அடியார் வணக்கம் இந்து சமயத்திலே மிகச் சிறந்த, மிகமிக உயர்ந்ததோர் இடத்தைப் பெற்று விளங்கும் வணக்கமாகும்.
"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்கின்றார் ஔவையார்.
"அடியார் நடுவுள் இருவீரும் இருப்பதனால் அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்"
என வேண்டுகின்றார் நாயனார்.
திருத்தொண்டத் தொகையில் அறுபது தனியடியார்களையும், ஒன்பது தொகையடியார்களையும் பாடிய சுந்தரர் உள்ளம் எதிர்காலத்தில் தோன்றும் அடியார்களுக்கும் வணக்கம் செலுத்த விழைகின்றது.

"அப்பாலும் அடிச் சார்ந்தார் அடியார்க்கு அடியேன்" என்று அவர்களுக்கும் வணக்கம் செலுத்துகின்றார்.
“தொழும் அடியாரைத் தொழும் அவர்க்கே பல்லியம் ஆர்த்தெழ
வெண்பகடூரும் பதந்தருமே``
என்கின்றார் அபிராமிப்பட்டர்.
திருவரங்க வீதியில் அடியார்களின் திருப்பாதங்களால் தீண்டப்படும் பொடியாய்க் கிடக்க அவாவித் ``தொண்டரடிப் பொடி`` என்ற பெயரும் பூண்டுவிட்டார் தொண்டர் அடிப்பொடியாழ்வார்.

சமணர் அளித்த கொடுந் தண்டனைகளிலிருந்து இறைவன் திருவருளே துணையாக உய்ந்த திருநாவுக்கரசு நாயனாரின் பெருமையைக் கேள்விப்பட்டார் அப்பூதிநாயனார். அவரைக் கண்ணால் காணாதிருந்தும் அவர் புகழ்கேட்ட மாத்திரத்தே அவருக்கு மீளா அடிமைத்திறம் பூண்டார். அவரையே தெய்வமாகப் போற்றினார். திங்களூரில் அந்தணர் குலத்தில் தோன்றிய அப்பெரியார், பஞ்சாட்சர மந்திரம் ஒதுவதுபோன்று ``திருநாவுக்கரசு`` என்னும் திருநாமத்தையே எங்கும் எப்பொழுதும் ஓதினார்.

"எல்லையில் அன்பால் என்றும் செப்பூதி அங்கைக் கொண்டார் திருநாவுக்கரசர் நாமம்" என்று போற்றுகின்றது பெரியபுராணம்.
"வடிவு தாங் காணாராயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால்
படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாயுள்ள
முடிவிலா அறங்கள் செய்து முறைமையால்"
வாழ்ந்த தொண்டர் அவர்.

அப்பூதியடிகள் மடங்கள் பல கட்டினார். தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்தார். கிணறுகள் பல தோண்டினார். சாலைகளும், சோலைகளும் நிறுவினார். அவ்வாறு தாம் அமைத்தன யாவுக்கும் திருநாவுக்கரசர் மடம், திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தர் என்பது போன்று தாம் போற்றும் திருநாவுக்கரசரது திருநாமத்தையே சூட்டினார். அத்துடன் அமையாது
“மனைப்பாலுள்ள அளவைகள், நிறைகோல், மக்கள், ஆவொடு மேதி மற்றும் உளவெலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுக்கலாற்றார்."
தமது மக்களுக்கும் அப்பெயரையே சூட்டினார். வீட்டிலுள்ள பசுக்களுக்கும், எருமைகளுக்கும் கூட அப்பெயரையே சூட்டினார். அது மாத்திரமா, தான் பயன்படுத்தும் தராசு, படிக்கற்கள் போன்றவற்றையும் நாவுக்கரசரது பெயராலேயே அழைத்தார்.

இவ்வாறு பரம பக்தராக அப்பூதியடிகள் வாழ்ந்து வந்த திங்களூருக்கு ஒருநாள் திருநாவுக்கரசு நாயனாரே எழுந்தருளினர். அங்குள்ள மடத்திலே தங்கி இளைப்பாறினார். வாசனையூட்டிய இனிய குளிர்ந்த நீரருந்தி வழி நடந்துவந்த களைப்பையும் போக்கினார். திரும்பிப் பார்த்தார்.

