தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் :

பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே - பிரபஞ்சத்திலே - கண்டங்களும், தீவுகளும், திட்டுக்களும், உபகண்டங்களும்,
சமுத்திரங்களும், பெருமலைகளும், சம வெளிகளும், ஆறுகளும், நன்னீர்ச் சுனைகளும், துறைமுகங்களும், கல்வெட்டுக்களும், சாசனங்களும், பொறிப்புக்களும், நாணயங்களும், பூர்வீக மண்டையோடுகளும், புதை குழிகளும், தாழி அடக்கம் முதலான கிரியைகளும் உள்ளன. வரலாறுகளும், பொய்ப்பதில்லை: இதனை ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும், ஐதிகங்களும், வழிபாட்டு மரபுகளும், சிலைகளும், விக்கிரகங்களும், தொன்மைமிக்க ஏட்டுச்சுவடிகளும் மெய்ப்பித்து நிற்கின்றன. செவிவழிக் கதைகளும், நம்பிக்கைகளும், அரசபாரம்பரியங்களும் சில உண்மைச் செய்திகளை உணர்த்தி நிற்கின்றன. வட இலங்கை தீவுகள். நாகதீவு, மணிபல்லவம், நயினாதீவு, வணிக கணங்கள், கப்பல் கட்டுதல், வாணிபம், தென்னிந்தியா, சீனத் தொடர்புகள், கிரேக்க, யவனத் தொடர்புகள் என்பன சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை,பரிபாடல் என்னும் நூல்களால் தெரியவருகின்றன.

வடஇலங்கையின் சப்த தீவுகளுட் தனித்துவமும், மகத்துவமும், மகிமையும், மகோன்னதமும் மிக்கது மணிபல்லவம் எனப்படுவது நயினாதீவாகும். நாற்புறமும் சமுத்திரத்தினாற் சூழப்பட்டுத் தெய்வீக நலஞ் சிறக்கப் பல்சமய வழிபாட்டுத் தலங்களைக் கொண்டியங்கும் சர்வமத சந்நிதி நயினாதீவாகும். பலராலும், பழவடியாராலும் போற்றி ஏற்றி - விரும்பப்படும் பீடமாக, இடமாக, தெய்வத் திருத்தளமாகவே, விளங்குவது மணிபல்லவமெனும் நயினை யம்பதி. தக்கார்| தாழ்விலாச் செல்வர் வாழும் ஊர் நயினாதீவாகும். ஆன்மிகத்தின் பிறப்பிடம் நயினையென்பது மெய்ப்பிக்கத் தக்கதாகும்| புனித, புண்ணியபூமி நயினாதீவு.

கண்டத்திட்டுகளின் தோற்றம் பூர்வீகமானது. பூகோள ரீதியில் சிறுதீவுகளின் தோற்றம் குறித்த செய்திகள் பரத கண்டம் எனும் தேசத்தின் தொன்மைவரலாற்றோடு இணைந்தது. கடற்கோள்களின் தாக்கத்தால் நிலப்பிளவுகள் - நிலப்பிரிவுகள் இடம் பெற்றிருக்கலாம் என்பது இன்றைய ஊகம். காலத்துக்குக் காலம் கடலின் வேகம் - வீச்சு - எழுச்சி பல்வேறு நிலமாறுதல்களை உண்டாக்கியே இருக்கும். காலநிலை யிலேற்படும் தாக்கம் நில அமைப்பின் தன்மையையே திருத்தியும் புதுக்கியு மிருக்கும். இயற்கை மாற்றம் என்பது இயல்பானது| நடப்பது| நிகழ்வது. இக்கருத்தை வரலாற்றுத் தடயங்களும், சான்றுகளும், மூலங்களும் நிரூபித்து நிற்கின்றன.

