உடலே தேர்; பொறிபுலன்கள் குதிரைகள்; மனமே கடிவாளம்; அறிவு தேர்ப்பாகன் என்று கூறுகின்றார் சுவாமி விவேகானந்தர். அவ்வாறு பொறிபுலன்களை அடக்கி ஞான உணர்வோடு இவ்வுலகில் சீவன்முத்தர்களாக உலாவந்தவர்கள் சித்தர்கள். அவர்களுட் பலர் பதினான்காம் நூற்றாண்டுக்குப்பின் வாழ்ந்தவர்கள். அவர்கள் பாடிய பாடல்கள் பதினெண் சித்தர் பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவை பல்வேறு சந்தங்களில் அமைந்தவை. அரியதத்துவக் கருத்துக்களை உள்ளடக்கியவை. வாழ்வாங்குவாழ வழிகாட்டுபவை. பலவித மூட நம்பிக்கைகளையும் சாடுபவை. அப்பாடல்களுள் ஏடேழுதினோர் இடைச் செருகலாகவும் சில பாடல்களைப் புகுத்திவிட்டனர் என்பது அறிஞர்கள் கருத்து.

சிவவாக்கியர், அழுகமணிச்சித்தர், குதம்பைச்சித்தர், பாம்பாட்டிச்சித்தர், இடைக்காட்டுச்சித்தர், அகப்பேய்ச்சித்தர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். பட்டினத்தாரும் இவர்களுடன் வைத்து எண்ணப்படுவதைக் காணலாம்.
வெந்தழலில் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
விண்ணவரை ஏவல் கொளலாம்
சந்ததமும் இளமையோடிருக்கலாம் வேறோர்
சரீரத்தினும் குடி புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன் நிகரில் சித்தி பெறலாம்

எனத் தாயுமானவர் கூறுவது போன்ற பல்வேறு சித்துக்களையும் புரிந்தவர்கள் சித்தர்கள். அதையும் விஞ்சிச் "சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது" என்ற அரிய சித்தியையும் பெற்றவர்கள். யோக சமாதியில் இறை தரிசனம் கண்டு இன்புற்றவர்கள்.

மலைகளிலும், வனங்களிலும் சஞ்சரித்த போது தமது ஞான உணர்வினால் இயற்கையை உற்றுணர்ந்து தாவரங்களின் வேர், இலை, பூ, காய், விதை, பட்டை போன்றவற்றின் மருத்துவச் சிறப்பையும் அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் அவ்வாறு கண்டறிந்து பூவுலகுக்கு அளித்த பெரும்பேறே சித்தவைத்தியமாகும்.

"வித்தகச் சித்தர் கணமே" என அச்சித்தர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றார் தாயுமானவர். இவ்வாறு நாம் வணங்கிப் போற்றக்கூடிய பொக்கிஷங்களை எமக்கு அள்ளித் தந்துள்ள சித்தர்களுள் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை அருளியவர் சிவவாக்கியர். அவையாவும் ஞானக் கருவூலங்கள் ஆகும். அவரது பாடல்கள் பற்றிச் சிறிது சிந்திப்போம்.

உள்ளத்திலே இறை சிந்தனையில்லாது நாம் செய்யும் செயல்களும், கூறும் மந்திரங்களும், பூசை முதலியனவும் பயன் தரமாட்டா என்பதை அவர் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.

"இருக்கு நாலு வேதமும் எழுத்தையுற ஓதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான் இரான்"
என்கின்றார்.

"காலை மாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என்பெறும்"
என வினவுகின்றார்.

"நீரை அள்ளி நீரில் விட்டு நீர்நினைத்த காரியம்
ஆரை உன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்?"
என்றும் அவர் வெறும் அனுட்டானங்களைச் சாடுவதைக் காணலாம். அவ்வாறே கோயில் வணக்கத்தையும் அவர் கண்டிப்பதைக் காணலாம்.

"கோயில் ஆவதேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே"
என்கின்றார்.

அந்தக் கருத்திலேயே
"நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாற்றியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"
என்றும் கேட்கின்றார்.

வெளிப்பார்வைக்குக் கோயில் வணக்கத்தைக் குறைகூறுவது போலத் தோன்றினாலும் அக்கருத்தில் அவர் கூறவில்லை என்பதை நாம் உணரவேண்டும். "உனக்கு வெளியே நீ இறைவனைத் தேடாது உனக்குள்ளேயே அவனைத் தேடமுயல்" என்று கூறும் அறிவுரையே அது என்பதைச் சிந்தித்தல் வேண்டும். "உன்னையே நீ எண்ணிப் பாரு" என்ற யோக சுவாமிகளின் கூற்றும் இக்கருத்தினதே.

மூலாதாரத்திலிருந்து எழும் வாயுவைச் சுழுமுனை நாடி வழியாக மேலே எழுப்பி சுவாதிட்டானம், மணிபூரகம் முதலாகச் சொல்லப்படுகின்ற ஏனைய ஆதாரங்களுக்கும் அப்பால் உச்சியிலுள்ள சிதாகாசத்திலே ஈஸ்வர தரிசனத்தை யோகநிட்டையில் கண்டு அனுபவிப்பவர்கள் யோகிகள். அதனால்
“மின் அகத்தில் மின் ஒடுங்கி மின் அதான வாறுபோல்
என் அகத்தில் ஈசனும் யானும் அல்ல தில்லையே”
என்கிறார்
எங்குமாய், எல்லாமாய்ப் பரந்து நிற்கும் இறைவனைத் தம்முள்ளே காண வழியறியாது எங்கெல்லாமோ தேடி மாந்தர்கள் மயங்கித் தம்வாழ்வை வீனாக்குகின்றார்களே என்ற பச்சாத்தாபம் சிவவாக்கியர் பாடல்கள் பலவற்றில் இடம்பெறுவதைக் காணலாம்

“ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாள்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே"

என்று அங்கலாய்க்கின்றார். அதனால்
“காடு, நாடு, வீடு, விண் கலந்து நின்ற கள்வனை
நாடி, ஓடி உம்முளே நயந்துணர்ந்து தாருமே"
என்று அறிவுரை கூறுகின்றார் .