"திருநாவுக்கரசு எனும்பேர் சந்தமுற வரைந்ததனை
எம்மருங்கும் தாம் கண்டார்"
ஆச்சரியமுற்றார், அவர் வாழ்ந்த காலத்தில் வேறு எவரும் அப்பெயரால் அழைக்கப்படவில்லை. ஆதலின் அயலில் நின்றவர்களை நோக்கி "இப்பந்தர் இப் பெயரிட்டிங்கமைத்தார் யார்" என்று வினவினார். இப்பந்தர் மாத்திரமா! இவ்வூரிலுள்ள சாலை, குளம், கா எல்லாவற்றிற்கும் அப்பெயரையே சூட்டி அமைத்துள்ளவர் அப்பூதியடிகள் என்னும் பிராமனோத்தமர் என்று விடைபகர்ந்தனர் அவர்கள். அவர் எங்குள்ளார் என்று கேட்டபோது "சேய்த்தன்று நணித்து" என்று கூறியதாகச் சேக்கிழார் பெருமான் கூறும் நயம் சிந்திக்கத்தக்கது. அப்பூதியடிகள் உள்ளத்தில் நாவுக்கரசர் வாழ்கின்றார் என்றும் ஆதலால் சேய்த்தன்று என்றும், அவரைக் காணும் பேறு அப்பூதியடிகளுக்குக் கிட்டிவிட்டது என்றும், அவரின் அடிமைத் திறனை நாவுக்கரசர் உணரும் வாய்ப்பு நணித்து என்றும், இவ்வாறு பலபடப் பொருள் கொள்ள வைக்கின்றது அவ்விருசொல் விடை
நாவுக்கரசர் பெருமான் அவர்கள் கூறிய வழியே சென்று அப்பூதியடிகள் இல்லத்தை அடைந்தார். ஒரு சிவனடியார் தம்மை நாடி வந்துள்ளமை கண்ட அப்பூதியார் ஓடிச் சென்று அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். நாவுக்கரசரும் அவரை அன்போடு வணங்கினார்.

இதன்பின் நடந்தவற்றை ஒரு நாடகக் காட்சியாகவே காட்டிவிடுகின்றார் சேக்கிழார். தாம் திருப்பழன நாதரை வணங்கித் திங்களூருக்கு வந்த வரலாற்றைக் கூறிய நாவரசர்
"ஆரணியும் சடைமுடியார் அடியார்க்கு நீர்வைத்த
ஈறில் பெருந் தண்ணீர்ப்பந் தரில்நும்பேர் எழுதாமே
வேறொருபேர் நீர் எழுத வேண்டிய காரணம் என்கொல் கூறும்"
என நேரடியாகவே கேட்டுவிடுகின்றார்,
அவ்வார்த்தைகள் அப்பூதியடிகள் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்திவிட்டன. நிலையிழந்த சிந்தையராய்க் கண்ணீர் சோர நாக்குழறப் பின்வருமாறு கேட்கின்றார்.
"நாணில் அமண் பதகருடன்
ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டின்
உறைப்பாலே வென்றவர்தம்
திருப் பெயரே வேறொருபேர்",

"பொங்குகடல் கல்மிதப்பில் போந்தோறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யாருளரே``
அவ்வாறிருக்கவும்
"மங்கலமாம் திருவேடத்துடன் நின்று இவ்வகை மொழிந்தீர்"
"நன்றருளிச் செய்தியீர்"
"என்குறைவீர் யார் தாம் நீர் இயம்பும்"
என்று கேட்கும் வினாக்களில் உள்ளப் பதைப்புடன் ஓரளவு கலந்து விட்ட வெகுளியையும் நாம் காண முடிகிறது. தம்மீது, தம் பெயரின் மீது அந்தணர் கொண்டிருந்த பக்தியின் உறைப்பை உணர்ந்த நாவுக்கரசர் அவரை அருளுடன் நோக்கி,
"அருளு பெருந் சூலையினால் ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளு முணர் வில்லாத சிறுமையேன் யான்"
என்கின்றார்.

