“நெஞ்சினிற் சிறப்பாய் வித்தி நினைவெனும் நீரை வார்த்துக்
கொஞ்சமோ பல நூல் இட்டுக் குறைவறக் களைகள் நீக்கி
எஞ்சறக் கொண்ட நெல்லிற் புற்கையை யாக்கி அன்னை
மஞ்சுறு குழலாற் கீந்தார் மாண்புசேர் குமார சாமி.

"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து" என்பது திருவாசகம். பூரண அன்பு, பூரண பொறுமை, பூரண தன்னலமறுப்பு, பூரண மன்னிக்கும் சுபாவம் என்பவற்றை நாம் தாய்மையிலேயே காணமுடியும். பரம் பொருளைப் பல்வேறு வடிவில் அடியார்கள் தியானித்து வழிபடுகின்றார்கள். பதியாக (கணவனாக), தாயாக, குழந்தையாக, தோழனாக, ஆண்டானாகப் பாவித்து பக்தி செலுத்துகின்றார்கள். இப்பக்தி நெறிகளுள் மிக நெருக்கமாக உளங்கலந்து உறவு கொண்டாட வாய்த்த நெறி தாயாகக் கருதி வழிபாடு செய்யும் மார்க்கமேயாகும்.

தண்டிப்பவன் தந்தை, மன்னிப்பவள் தாய். இதனை நாம் உலகியலிற் காண்கின்றோம். இதனையே தாயுமானாரும்
"பொல்லாத சேயெனில் தாய் தள்ளல் நீதமோ
புகலிடம் பிறிது முண்டோ"
என்று வினாவுகின்றார்.

“செம்மை நலமில்லாத சிதடரொடுந் திரிவேனை
மும்மை மலர் அறிவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையு மோர் பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே"

என்று பாடுகின்றார் மணிவாசகர். நாய் சிவிகை ஏற்றுவிக்கும் உள்ளம் தாய்மைக்கேயுண்டு. அந்தப் பண்பை அம்மை என்று சிறப்பிக்கின்றார் அடிகள்.

உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்ற, கண்ணாற் பார்த்து அறிய முடியாத ஆற்றலையே நாம் சக்தி என்று கூறுகின்றோம். வழிபாடு செய்கின்றோம்.

இவ்வழிபாடு பல்லாயிரம் இவ்வழிபாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பல பாகங்களிலும் பரவியிருந்துள்ளது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அகழ்ந்து அறியப்பட்ட சிந்துவெளி நாகரீகத்திலும் சக்தி வழிபாடே முக்கியத்துவம் பெற்றிருந்ததேன அறிஞர்கள் கருதுகின்றனர். மொகஞ்சதாரோ, ஹரப்பா, சங்குதாரோ முதலிய இடங்களிற் காணப்பட்ட முத்திரைகள், சிலைகள் ஆகியவற்றைக் கொண்டு சமய நிலையை ஆராய்ந்த பேரறிஞர் யோன் மார்ஷல் தாய்த்தெய்வ வணக்கத்தையே முதலில் வைத்துள்ளனர். மும்முகக் கடவுள் வணக்கம் இரண்டாவது இடத்தையும், சிவலிங்க வழிபாடு மூன்றாவது இடத்தையும் பெறுவதாக அவர் கூறுகின்றார். அங்கு காணப்பட்ட பெண் உருவங்கள் ஒடுங்கிய இடையையும், பரந்த அரைப்பகுதியையும், அலங்காரத் தலையணியையும் உடையனவாகக் காணப்பட்டன. நிருவாண உருவிற் காணப்படும் பெண் தெய்வ உருவங்களுமுள. பண்டைய நாகரீகம் நிலவிய எகிப்து, சுமேரியா முதலிய இடங்களிலும் இத்தகைய நிருவாணச் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஹரப்பாவிற் காணப்பட்ட ஒரு முத்திரையில் (Seal) இரு கிளைகளுடன் கூடிய அரசமரத்தின் கிளைகள் மத்தியில் நீண்ட தலைமயிருடனும், இரு கொம்புகளுடனும் கூடிய நிருவாண உருவிலுள்ள ஒரு பெண் நிற்பதைக் காணலாம். வேறோர் முத்திரையிலே தலைகீளாகக் கால்களை அகல விரித்த நிலையிற் காணப்படுன்ற பெண்ணின் கருவிலிருந்து ஒரு செடி முளைத்து வருவதுபோன்ற அமைப்பைக் காணமுடிகின்றது. இது பிரபஞ்சத்தின் தோற்றமே சக்தியாகத் - தாய்த்தெய்வமாக வழிபட்டமையை நன்கு விளக்கும்.