சமுதாயச் சீர்கேடுகளைக் களையவும் சித்தர்கள் முயன்றிருப்பதைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
“பறைச்சியாவதேதடா, பனத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ?”

என்று கேட்டுப் பரிகசிக்கின்றார். சாதி வெறியை ஓடும் உதிரத்தில் வடிந்தொழுகும் கண்ணீரில் தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோ ஐய்யா? என்ற தேசிக வினாயகம்பிள்ளையின் பாடலுக்குக் கரு சித்தர் பாடல்களிற் பல விடங்களிலும் இருப்பதைக் காணலாம்.

காதில் வாளி, காரை, கம்பி, பாடகம், பொன் அல்லவோ என அவ்வணிகலன்கள் வடிவத்தில் அணியும் இடங்களில் பருமனில் பல்வேறு தன்மையவாயிருந்த போதிலும் அவையாவும் பொன்னே என்று கூறும் உதாரணமும் கருதியின்புறத் தக்கது. சாதியா வதேதடா? என்று வினவும் பாடலில் எல்லாருடைய சரீரங்களும் பஞ்சபூதச் சேர்க்கையாலானதே என்று கூறும் திறனும் நோக்கத்தக்கது.

சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் சைவ, வைணவப் பிணக்கும் ஓரளவு நிலவியது. அதனால் ஏற்படும் பூசல்களைத் தவிர்க்கவும் முயல்கின்றார் சிவவாக்கியர்.
"எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதமன்றியே உண்மை இரண்டு இல்லையே"
எனவும் பேதம் உங்களிடையே என்கின்றார்.

அரியுமாகி, அயனுமாகி, அரனுமாகி நிற்பவன் ஒருவனே எனவும் தெளிவுறுத்துகின்றார். உலக வாழ்வில் அழுந்திச் சிவனை மறந்து வாழும் மனிதர்களுக்கு வாழ்வின் நிலைமையை எடுத்துரைக்கும் பாடல்களும் சிந்திக்கத் தக்கவை.
“மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்கள்
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்தழைதிடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாது காணும் உண்மையே"
என்கின்றார்.

பண்டைய நாட்களில் மட்டுமல்ல ஓர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை, அதாவது இப்பொழுது பாவனையில் உள்ள இரும்பு, சீனாச்சட்டி தாச்சிகள் வருவதற்கு முன்னர் உடைந்த பெரிய பானைகளின் ஒரு பகுதியையே ஓடாக வைத்து மிளகாய், பயறு, உளுந்து, மா போன்றவற்றை மக்கள் வறுத்தனர். பானை உடைந்தால் ஓடாகவேனும் பயன்படும். ஆனால் சரீரத்திலிருந்து உயிர் போன பின் உடம்பு "ஓடுபெற்ற அவ்விலை பெறாது காணும்" என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.

"ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்து
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக் காகாதென்று ஆடுபாம்பே"
என்ற பாம்பாட்டிச் சித்தர் பாடலும் இங்கு சிந்திக்கத்தக்கது.

சிவவாக்கியர் பாடல்களிற் பெரிதும் புகழ்ந்து பேசப்படுவது பஞ்சாட்சர மந்திரப் பெருமையேயாகும்.
"நாவெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே
ஆதி அந்தம் மூல விந்து நாதமே சிவாயமே
சிவாயம் அஞ்செழுத்துளே தெரிந்து கொள்ளும் உண்மையே
அஞ்சு கோடி மந்திரம் அஞ்சுளே அடங்கிடும்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே"
என்பன போன்ற கூற்றுக்கள் பஞ்சாட்சரப் பெருமையை எடுத்தியம்புகின்றன.

“ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ துற்றவே"

என்று யாவும் அஞ்செழுத்துள் அடங்கும் சிறப்பை எடுத்துரைக்கின்றார் சிவவாக்கியர்.

சாதாரண மக்கள் உணர்ந்து கொள்ள முடியாத தத்துவக்கருத்துகளை யடக்கியனவாகவும் பாடல்கள் பல அமைந்துள்ளன. ஏனைய சித்தர்களின் பாடல்களிலும் அத்தகைய பாடல்கள் பல காணப்படுகின்றன. யோகநிட்டை, ஆறாதாரம், பிரமரந்திரம், புருவமத்தி, மூலாதாரம், சுழுமுனை நாடி என்பன பற்றிக் கூறுவன சாதாரண நிலையில் உள்ளோர் உணர்ந்து கொள்ள முடியாதவையே. ஆயினும் மிக இலகுவாகத் தத்துவக் கருத்துக்களை உவமைகள் மூலம் உணர்த்தும் அரிய பாடல்களும் பலவுள. உய்த்துணர்ந்து நாம் திருந்தி வாழ வழிகாட்டும் பாடல்களும் பலவுள. சித்தர் பாடல்களின் பெருமையை உணர்ந்து இலகுவான பாடல்களையேனும் மனனஞ் செய்து கொள்வது எமக்குப் பெரும் பயன்தரும்