அவ்வுரை கேட்ட அப்பூதியாரின் நிலையை நேரே நாமும் தரிசிக்க வைக்கின்றார் சேக்கிழார் பெருமான். தாம் வழிபடும் தெய்வத்தையே கண்முன்னே கண்ட அவ்வன்பரின் கைகள் தலைமிசை ஏறின. கண்கள் அருவி பொழிந்தன. உரை குழறியது. உடம்பெல்லாம் உரோமம் சிலிர்த்தது. அற்றவர்கள் அருநிதியம் பெற்றார் போல், முன்நின்று கூத்தாடினார். உற்றவிருப்புடன் சூழ ஓடினார். பாடினார்.

"சுற்றமெலாம் கொடு மீளப் புறப்பட்டார்`` யாவரும் வணங்கிப் போற்றிநின்றனர். யாவருக்கும் நீறளித்து அருள் புரிந்தார் நாவரசர். அவரை இல்லத்துள் அழைத்துச் சென்று, பாதம் துலக்கி, அந்நீரை வாயில் உட்கொண்டு, சிரசிலும் தெளித்து, யாவரும் வணங்கி நின்றனர். அன்பர் வேண்ட, அவ்வில்லில் திருவமுது செய்ய இணங்கினார் ஆண்ட அரசர்.

அறுசுவைக் கறிகளுடன் அன்னம் அமைத்தபின் வாழை இலை வேட்டிவரச் சென்ற மூத்த புதல்வனைக் கையில் பாம்பு தீண்டியது. பாம்பைப் பிடுங்கி எறிந்தவன் விடம் ஏறி வீழுமுன் இலையைக் கொடுத்துவிடும் ஆர்வத்தால் வேகமாக ஓடிவருகின்றான். வேகம் என்று விடத்துக்கும் பெயர். அதுவும் விரைந்து தலைக்கேறுகின்றது. அவ்வேகத்தைத் தனது வேகத்தால் வென்று ஓடிப் பரிகலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படிமேல் வீழ்ந்தான் மூத்த திருநாவுக்கரசு.

"விடத்தால் மகன் இறந்ததற்கு வருந்தாது
தூயவர் இங்கமுது செய்யத்தொடங்கார்"
என்றே கணவனும் மனைவியும் வருந்தினர். தம்புதல்வன் சவம் மறைத்தனர். பாயால் மூடினர். உணவருந்த வந்த அப்பரடிகள் யாவருக்கும் நீறு சாத்தினார் இவர்க்கு
"மூத்த சேயையும் காட்டும் மேதகு பூதிசாத்த" என்றார். இப்போது ``இங்கவன் உதவான்`` என்று மட்டும் உரைக்கின்றார் அன்பர்.

"மெய்விரித்துரையும்" என்று அப்பர் கேட்க அஞ்சி நடுங்கிய அன்பர் உற்ற துரைகின்றார். அன்பர் தம்மிடம் வைத்த பக்தியின் உச்சநிலையை அறிந்த அப்பர்,
"நன்று நீர் புரிந்தவண்ணம் யாவர் இத்தன்மை செய்தார்`` என்று உருகுகின்றார். உடலை ஆலயத்திற்கு எடுத்து வரச்செய்து
"ஒன்று கொலாம் அவர் சிந்தை`` எனத் தொடங்கும் பதிகம் பாடி விடம் தீர்த்து அன்பரின் மகனை எழுப்பி நீறு சாத்தினார்.

மகன் எழுந்ததற்கு மகிழாது இவனால் தாமதம் ஏற்பட்டதே என்றே அத்தம்பதிகள் வருந்தினர். அவர்களது துயர் தீர்க்க விரும்பிய நாவுக்கரசர் பெருமான் மீண்டும் அன்பர் இல்லம் அடைந்து மைந்தரும் மறையோர்தாமும் மருகிருந்தமது செய்யத் தாமும் திருவமுது கொண்டார். அன்பரை வாழ்த்திச் சிலநாள் அங்கு தங்கி அவர் உள்ளத்தில் நிறைவு ஏற்படுத்தினார்.