இந்து நதிக்கரை நாகரீகத்திற் காணப்படுவது போன்ற அமைப்பை நாம் எகிப்து, மொசப்பத்தேமியா முதலிய நதிக்கரை நாகரீகம் நிலவிய பிரதேசங்களிலும் காணமுடிகின்றது. எகிப்தில் "இசிஸ்" என்ற பெண் தெய்வம் வழிபடப்பட்டது. சின்னாசியாவில் "சிபிஸ்" என்ற பெண் தெய்வமும், சிரியாவில் "அஸ்தாத்" என்ற பெண் தெய்வமும் போற்றப்பட்டன. இவ்வாறு பழம்பெருமை வாய்ந்த நதிக்கரை நாகரீக நாடுகளிலே தாய் வழிச் சமுக அமைப்பு நிலவியமையே தாய்த் தெய்வ வழிபாடு தோன்றியமைக்குக் காரணமாகும் எனச் சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். வரலாற்றுக் கண் கொண்டு நோக்கும் போது, மரபுமொழி (desent), உறவுமுறை (kinship), சொத்துரிமை, ஆட்சியுரிமை, அதிகாரம், மணமுறை ஆதியன கொண்டு ஒரு சமுகம் தாய்வழிச் சமூகமா அன்றேல் தந்தை வழிச் சமூகமா என்று துணிய முடியும். விவசாயமே முக்கிய தொழிலாகக் கொண்டு விளங்கிய நதிக்கரை நாகரீகங்கள் நிலவிய பிரதேசங்களிற் பெண்களே முக்கியத்துவம் பெற்றனர். தாய்வழிச் சமூக அமைப்பு இதனால் ஏற்பட்டது. தாய்த் தெய்வ வணக்கமும் தோன்றியது. இந்நாகரீகங்கள் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது ஆராச்சியாளர் யாவருக்கும் ஒப்பந்த முடிபாகும். இதனால் சக்தி வணக்கம் அக்காலத்திற்கும் மிகமுற்பட்டதென நாம் துணிந்து கூறலாம்.

கி.மு.1500 ஆம் ஆண்டளவிலே இந்தியாவுக்குள் ஆரியர் நுழைந்திருக்க வேண்டுமென்பது அறிஞர்கள் துணிபு. ஆரியர்கள் சமுக அமைப்பு தந்தைவழி அடிப்படையில் அமைந்தது. கிராம வாழ்க்கையே அவர்கள் மேற்கொண்டிருந்தனர் என்பதும் தெரிகின்றது. இக்கண்கொண்டு நோக்கும் போது காலத்தால் முற்பட்டதும், தாய்வழிச் சமுக அமைப்புடையதும், நகர வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுமாகிய இந்துவெளி நாகரீகம் ஆரியர் அல்லாதார் நாகரீகம் என்பது நன்கு புலனாகும். இந்துவெளி நாகரீகம் திராவிடர் நாகரீகம் என்பதை இன்று அத்துறையில் ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் எற்றுக்கொண்டுள்ளனர். அக்காலத்தில் வடஇந்தியாவிலும் திராவிடரே வாழ்ந்தனர் என்பதும், ஆரியரின் வருகையின் பின்னரே அவர்கள் தெற்கு நோக்கிச் செல்ல நேர்ந்தது என்பதும் யாவரும் ஏற்றுக் கொண்ட முடிபாகும். இதனால் சக்தி வழிபாடு திராவிட சமுகத்தில் உருவாகிய ஒரு வழிபாட்டுத் தத்துவம் என்பது திண்ணம். பின்னர் நாம் ஆராயப்போகும் சங்ககாலச் சமயக் கொள்கையும் இதனை வலியுறுத்தும்.