வாணிபம் - வாணிகம் - வண்மை செய்தல் (வள்ளண்மை, வளப்பமெனப்படும்), பிறர்க்குந்தமக்கும் வளப்பம் உண்டாவதற்கு ஏதுவான ஒரு நன்முயற்சியே வணிகமாவது. நிலவழி வாணிபம், கடல்வழி வாணிகம் என இருவகையுண்டு. இவற்றுள் இலக்கியச் சான்றுகளால், துறைமுகங்களால், பண்டை மாற்றுக்களாற் குறிப்பிடப்படுவது - சிறப்புடையது கடல் வணிகமாகும். ஈழம், காகம், கடாரம், சீனம், சோளகம், யவனம் முதலிய நாடுகளோடு நம்மவர்கள் முன்பு வாணிபஞ் செய்து வந்தார்களென்பது இலக்கியங்களி லிருந்து தெரிகிறது. தமிழ் மக்கள் ஏறக் குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே கடல் வாணிபத்திற் சிறந்திருந்தனர். முன்னிருந்த மக்கள் கடல்வழியாகப் பிற நாடுக்குச் சென்று வந்த வழக்கம் 'முந்நீர் வழக்கம்' என்று குறிக்கப்படுகிறது. தமிழிலக்கியப் பெருநூல்களிலே பொறுக்கமுடியாத பெரிய துன்ப நிகழ்ச்சிகளுக்கு உவமம் வருகின்ற இடங்களில் ஆரிருள் மழை நாளில் நடுக்கடலிற் கலங்கவிழ்ந்து வருந்தும் மக்களின் நிலைமையே பெரும் பாலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கலங்க வீழ்ந்து தவிப்போர், மணிமேகலையிற் 'கலங்கவிழ் மாக்கள்' என்றும், 'உடைகல மாக்கள்' என்றும் கூறப்படுவர். சிலப்பதிகாரத்திலே,

'இடையிருள் யாமத்து எறிதிரைப்
பெருங்கடல் உடை கலப்பட்ட எங்கோன்'

என்று இத்துன்பநிலை அவ்வுணர்வு தோன்ற விளக்கப்பட்டிருக்கிறது. பலவகையானகப்பல்கள் அக்காலத்துத் தமிழகத்திற் செயல்பட்டன. 'கலம் செய் கம்மியர்' என்றே தொழிலாளருள் ஒருவகையினர் தமிழகத்தி லிருந்தனர். புணை, பரிசில், கட்டுமரம், தோணி, திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல் முதலிய பல பிரிவான கலங்கள் அப்போது செய்யப்பட்டன. ஒவ்வொரு பெரிய கப்பலும் ஒரு மதில் சூழ்ந்த மாளிகை போலத் தோன்றுமாம்.

'பிணக்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்ற
உணங்கு கலன் ஆழியன் தோன்றும்
ஓர் எயில் மன்னன்' (புறநானூறு)

பழந்தமிழர் உள்நாட்டு வாணிபத்தில் பண்டங்கள் பொதிந்த மூட்டைகளைச் சுமப்பதற்கு எருது, கழுதை முதலிய விலங்குகளையும் பயன்படுத்திக் கொள்வர் என்ற செய்தி பெரும்பாணாற்றுப் படையில் 'அணர்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்' என்பதால் அறியப்படும்.

பழந்தமிழர் வணிகம் நன்றாக நடைபெறுவதற்கு நல்ல முதலும், நாணமும், நற்குணமும் இன்றியமையாதனவென்றும் இவற்றைச் செல்வமாகவும் அறிந்திருந்தனர். பட்டினப்பாலை வாணிபர் நாட்டின் பொது நலன்களிலும், கருத்தும் முயற்சியும், பற்றும் உடையவர்களாகத் திகழ்ந்தமை நினைவு கூர்தற்குரியது. உலகியலறிவோடு பேசிப் பேசிப் பழகினவர்களாதலால் வணிகரிற் பலர் பிறரை வயமாக்கத்தக்க பேச்சுத்திறம் உடையவர்களாக இருந்திருக்கக்கூடும். இவர்களிற் பலர் புலவர்களாகவும் விளங்கினர். சீத்தலைச் சாத்தனார், இளவேட் டனார், பொன்வாணிகனார். இளந்தேவன் என்னும் சிறந்த சங்கப் புலவர்கள் வணிக முயற்சியுள்ளவர்களேயாவர். இவர்கள் முறையே கூடவாணிகரும், அறுவை வாணி கரும், பொன் வணிகரும், பண்ட வணிகரு மாவர், இவர்கள் தாமுந் திருத்தமான உயர்ந்த தமிழ்க்கல்வி பயின்று பிறர்க்கும் அதனால் பரவச் செய்து வந்த பெருந்தகை யோருமாவர்.