நாவுக்கரசர் பெருமானது திருவடிகளைச் சிந்தித்து அவர் நாமம் பரவி வாழ்ந்து ஈற்றில் அப்பூதியடிகள் தில்லைக் கூத்தன் திருவடி சேந்தார்.

இவ்வரலாறு எங்களுக்கு உணர்த்தும் நன்நெறிகள் சிலவுள. நாம் அவற்றைச் சிந்தித்து நடைமுறையிற் கைக்கொண்டொழுகுதல் வேண்டும். முதலாவதாக, நாம் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுதல். குழந்தைகளுக்குத் தெய்வங்களின் பெயர்களை நம் முன்னோர் சூட்டினர். வேலன், கந்தன், முருகன், கணபதி போன்ற பெயர்கள் இன்று கைவிடப்பட்டுவிட்டன. சிவலிங்கம், சிவராசா போன்ற பெயர்களை மக்களுக்குச் சூட்டின் அழைக்கும் போது சிவன் என்று எம் நா உச்சரிக்கும். உமாராணி, திருமகள் என்பது போலப் பெண் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி உமா, திரு எனச் சுருக்கமாக அழைத்து மகிழ்ந்தனர். பார்வதி, இலட்சுமி எனப் பெயரிட்டு முழுப்பெயராகவே அழைத்தும் வந்தனர்.

இவ்வழக்கம் அருகிவிட்டது. Rock என்றும், Wood என்றும் ஆங்கிலப் பெயர் வைப்பது போன்றும் சிலர் பெயரிடத் துணிந்துவிட்டனர். அன்றியும் சினிமாப் பெயர்களையும், ஒலியை மாத்திரம் கருத்திற் கொண்டு பொருளற்ற பெயர்களையும் மக்களுக்குச் சூட்டுகின்றனர். எண்சோதிடம் கருதி அவற்றையும் கூடச் சிதைத்து விடுகின்றனர். நமச்சிவாயம் என்று பெயரிட்டு அழைத்தால் சொல்லும் நா நமச்சிவாயம். தராசுபடிக்கும் கூட நாவுக்கரசர் பெயரிட்ட அப்பூதியடிகள் வரலாறு நமக்கு இதனைப் போதிப்பதை மறந்துவிடலாகாது.

இரண்டாவதாகப், "பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லைப் பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை இடைநடுவிற் கொடுக்கும் இச் செல்வன் சிவன் தந்தது"
என்ற பெரியார் வாக்கை உணர்ந்து, அவன் தந்த செல்வத்தை அவனுடைய திருப்பணிக்கு ஆக்குகின்றேன் என்ற நினைவோடு தொண்டுகள் புரிதல் வேண்டும். இன்னார் கட்டியதூண், இன்னார் உதவிய விளக்கு என்று பெயர் பொறிக்கும் வழக்கத்தைக் கைவிடல் வேண்டும். மடம், அறநிலையம் யாவும் நாவுக்கரசர் பெயரால் நிறுவிய அப்பூதியடிகளை நாம் பின்பற்றவேண்டும்.

சிவனடியார்களை எவ்வாறு வணங்கி, ஆசனமிட்டுப், பாதம் துலக்கி, வழிபாடாற்ற வேண்டும் என்பதையும் பலர் அறிவதில்லை. சேக்கிழார் பெருமான் மிக நுணுக்கமாக அவற்றை வேண்டிய இடங்களில் எடுத்துரைப்பார். வாழையிலை போடும்போதும் சபைகளில் எப்பக்கம் எங்கிருக்கப் போடவேண்டும் என அறியாது தடுமாறுகின்றோம். "ஈர்வாய் (அரிந்தபக்கம்) வலம்பெற மரபின் வைத்தார்" என வரும் செய்தி நாம் கைக்கொள்ளவேண்டிய அம்சமாகும்.

அடியார் வணக்கத்தின் பெருமைகளை உணர்ந்து சிறந்த அடியார்களைப் போற்றிக் குருபூசைகள் தவறாது நிகழ்த்தி வழிபாடாற்றி உய்தியடைவோமாக.