இந்தியாவில் மலைச் சாதியராகவும் காட்டுச் சாதியராகவும் சீர் திருந்தாத நிலையிற் பல திராவிடக் குழுவினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வணங்கும் பெண் தெய்வங்களை நோக்கும் போது பண்டைத்திராவிடர் மத்தியில் தாய்த்தெய்வ வணக்கம் எந்த அளவுக்குப் பேணப்பட்டது என்பது புலனாகும். "ஏரன்பெல்சு" என்னும் மேல்நாட்டு அறிஞர், அவர்களிடை நிலவும் பெண்தெய்வ வணக்கம் பற்றி நன்கு ஆராய்ந்துள்ளார். அவர் தொகுத்த அட்டவணையில் பிலிமக்கா, தார்ஜி, டொம், கடவா, ஒக்கரை, கங்கை, கொல்லா, அத்தி, புடுபுடுக்கி எனப் பெண்தெய்வப் பெயர்ப் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது. சைவ சமயத்தைச் சார்ந்த எழுபதுக்கு மேற்பட்ட சக்தி வடிவங்கள் இன்று நடைமுறை வணக்கத்தில் இந்தியாவில் இருப்பதாக அறிஞர் கோபிநாதராவ் கூறுகின்றார். வைணவ மதத்தையும் பிற பிரிவுகளையும் சார்ந்த சக்திகளிலும் பலர் பூஜிக்கப்படுகின்றனர். இவற்றை அவதானிக்கும் போது, சக்தி வழிப்பாடு எவ்வாறு வாழ்வோடு ஒன்றி வளர்ந்து வந்துள்ளது என்பது புலனாகும்.

சமய வரலாற்றில் இந்து நதிக்கரை நாகரீக காலத்திற்கு அடுத்தபடியாக இடம் பெறுவது வேத காலமாகும். இருக்கு வேதகாலம் கி.மு.1500 அளவில் என அறிஞர்கள் கூறுகின்றனர். இருக்கு வேதத்தில் வருணன், இந்திரன், அக்கினி, யமன் போன்ற ஆண் தெய்வங்களே முக்கிய தெய்வங்களாகப் போற்றப்பட்டன. விஷ்ணு, உருத்திரன், பிரஜாபதி என்போர் அத்துணை முக்கியத்துவமுடையவர்களாகக் காணப்படவில்லை. காலப்போக்கில் உயர்ந்தோர் தாழ்ந்து, தாழ்ந்தோர் உயர்ந்துவிட்டமையைக் காண்கின்றோம். முழுமுதற் கடவுளாகச் சிவனும் விஷ்ணுவும் போற்றப்படத் தொடங்கினர்.

ஆண் தெய்வங்களே போற்றப்பட்ட இருக்கு வேதத்தில் ஒருசில பெண் தெய்வங்களும் போற்றப்பட்டன. வாக்கு, இராத்திரி, உஷை, சந்தியா, சரஸ்வதி (நீர்த்தெய்வம்), ப்ருதுவி (நிலத்தெய்வம்) ஆதியன துதிக்கப்பட்டமையை நன்கு அவதானிப்பின் இயற்கைச் சக்திகளே பெண் தெய்வங்களாகத் துதிக்கப்பட்டமை புலனாகும். வேத காலத்தையடுத்து வந்த உபநிடத காலத்தில் தாய்த் தெய்வம் மிக்க முதன்மை அடைவதைக் காணலாம். சக்தியைப் பரம்பொருளாக எமக்கு முதலில் எடுத்துரைப்பது கேனோபநிடதமே. சுவேதாச்வதார உபநிடதம் சக்தி தத்துவம் முழுவதையும் மிக விரிவாகக் கூறுகின்றது. தைத்திரிய உபநிடதம் துர்க்கை, கார்த்தியாயனி, கன்னியாகுமரி என மூன்று வெவ்வேறு பெயர்களாலே சக்தியைக் கூறுகின்றது. அக்கினி தேவனின் ஏழு நாக்குகளுள் இரு நாக்குகளாக முண்டக உபநிடதம் காளி , கராளி என்னும் பெயர்களைக் கூறுகின்றது.