1.2: தமிழ் - பௌத்தக் காப்பியமான மணிமேகலையில் இடம்பெறும் மணி பல்லவம் தொடர்பான செய்திகளும், சம்புத் தீவு, நாகதீவு, புத்த பீடிகை எனும் கொள்கைகளும்:
தீவுப்பகுதிகள் இன்று 'தீவகம்' என்று அழைக்கப்படுகிறது. 'சம்புத் தீவு' என்று நயினாதீவுக்குப் பெயருண்டு. சம்புத்தீவு, தீவக சாந்தி என்னுந் தொடர்கள் மணி மேகலையிலே இடம்பெற்றுள்ளன. அரசு மணி என்பர் கூற்று வருமாறு:

'சம்புத்தீவின் காவல் தெய்வம் இந்நகரிலிருந்து இந்திரனுக்கு விழா எடுத்தது. அதனால் தீவக சாந்தி என்றும் பெயர்'

பண்டைக் காலத்தில் நாவல் மரங்கள் நிறைந்த தீவுபோல் இருந்ததால் நாவலந் தீவு என்று பெயர் பெற்றது. 'சம்பு' என்றால் நாவல் மரம். (சம்பு குண்டம் - நாவற்குழி) அதனால் நாவற் தீவைச் சம்புத் தீவு என்றும் கூறுவர். 'சம்பாதீவனம்' என்னும் பெயரும் மணி மேகலையிலே வருவது. 'சம்பு' நாவல் சம்பாதிவனம் 'நாவல் மரங்கள் நிறைந்த வனம்' ஆகலாம். சம்பாதிவனம் - சடாயு வின் தம்பி சம்பாதி. சூரியனின் அருகே பறந்து சென்றபோது வெப்பத்தால் சிறகுகள் தீப்பற்றியெரிய இங்கே வீழ்ந்தான். சடாயுவும் சம்பாதியும் இறைவனைப்பூசித்துப் பேறு பெற்ற இடம்தான் இவ்வனம். இது அச்சந்தரக் கூடியதாகும்.'

'மணிபல்லவம்' பற்றிய செய்திகள் மணிமேகலையில் மேல் வருமாறுள்ளன. 'மணிபல்லவத் தீவைக் கதிரவன் தன் பொன்னிறக் கதிர்களால் ஒளிமயமாக்கத் தொடங்கினான். தீவு - என்பது நான்கு பக்கங்களிலும் கடலாற் சூழப்பட்டுள்ள நிலப் பகுதி. நயினாதீவா? என்பது 'தீவு' என்று புரிகிறது. இத்தீவு என்பது நயினாதீவா? காரைதீவா? யாழ்ப்பாணம் குடாநாடு தானா? நாகர் ஆட்சிசெய்த வடபகுதிப் பிரதேசமா? என்னும் ஐயங்கள் பிரதானமாகின்றன. ஆயினும், இன்றும் 'நயினாதீவு' தீவு என்னும் சொல்லுடன் இணைந்து நிற்பதும், நாற்புறமும் கடலாற் சூழப்பட்டுள்ளதும், நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் கோயிலின் பதினொராந் தீ விழாவின் போது சடாயு, சம்பாதி (கருடப்பறவை) வட்டமிட்டு வணங்குவதும் என நோக்கும்போது மணிபல்லவம், மணிபல்லவத் தீவு என்ற பதில்கள் நயினாதீவையே குறித்துள்ளன என்பது தெளிவு. அத்துடன் ஊராத் தோட்டைத் துறைமுகம், பராக்கிரமபாகுவின் கல்வெட்டு. பாம்பு சுற்றலை கல், கருடன் கல் என்பவையும் சான்றுகளாகின்றன. மணி பல்லவத்திற் கடல் சூழ்ந்திருப்பதும், கடலலைகள் விசையாக வீசுவதும் கருதினால் இப்பின்னணி நயினாதீவின் இன்றைய மணிபல்லவத்தின் இயற்கைச்சூழலே என்பதனை உய்த்தறிய அதிக நேரம் வேண்டியதில்லை. 'மணிமேகலை அங்கு மிங்கும் நடந்து சென்றபோது மலர்பூத்துக் குலுங்கும் சோலைகளையும் இதழ் விரித்துச்சிரிக்கும் செந்தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தையும் கண்டார்.' எனக் கூறப்படுவதால் மணிபல்லவம், மணி பல்லவத் தீவு என்பது நீண்ட நிலத் தொடர்ச்சியுடைய தொன்றல்ல என்ற கருத்தை உறுதிப்படுத்துவதாயுள்ளது. பொய்கை - தடாகம் தென்பட்டதும் மணிமேகலையில் உண்டு. 'குளம்', 'பொய்கை', 'புத்தர் பள்ளம்' என்று அழைக்கப்பட்ட உண்மை வரலாறு நயினாதீவு பற்றிய ஆய்வில் பலராலும் குறித்துக் கூறப்பட்டுவருகிறது. எனவே, 'மலர்கள் நிறைந்த தடாகம்' இருந்த இடமே 'மணிபல்லவம்' என்பது போதகும். மனித நடமாட்டமில்லாத - தொடர்பற்ற பிரதேசமாக தனிமைப்படுத்தப்பட்ட இடமாக - ஆளரவ மற்ற பிரதேசமாகவும் மணிபல்லவம் இருந்ததென்பது திரிகாலமுமுண்மையே யாகும்.

