகளே தற்காலம் உவான்துறை, துடரித்துறை, வாகையடித் துறை, படகுதுறை என அழைக்கப்படுகின்றன.

இவரது மரக்கலங்கள் இந்தியாவின் அக்காலப் பிரபல துறைமுகங்களான காவிரிப்பூம் பட்டினம், பாசிப்பட்டினம், புதுப் பட்டினம், நாகப்பட்டினம், அம்மாபட்டினம் முதலிய இடங்களுக்குச் சென்று ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்திற் பெரும் பொருளீட்டின.

இவரது மரக்கலமொன்று புதுப் பட்டணத்தில் இருந்து ஒரு மணத்தம்பதி களையும், அவரது இனபந்துக்களையும் ஏற்றிக் கொண்டு நாக பட்டினத்துக்குச் சென்றது. நாகப்பட்டினத்தின் துறை முகத்தில் மந்தாசு பரிசீலனை செய்பவனாகிய நயினான்துலுக்கன் என்பவன் மந்தாசின்றி மணமக்களை ஏற்றிவந்தது தவறெனக் கூறி மாலுமியிடம் குற்றப்பணம் கேட்டான். மாலுமி பணங் கொடுக்க மறுக்க, நயினான் துலுக்கன் மரக்கலத்தைப் பறிமுதலாக்கினான். இச்சம்பவம் மாலுமி மூலம் தையலியாசிக்கு அறிவிக்கப்பட்டது. தையல யாசி உடனே இந்தியா சென்று அப்போதிருந்த அரசனிடம் பின்வரும் பாடலைப் பாடிக் கொடுத்தான்.

செய்யுள்
பொட்டுப் பொடுக்கெனப் புதுத்தாலி கட்டிப்
   புதுப்பட்டணத்தான்
வட்டம் பிடித்து வருத்தோணி தன்னை
   வழிமறித்துக்
கட்டி நங்கூரமதிட்டு மந்தாசினைக்
   காட்டுமென்று
தட்டிப் பணம் பறிப்பான் நயினான் துலுக்கன்
   சதிகொடிதே.

உடனே அரசன் தையலியாசியின் மரக் கலத்தைக் கொடுக்குமாறு நயினான் துலுக் கனுக்குக் கட்டளையிட்டான். அரசன் பெண்களது உற்சாகத்தைக் கண்டு மேலும் அவர்களைக் கடல் கடந்து வியாபராஞ் செய்ய ஊக்குவித்தான் போலும்.

தையலியாசியின் முதலாம் மகன் தியாகுடையராகவும், இரண்டாம் மகன் சுந்தரமுதலி நயினாதீவு முதல் முதலி யாராகவும் நியமிக்கப்பட்டனர். இது கி.பி.1675ஆம் ஆண்டு வரையி லாகும். முதலியாரின் கடமைகள் பின்வருமாறு:- தத்தம் பிரிவுகளில் நடக்கும் சங்கதிகளை விசாரித்துக் காலத்துக்குக் காலம் அறிக்கைப் பத்திரம் அனுப்புவதும், அந்தப் பிரிவுகளில் எவ்வேலைகள் நடாத்த வேண்டுமோ அவற்றை நடாத்துவித்தலுமேயாம்.

கி.பி.1658இல் தையலியாசி காலத்தில் நயினாதீவு குடிசனக் கணக்குப் பின்வருமாறு. இதைத் தையலியாசி பாட்டாகப் பாடிவைத்திருக்கிறார்.

பார்ப்பாரிற் புரோகிதரிற் குடியிரண்டு
   அதிற் பதிந்த குடிபார்ப்பாராய்
    அறுபத்தைந்து
காப்பானவேளாளர் குடி ஐ யெட்
   கடற் பிழைக்கும் பரதவர் குடிமூவைத்து
கோப்பான கொல்லர் தச்சர் குடியோர் மூன்று
   ஈங்கொல்லி குடி மூன்று ஏனாதி
   குடியிரண்டு
தோப்பேறிகுடி பதின்மூன்று அந்நியர்குடி யேழு
   தொகை நயினை நகர்க்குடி
நூற்றைம்பதாமே.