வேத காலத்தின் பிற்பகுதியாகிய உபநிடத காலத்தையும், புராண இதிகாச காலத்தையும் அடுத்தே சைவம், வைணவம், சாக்தம் என்னும் மதங்கள் தனித் தனிப் பிரிவாகத் தோன்றியிருக்கலாம் என நாம் கருதலாம். வேத காலத்தையடுத்து நமது கவனத்தைப் பெறுவது புராண இதிகாச காலமாகும். மார்க்கண்டேய புராணத்தில் வரும் தேவி மகாத்மியம் சக்தியின் பெருமையை நன்கு விரித்துக் கூறுகின்றது. அப்பகுதியில் சக்தி, மகிஷாசுர மர்த்தினியாகக் கூறப்படுகின்றாள். எருமை வடிவினுடைய அசுரனை அவள் அழித்த கதை அதில் இடம் பெறுகின்றது. புராணங்களில் தேவி ஐகன்மாதா, ஜெகதாம்பிகை என உலகமாதாவாகப் புகழப்படுவதைக் காணலாம். பதினெண் புராணங்களுட் பல பகுதிகளில் தேவியின் மகிமை புகழ்ந்து பேசப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் துர்க்கையை வழிபாடு செய்த செய்தி இரு இடங்களிற் கூறப்படுகின்றது. பன்னீராண்டு வனவாசம் முடித்து ஓராண்டு அஞ்ஞாத வாசத்தை மேற்கொண்டு விராட நாட்டினுள்ளே புகும் வேளையில், தருமபுத்திரர் துர்க்கையை வேண்டுதல் செய்வது ஒரு செய்தி. பகவத்கீதை உபதேசிக்கப்படுமுன் யுத்த களத்தில் தங்களுக்கு வெற்றியையளிக்குமாறு அர்ச்சுனன் துர்க்கையை வேண்டுதல் செய்வது மற்றொரு காட்சியாகும். துர்க்கை, காளி எனவும், மகிஷாசுர மர்த்தினி எனவும் போற்றப்படுகின்றாள். போரில் வெற்றியைருளும் தெய்வமாகப் பெண் தெய்வம் - சக்தி, போற்றப்பட்ட வரலாறுகள் சரித்திரத்தில் பலவுண்டு. சங்ககாலத் தமிழ் மக்கள் வெற்றித் தெய்வத்தைக் "கொற்றவை" எனப் போற்றினர். அத்தெய்வத்தைப் பாபிலோனியர் "அனாட்" என வழிபட்டனர். எகிப்தியர் துதித்த வெற்றிக்குரிய பெண் தெய்வம் "ஹாதர் செக்மேட்" என்பதாகும்.

சங்ககாலத் தமிழ் மக்களுடைய வாழ்க்கையை நாம் ஆராய்ந்தால் தாய்த் தெய்வ வழிபாடு அவர்களிடை நிலவியமை நன்கு புலனாகும். கொற்றவை வழிபாடே பழந்தமிழர்களுடைய மிகப் புராதன வழிபாடாகும். கொற்றவை பழையோள் என்ற பெயரால், குறிக்கப்படுவது இதனை நன்கு வலியுறுத்தும். நடுகல் நாட்டி வழிபாடும் வீரவணக்கமும் கொற்றவை வழிபாட்டோடு தொடர்புடைய வணக்கமேயாகும். வெற்றித் தெய்வமாகிய கொற்றவைக்குப் பலிகொடுத்து வழிபாடாற்றினர். வெற்றி பெற்ற வீரர் பலர் தமக்கு வெற்றியளித்த தெய்வத்துக்குக் காணிக்கையாகத் தமது தலையையே அறுத்துப் பலிகொடுத்த செய்திகளையும் நாம் சங்க நூல்களிற் பரக்கக் காணலாம். "காடுகிழாள்" என்ற பெயராலும் கொற்றவை குறிக்கப்பட்டாள். "கொற்றவை நிலை" எனத் தொல்காப்பியம் கூறுவதும் சங்ககாலத்தில் கொற்றவை வணக்கம் பெற்றிருந்த முதன்மையை வலியுறுத்தும்.

பழந்தமிழர் வாழ்வோடு கலந்து வழிபாட்டில் முக்கிய இடம்பெற்ற மற்றொரு தெய்வம் முருகன் ஆகும். முருகனைப் பற்றிக் கூறும்போது அம்முருகனும் கொற்றவையின் மைந்தனாகவே போற்றப்படுவதைக் காண்கின்றோம்.

"வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" என்றும்
"இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"
என்றும் திருமுருகாற்றுப்படை பாடுகின்றது.
"பைம்பூண் சேய் பயந்த மாமோ ட்டுத்
துணங்கையஞ் செல்வி"
என்பது பெரும்பாணாற்றுப்படைச் செய்தியாகும். இது போன்று முருகன், கொற்றவை சிறுவனாகக் கருதப்பட்ட செய்திகள் சங்கச் செய்யுளிற் பரந்து காணப்படுகின்றன.

பிற்பட்ட சங்ககாலத்திலேயே ஆரியச் செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெருகத் தொடங்கிவிடுகின்றது. சங்கம் மருவிய காலத்தில், சமயத் துறையில் இச்செல்வாக்கின் பாதிப்பை நன்கு உணரமுடிகின்றது.
சிலப்பதிகாரத்தில் தமிழருடைய தாய்த் தெய்வமாம் கொற்றவைக்கு ஆரியக் கடவுளாகிய துர்க்கையின் இயல்புகள் ஏற்றிக் கூறப்பட்டுள்ளது. வடமொழிப் புராணம் கூறும் செய்திகள் தமிழிலும் இடம் பெற்று விடுகின்றன.

"அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றி வேற் றடக்கைக் கொற்றவை அல்லள்"
என வாயிற் காவலன் பாண்டியனிடம் சென்று கூறுகின்றான். கண்ணகியின் சீறிய கோலம் துர்க்கையை அவனுக்கு நினைவுட்டுகின்றது. மேலும்

"அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு - சூருடைக்
கானகம் உவந்த காளி தாருகன்
பேருரம் கிழித்த பொண்ணு மல்லள்"

என அவன் தொடர்ந்து கூறுமடிகளில், மார்க்கண்டேய புராணம் கூறும் மகிஷசுரவதம் சுட்டப்படுவதைக் காணலாம்.

சிலப்பதிகாரக் கதை புதியதோர் தாய்த் தெய்வ வணக்கத்தையும் தமிழ் நாட்டுக்களித்துள்ளது. சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வத்துக்குக் கோவிலேடுத்தான். அதனால் தமிழ் நாட்டின் பல பாகங்களிலும் கண்ணகி, தேவியாக வழிபடப்படும் வழக்கம் இன்றுவரை நிலவிவருகின்றது. "கடல் சூழிலங்கை கயவாகு" மன்னனும் கண்ணகி விழாவிற் கலந்து கொண்ட காரணத்தினால் ஈழநாட்டிலும் கண்ணகி வணக்கம் நெடுங் காலமாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. பிறமதத்தினராகிய புத்த மதத்தினரும் "பத்தினித் தெய்யோ" எனக் கூறித் தாய்த் தெய்வத்துக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபாடியற்றி வருவது வியப்பிற்குரிய செய்தியேயாகும்.

சிலப்பதிகாரம் வேட்டுவவரி துர்க்கையைச் சிவனுடைய மனைவியாகவும், நாராயணனுடைய சகோதரியாகவும் கூறுகின்றது. சிங்கதின்மீதும் கலைமானின்மீதும் அவள் ஏறி வருவதாகவும் அது கூறுகின்றது. "பாய்கலைப்பாவை" என்று துர்க்கை போற்றப்படுகின்றாள். "ஞானக் கொழுந்து" என்றும் "மாயவள்" என்றும் இருவேறுபட்ட தன்மைகளோடு அவள் கூறப்படுவதையும் காணலாம்.

குப்தர் காலத்தில் செதுக்கப்பட்ட துர்க்கைச் சிலைகள் சிங்கவாகனத்தில் எறியகோலத்துடன் காணப்படுகின்றன. இரண்டு கரங்களுடன், நான்கு கரங்களுடனும், எட்டுக் கரங்களுடனும், பத்துக் கரங்களுடனும் அச்சிலைகள் காணப்படுகின்றன. இத்தகைய சிலைகளை உதயகிரியிலும் காணமுடிகின்றது. தமிழகத்திலும் பல்லவர் காலத்தின் பின் கல்லிற் சிலைகள் பல செதுக்கப்பட்டன. மகிஷாசுர மர்த்தினி சிலைகளை நாம் மாமல்லபுரம், நாமக்கல், கங்கை கொண்ட சோழபுரம், மடத்துக் கோவில் முதலிய இடங்களிற் காணமுடிகின்றது.