1.3: புத்த பிடிகை - தருமபீடிகை
'அப்போது அவள்முன் (மணிமேகலை முன்) திடீரென்று ஒரு தரும பீடிகை தோன்றியது. வட்டமாய் அமைந்த தரும பீடிகை மூன்று முழ உயரமும் ஒன்பது முழ அகலமும் கொண்ட பெரிய பீடிகை. அதன் உச்சியில் புத்தர் அடிச்சுவடுகள் அமைந்திருந்தன. அதைப் புத்தபகவான் இருக்கை என்று எண்ணி மரங்கள் அதன்மீது மலர்களைச் சொரியுமாம். பறவைகள் அதைப் பூசிப்பது போல் சிறகுகளைத் தம் உடலிலிருந்து சிலிர்த்துச் சொரியுமாம்' இவ்வாறு வர்ணிக்கும் மணிமேகலை 'புத்த பீடிகை மணிபல்லவத்தில் ஏற்படுத்தப்பட்டது (1991:55) அதைக் கண்பவர்களுக்கு அவர்களுடைய பழம் பிறப்பை உணர்த்த வல்லது. நாக நாட்டை ஆண்ட இரண்டு மன்னர் அப்பீடிகையை அடைய ஒருவர்க் கொருவர் போரிட்டுக் கொண்டனராம். அது கண்ட புத்தபகவான் 'இந்த இருக்கை உங்கள் இருவருக்கும் உரியது அன்று| எமக்குரியது' என்று கூறி அப்பீடிகை மீது அமர்ந்து அவ்விருவருக்கும் அறிவுரை கூற அவர்கள் நல்லறிவு பெற்றனர். இதற்கான நேரடிச்சான்று இன்றும் புத்த கோயிலிலே அனைத்து யாத்திரிகர்களது கண்களுக்கும் தரிசித்து வழிபடத்தக்க வகையிலே வெளிப்படையாகவே வரலாறு எழுதப்பட்டும் உள்ளது. நேரிலே காண்க| தரிசிக்கவும். இந்திரன் அமைத்த பீடம் என்றும், மணி மேகலை புத்த பீடிகையை வலம் வந்து தரிசித்து வணங்கினாள் என்ற செய்தியும் இன்றைய நயினாதீவே மணிபல்லவம் - மணிபல்லவத்தீவு என்பதனை உறுதிப் படுத்துகின்றன. நிலத்தில் மணிமேகலை வீழ்த்து வணங்கித் தொழுததும் அவள் பழம் பிறப்பையுணர்ந்தாள்' என்றும் தெளிவாக கூறுகிறது மணிமேகலை.