இக்குடிகளில் பிராமணக் குடிகள் 67 இருந்ததைக் காண்க. ஆகவே, ஆதியில் இருந்து வேதியர்கள் பரம்பரையாக, குடி மக்களில் அதிகமானவர்களாக இருந்தார்களென்பதும், இத்தையலியாசி, முடிநாகரும் நயினார் பட்டர் சந்ததியும் கலந்த பெற்றோருடைய மகளெனவும் அறியக் கிடக்கின்றது. அதிற் பதிந்த குடிபார்ப் பாராய் அறுபத்தைந்து என்ற சொற்றொடர் நாக - பட்டர் இனக்கலப்பால் ஏற்பட்ட தெனச் சோதிட கலாநிதி சு.ஐயாத்துரை அவர்களின் கருத்தாகும்.

தையலியாசி தனது மகன் சுந்தர முதலியின், முதலிப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையில் நயினாதீவு குடி மக்களை இவ்வாறு பரிபாலனஞ் செய் எனச் செய்யுள் மூலம் விளக்குகின்றாள்.

செய்யுட்கள்
1. வண்ணானைப் பணிகுறையில்
   வருத்ததன்றிக்
கண்ணென நீ மதி அம்பட்டக்
   கண்ணானை முதல் மகனாய்க் கருது
நலம் கூறாதே கம்மாளர்க் கோர்
   பண்ணான பரிவு கொடை முகமலர்ச்சி
செய் பணிக்குப் பழுதுண்டாயின்
   எண்ணாது அவருறவிற் கூறுசெய்
வழிதேடு இணங்கு வாரே.

2. வடசிறையை வருத்தாது தொழில்
   செய்வி மங்கையரை மானபங்கம்
தொட நினைவு செய்யாதே படையாச்சி
   மக்களை நீ துணையாகக் கொள்ளு
அடைவுள நம்பரதேசிக் கவதிசெய
    நினையாதே அங்காமாலைப் புடைவியுளார்
அனுதினமும் நமது பணி
   குறையாது பொருளே சேர்ப்பர்.

3. வடசிறை கோவியமே பரதேசி
   இடமுளங்காமாலை வேளாளர்
இந்நெடுந்தீவு மென்பார்
   படவுதுறைய ரோரங்காடி
பாம்பனிடையரொடு
   திடமுள கண்ணப்பன் மேவிந்த
ஊர்வகை தேர்ந்தறியே.

4. மடப்பளியாற் கிதமுரைநீ மட்டுவாள்
   தனிலிருந்த வந்தபேர்க்கு
நடப்போதும் செய்யாதேயுனை மதியார்
   பாம்பன் நகர் வாசிகட்கோர்
இடுக்கணும் செய்யாதே இவர்
    கொலைக்கஞ்சா
எயினர், இந்நெடுந்தீவு
   அடுத்தவரை ஆதரவு செய்து முதல்
வேளாளர்க் கமைச்சு மீய்வாய்.

5. அமைச்சியலும் வேளாளன் அங்காடி
   குலம்புன்கை சேர்ந்து பண்ணைக்
கமச் செயலாற்றிருந்திடினும் எம்மூரில்
   அவன் குலமே கலப்பை பூட்ட
எமக்குமது உவப்பாகுமென்மகனே
   சுந்தர நீ இராச வாட்கை
நமக்குள தென்றெண்ணாதே யூர்
   நாகாயீஸ்வரிக்கென்று நம்புவாயே.

இப்பாடல்க்ள செய்யுட்களுக்குரிய இலக்கணம் அமையாத போதிலும் தையலியாசியின் கல்வி மேம்பாட்டையும் நேர்மை, நீதி, அரசியற் கொள்கை என்பவற்றையும் எடுத்துக்காட்டுகின்றன.