லிங்க வழிபாடும் சிவசக்தி ஐக்கியத்தையே குறிப்பதென்பர். மேலேயுள்ள குறி ஆண் அம்சத்தையும் - சிவனையும், மேலேயுள்ள ஆவுடையார் பெண் அம்சத்தையும் - சக்தியையும், குறிப்பதாக அறிஞர்கள் கூறுவர்.

"சக்தியுஞ் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்குண குணியுமாக
வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கையெல்லாம்
இத்தையும் அறியார் பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார்"

என்று தத்துவ விளக்கஞ் செய்கின்றது. சிவஞானசித்தியார் சிவலிங்க வணக்கத்திலேயே சக்தி வெளிப்படுத்தப்படுத்தலை இதனால் உணரலாம். சக்தி தத்துவத்தின் மகிமையை யாவரும் அறிந்து போற்ற வைத்த பெருமை சங்கராச்சாரிய சுவாமிகளையே சாரும். தேவியின் அழகிய திருக்கோலத்தை அவர்கள் இயற்றிய "செளந்தர்யலகிரி" நன்கு விரித்துரைக்கின்றது. அவர்கள் இயற்றிய அன்னபூர்ணாஷ்டகத்தில்
"அன்ன பூர்ணே சதா பூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்கிய சித்தயர்த்தம் பிட்சாம் தேகிச பார்வதீ"

என வேண்டுதல் புரிகின்றார். எல்லாம் அருளவல்ல லோகமாதாவிடம் பொன்னும், பொருளும், போகமும் வேண்டாது ஞானமும், வைராக்கியமும் பொருந்திய சித்தத்தை அருளுமாறு இரந்து வேண்டுகின்றார். தேவியை மந்திர வடிவிலும், யுந்திர வடிவிலும் அமைத்துப் பூஜை செய்வர். ஆதி சங்கரர் பல கோவில்களில் தேவியின் அம்சமாக ஸ்ரீசக்கரத்தையே பிரதிட்டை செய்வித்துள்ளார். ஸ்ரீசங்கர பூஜை தேவி வழிபாட்டில் ஒரு விஷேட அம்சமாகும்.

திரிசதி (முன்நூறு திருப்பெயர்கள்), லலிதா சகஷ்ரநாமம் (ஆயிரம் திருப்பெயர்கள் கொண்டு இன்று அம்பிகையை அர்ச்சிப்பர். இதன் விளைவாகத் தேவியின் திருப்பெயர்கள் எண்ணிலில்லாதனவாக வளர்ந்து செல்கின்றன.

குமரி, காளி, வராகி, மகேசுரி, கவுரி, மோடி, சுராரி, நிராபரி, மகமாயி
கொடியசூலி. சுடாரணி, யாமளி
குறளுரூப முராரி சகோதரி உலகதாரி, உதாரி, பராபரி , அபிராமி
குரூபராரி விகாரி நமோகரி
சமரநீலி புராரிதன் நாயகி மலைகுமாரி, கபாலி, நனாரணி பரையோகி
சலிலமாரி சிவாய மனோகரி
சவுரி வீரி முநீர்விட ரோஜனி திகிரி மேவு கையாளி, செயாளொரு
சகல வேதமும் ஆயின தாயுமை

எனவரும் திருப்புகழ் அடிகளிற் பரந்துபட்ட தேவியின் திருநாமங்களுட் சில பரவப் படுவதைக் காண்கின்றோம்

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி என்பது போலத்த தலங்கள் தோறும் நாமங்கள் - மூர்த்தங்கள் வேறுபடப் போற்றப்படுகின்றன. தேசங்கள் தோறும், மாகாணங்கள் தோறும் தேவியின் வணக்கம் வெவ்வேறு வடிவிலும், பெயரிலும் மாறுபட்டுச் செல்கின்றது. கருணை பொழியும் வடிவத்திலும், பயங்கர வடிவத்திலும் தேவியை வழிபட்டுவருகின்றனர்.