1.4: அமுதசுரப்பியின் மகிமையும் பெருமையும்:
'புத்தபிரான் அவதரித்த நாளான வைகாசி நிறைமதிநாள் (வைகாசி சுத்த பௌர்ணமி) அன்று கோமுகிப்பொய்கை யிலிருந்து 'அமுதசுரபி' என்னும் ஐயக்கலம் (பிட்ஷாபாத்திரம்) வெளிப்படும். அக்கலம் ஆபுத்திரன் கையிலிருந்த அற்புதக்கலம். அதில் இடப்பட்ட சோறு எடுக்க எடுக்க குறையாது வளரும். இதன் பெருமையை அறவண அடிகளிடம் கேட்டறியலாம். இன்றுதான் 'அமுதசுரபி' தோன்றும் நன்னாள். நாம் அங்கே போவோம் என்று கூறி மணிமேகலையைக் கோமுகிப் பொய்கைக்கு அழைத்துச் சென்றார் 'தீவதிலகை' இம்மணிமேகலைச் செய்தியின் நடைமுறைப் பெறுபேறே இன்றும் தினமும் நயினாதீவில் ஆலயத்திலும், அமுதசுரபியிலும் நிகழும் தினசரி அன்னதானப் பெருமை. இத்தகு நடைமுறைகள் இன்று நிகழும் இடம் நயினாதீவு எனப்படும் மணி பல்லவத்திலேயே என்பதனை அறிந்துணர்ந்து தெரிய வேறென்ன சான்றுதான் வேண்டுமோ? உலக அறங்களெல்லாவற்றுக்கும் சிறந்தது பிறர்பசி போக்குவதுதான்: பசி போக்குவோரே சிறந்தவர்: 'மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்| உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' - என்பது மணிமேகலை, பௌத்தத் தமிழ் வம்சத்தவர் நாகவம்சத்தவர்களான நயினாதீவு - மணிபல்லவ தேசத்தவரேயவர் என்பது போதகும்.

1.5: விழாக்கள் மலிந்த இடம் மணிபல்லவம்:
'இந்திர விழாக் கொண்டாடாத நாளில் இந்த கரைக்கடல் கொள்ளும்' என்று மணிமேகலை தெய்வத்தின் வாக்கு இருக்கிறது. அதுவுமன்றி இந்திரன் சாபமும் அப்படியே உள்ளது. ஆகையால் ஆண்டு தோறும் இந்திரவிழாச் செய்துவரும்.' என்று தரும சாவகன் மணிமேகலைக்குக் கூறினான். சாவக நாட்டிலுள்ள இந்நகரின் பெயர் நாகபுரம் அரசபாரம்பரியத்தின் வழிபடு தலமாகவும், யாத்திரைத் தலமாகவும் இம்மணிபல்லவம் நிறுவியது என்பது புண்ணி யராசன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

1.6: நாகநாடு நடுக்குற்றாள்பவள்:
'நாகநாடு' என்பது மணிபல்லவமாகிய நயினாதீவு, 'நடுக்குற்றாள்பவள் - 'பயத்தினாலும், பக்தியினாலும் ஈழத்து ஆட்சியும் அருளும் செய்தருளும் நாகபூஷணி அம்மன்' என்பது பொருள். மணிமேகலை கட்டும் 'நாகநாடு நடுக்குற்றாள்பவள்' என்ற தொடரிலே வரும் 'நாகநாடு' என்பது யாவா என்ற தீவினையே குறித்து நிற்கின்றது என்பதும் நோக்கத்தக்கது என்று கருத்தொன்று 'பத்மம்' என்னும் மலரிலே இடம் பெற்றுள்ளது. ஆயினும் இக்கருத்துப் பொருந்துமாறில்லை. மணிமேகலா தெய்வத்தின் மணிமேகலைக் குறிப்பும், இன்றைய ஸ்ரீபுவனேஸ்வரி சக்தி பீடம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயமே என்னும் சான்றும், அரசாட்சியும், அருளாட்சியும் நிகழும் நடைமுறை நம்பிக்கையும் கொண்டு ஆயுமிடத்து 'நாடு நடுக்குற்றாள்பவள் என்னுந் தொடருக்கும் யாவாத் தீவுக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை' என்பது போதகும். ஆயினும், யாவா உட்பட அதனைச் சூழவுள்ள தீவுகளி லும் நாடுகளிலும் பௌத்த, சைவ இலக்கிய, இதிகாச வழிபாட்டு மரபுகள் நிலவியுள்ளமையை வைத்துக்கொண்டு நாகநாடு குறித்த மேற்போந்த கருத்துப் புனையப்பட்டி ருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. அது வெறும் புனைவே. கட்டுக்கதையேயாம். ஒரு புடைக்கற்புத் தன்மையுண்டாயினும், கால வோட்டத்தில் யாவாத் தீவை விட நயீனாதீவு, மணிபல்லவம், நாகநாடு, நாகதீவு என்ற சக்தி பீடம் பெருமையும், மகிமையும், புகழும், கீர்த்தியும் அருட்சிறப்பும் கொண்டு இலங்குவதுடன் 'அம்மாளின் தனித்துவ அருளாட்சி மிகவும்பயங்கரமிக்கதாயும், பௌதீகமானதாயும் அமைகின்றமையை எண்ணுமிடத்து, 'நடுக்குற்றாள்பவள்' என்றும் தொடரினூடே மக்கள் - பக்தர்கள் - யாத்திரிகர்கள் மனதிலே பயத்தன்மையைத் தோற்றுவித்துப் பக்தித் திறனால் 'ஆள்பவள்' என்னும் 'நாகநாடு' என்பது பிற்காலப் புகழ் பெற்ற தேசம், வழிபடும் இடம், யாத்திரைத் தலம், பாம்பு வழிபட்டதலம், நம்பிக்கையுடன் ஏற்றிப் போற்றும் திருத்தலம், நாகர் குடியினர் ஆண்ட தேசம், நாகங்கள் வாழுமிடம் எனும் தனித்துவ அம்சங்களால் இன்றைய மணிபல்லவம் - நயினாதீவையே குறித்தது என்று ஊகித்தும் சான்றுகாட்டியும் நிறுவுவதிலும், கருதுவதிலும் பிழையிருக்க முடியாதென்று யாம் கருதுகிறோம். இக்கருத்து 'ஊர்' பற்றிய சார்புடனோ, சமயம் பற்றிய வெறி யுணர்வுடனோ அன்றி, 'சமூக நடைமுறை வழிபாட்டுப் பேருண்மை' என்ற அடிப்படை யிலேயே ஈண்டு இங்கு நிறுவப்படுகிறது. இதில் உண்மையும், சான்றாதாரமும் (மூலச்சான்றும்) முக்கியமே தவிர உணர்வு நலன் - புலமை நலன் - வித்துவம் என்பது இரண்டாம் பட்சமே.