நயினாதீவுப் பிராமணர்

தற்காலத்திலுள்ள நயினாதீவுப் பிராமண மரபினர் கி.பி.1808இல் இராமச்சந்திரர் கதிரித்தம்பி நொத்தாரினால் நயினாதீவு நாகபூஷணி தேவஸ்தான நித்திய பூசைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

வேளாளர்

காலத்துக்குக் காலம் விவாகங்காரணமாகப் புங்குடுதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுதுமட்டுவாள், முகமாலை முதலிய இடங்களில் இருந்தும் பலர் வந்திருக்கின்றனர். இவர்களும், தையலியாசி காலத்தில் இருந்த 40 குடும்பங்களும், பார்ப்பாராய் இருந்த 67 குடும்பங்களும் ஒன்றோடொன்று விவாகக் கலப்பினால் இணைந்து இன்று வாழ்கின்றனர்.

பரதவர்

இங்கேயுள்ள பரதவ குடும்பங்களில் 15 குடும்பத்தினர் தையலியாசி காலத்தவராயினும் பிற்காலம் உலுவீசு கதிர்காம உடையார் காலத்தில் கி.பி.1680 வரையில் உடையாராற் செங்கூக நகரியிலிருந்து கூட்டி வந்த குடும்பத்தினரும் இருக்கின்றனர்.

ஆசாரிமார்

தற்போதைய ஆசாரிமார்களில் மூன்று குடும்பத்தினர் தையலியாசி காலத்தவர். பிற் காலத்தில் இராமலிங்கர் இராமச்சந்திராலும் உலுவீசு கதிர்காமவுடையாராலும் கொண்டு வரப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

படையாச்சி மக்கள்

இவர்களில் நயினாதீவு வடக்கில் இருப்பவர் களிலனேகர் கி.பி.1670 வரையில் படகுதுறையில் வந்திறங்கிக் குடியேறிய மக்களாவர். தெற்கில் இருப்பவர்கள் வேட்ட மங்கலத்தில் இருந்து உலுவீசு கதிர்காம உடையாராற் கொண்டுவரப்பட்டவர்களே. இவர்களிற் சிலர் இஸ்லாம் மதத்தையும் தழுவியுள்ளார்கள்.

சலவைத் தொழிலாளிகள், சிகையலங்காரத் தொழிலாளிகள்

இவர்கள் தையலியாசி காலத்தவரே. மண வினையின் காரணமாகப் பலவூர்த் தொடர்புடை யவர்களாக இருக்கிறார்கள்.

பறையர்

தையலியாசி காலத்தில் ஏழு குடும்பங்களே இருந்தனர். ஆனால், பிற்காலத்தில் இனையாச்சி இராமசந்திர உடையார், கதிரித்தம்பி நொத்தார், மணியகாரன் விஸ்வநாதன், கதிர்காம உடையார் மகன் வேலாயுத உடையார், இராமலிங்கன் காசிநாதன், தையல் பாகன் சின்னத்தம்பி விதானை என்பவர்களால் மந்துவில், சாவகச்சேரி கச்சாய், அனலைதீவு முதலிய இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களாவர்.

ஒரு வரலாற்றுப் பின்னணியில் சமய கோட்பாடுகளையும் குறிக்காமல் இருக்க முடியாது. தற்கால நயினாதீவில் இந்து, பௌத்த, இஸ்லாம், கிறீஸ்த சமயங்கள் எல்லாவற்றுக்கும் கோயில்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விசேட காலங்களிலும், பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து சகல கோயில்களிலும் அஞ்சலி செய்கின்றனர். ஆகவே இலங்கையில் சகல மதத்தவர்களுக்கும் சாந்தியளிக்குமிடமாக நயினாதீவு அமைந்திருக்கிறது.

நயினாதீவு வரலாற்றில் இடம்பெற வேண்டிய ஆயிரக்கணக்கான விஷயங்கள் இருந்தபோதிலும் விரிவஞ்சி விடுக்கின்றேன். எதிர்காலத்திலும் இவ்வகையான மலர்களில் தொடர்ந்து எழுதுவோமாக.

ஆக்கம் : I. Saravanapavan