மகாராஷ்டிரம் - துளசபவானி
காஷ்மீரம் - குசிர பவானி
பஞ்சாப் - ஐவல முகி
குஜராத் - அம்பாஜி
உத்தரப்பிரதேசம் - விந்திய வர்ஜினி
வங்காளம் - காளி
அஜாம் - காங்க்யா
கர்நாடகம் - சாமுண்டி
காஞ்சி - காமாட்சி
மலையாளம் - பகவதி

இவ்வாறு இடத்துக்கிடம் சக்திவழிபாடு பெறும் நாமாந்தரங்களைக் காணலாம்.

சபரர், புளிந்தர், பார்பரர் போன்ற கட்டு வாழ்க்கையினர் சபரி என அழைக்கின்றனர். நக்னசபரி - ஆடையில்லாதவள், பர்ணசபரி - தழையுடை அணிந்தவள் என இருவேறு வடிவில் வைத்துப் போற்றுகின்றார்கள்.

கேரளத்தில் பிராமணி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி என ஏழு வடிவில் (சப்தமாத்திரிகாஸ்) தாய்த் தெய்வத்தை வழிபடுகின்றனர்.

வடநாட்டின் சாக்தர்கள் வாமமார்க்கத்தையே பெரிதும் போற்றுகின்றனர். இவர்கள் அறுபத்து நான்கு கலைகளைக் கொண்ட கெளலம் முதலிய தந்திரங்களை கைக்கொள்வர். தந்திரம் என்றே சாக்தமத நூல்கள் அழைக்கப்படுகின்றன. வாமமார்க்கத்தவர் பலி, ஓமம், தர்ப்பணம், செபம் முதலியவற்றைக் கிரியைகளாகக் கொள்வர். "ம" வில் தொடங்கும் மத்ஸ்யம், மத்யம், மாமிசம், முத்திரை, மைதுனம் என்னும் ஐந்து பொருள்களைக் கொண்டு வழிபட்டால் இவ்வுலக சுகமும், முக்தியும் கிட்டும் என இவர்கள் நம்புகின்றார்கள்

இவர்கள் கொள்கைகளைத் தட்சிணாசாரர் எனப்படும் வைதிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் வேதங்களையும், ஸ்மிருதிகளையுமே தமது நூல்களாகப் போற்றுவர். இவர்கள் ஸ்நானம், சந்தியா வந்தனம், ஐபம், ஹோமம், தேவாராதனை, அதிதிபூஜை என்ற ஆறு கருமங்களையும் கைக்கொள்வர். காயத்திரி மந்திரம் இவர்கள் போற்றும் முக்கிய மந்திரமாகும். பேரின்பத்தை நாடுவதே இவர்கள் குறிக்கோளாகும். ஸ்ரீவித்யை முதலாகச் சொல்லப்படுகின்ற பத்துப் பிரிவுகளையுடைய மகாவித்யை எனப்படும் மந்திரமும் இவர்களுக்குரிய முக்கிய மந்திரமாகும்.

பக்திநெறியே அன்னையின் அருளை அடைவதற்குரிய மிகச்சிறந்த மார்க்கமாகும். அபிராமிப்பட்டருக்காகத் தனது தோட்டினை (காதணி) எறிந்து அமாவாசை திதியில் பூரண சந்திரோதயம் காட்டிய வரலாறு நாம் அறிந்ததே. மிகச் சமீப காலத்தில் வாழ்ந்து ஞானஒளி வீசிய பகவான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளிதேவியையே பூஜித்து வந்தார். அம்மையின் அருளால் அவரியற்றிய அருட்செயல்களும் நாமறிந்ததே. சுப்பிரமணிய பாரதியார் தேவி துதியாகப் பல பாடல்கள் பாடியுள்ளார்.

ஓம் என்ற பிரணவ மந்திர ரூபமாகச் சக்தி விளங்குகின்றாள். மந்திரங்கள் வடிவமாகவும், யந்திரங்களின் வடிவமாகவும் விளங்கும் தேவியை "ஆதிக் சாந்தா" என வரும் அடிகள் அகரம் முதல் சகரம் இறுதியாகவுள்ள ஐம்பத்தொரு அட்சர வடிவினளாகவும் கண்டு துதித்தனர் அன்பர்கள் என்பதைக் காட்டும்.

அகிலாண்ட கோடியீன்றும், கன்னியென மறைபேசும் ஆனந்த ரூபினியாம் அன்னை திருவடிகளுக்கு வணக்கம்.