1.7: நாகமும் இலங்கையின் ஆதிக் குடிகளும்: நாகர் வரலாறு:
'உலகின் பல்வேறு பாகங்களிலும் நாகரிகம் முதலில் தோன்றிய இடங்களில் நாகர்கள் வாழ்ந்ததாகப் பெறப்படுகின்றது. ஆபிரிக்கா, ஜப்பான், கொரியா, கம்போடியா முதலிய இடங்களில் நாகர்கள் வாழ்ந்தனர். நாகர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் நாகவழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.' இன்றைய நடைமுறையிலும் - நாக வழிபாட்டுத் தொன்மையுடையது 'மணிபல்லவம்' எனப்படும் நயினாதீவே என்பதாலும், 'அமுதசுரபி' பற்றிய தொன்மையும், இன்றைய நவீன நடைமுறையும் பொருந்தியமைவதாலும், இன்றும் தினசரி அன்னதானம் நிகழும் பீடமாகவும் நயினாதீவு இலங்குவதும் பிரத்தியட்சமே. புத்த பீடிகை நயினாதீவி லேயே உண்டு. ஆகவே யாத்திரைத்தலமாக பிறமதத்தினராலும் இன்று அனுசரிக்கப்படுவது நயினாதீவே, பேராசிரியர், கலாநிதி பரமுபுஸ்பரத்தினம் அண்மையில் தெரிவித்துள்ள மண்டைதீவு அகழ்வுகள் பற்றிய கருத்தில் 'பப்பிரவர்கள்' சீனர்கள் தொடர்பும் நயினாதீவுக்கும் உண்டு என்பது கருதத்தக்கது. 'நயினாதீவு ஆதிஅரசு' எனப்பட்டது. 'நயினாதீவே நாகதீவு, மணிபல்லவம், மணித்தீவு, சம்புத்தீவு என அழைக்கப்பட்டது. (1988:205-249) என்பது ஆய்வாளர் ஜி.தனபாக்கியம் அவர்களது கருத்து. ஒரு பழந்தமிழ் நாடே மணி பல்லவம்' என்பர். தமிழவேள் க.சி.க.கந்தசாமி. இவ்வாய்வுக் கருத்துகள் மூலமாக மணிபல்லவமென்பது நயினாதீவே எனத் தெளியலாம்.