ஆடிச் சுவாதி சுந்தரமூர்த்தி நாயனாருடைய குருபூசைத் தினமாகும். இத்தினத்தில் அப்பெருமானுடைய வரலாற்றையும், அவரது சைவ உலகம் வாழ்வதற்காக ஆற்றிய அருஞ் செயலையும், ஏனைய அற்புதச் செயல்களையும் நாம் நினைவு கூர்ந்து போற்றி செய்வது எமது கடனாகும்.

திருக்கைலாயத்திலே சிவபிரானது அணுக்கத் தொண்டராக விளங்கும் பேறு பெற்றவர் சுந்தரர். திருப் பாற்கடலிலே தோன்றிய ஆலகாலவிடம் கண்டு பிரம விட்டுணுக்களும், தேவர்களும், பிறரும் அஞ்சி நடுங்கிய போது எம்பெருமானது ஏவல் பெற்றுச் சென்று, அவ்விடத்தைத் தமது உள்ளங்கையிலே அடக்கிக் கொணர்ந்து சிவபெருமானிடம் கொடுத்த அருஞ்செயலையும் செய்தவர் அவர். அதனால் அவர் ஆலாலசுந்தரர் எனவும் பெயர் பெற்றார்.

அத்தகைய பெருமைக்குரிய ஆலாலசுந்தரர் ஒருநாள் மலர் கொய்வதற்காகப் பூஞ்சோலையை அடைந்தார். அங்கே பூஞ்சோலையிலே மலர் கொய்ய வந்த அநிந்திதை, கமலினி என்னும் உமாதேவியாருடைய இருதோழியரைக் கண்டு காதல்வயப்பட்டார்.

"மாதவம் செய்த தென் திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத் தொண்டத் தொகைதரப்
போதுவார் அவர் மேல் மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியிற் கண்மினார்"

என்று மாதவம் செய்த தென்திசையை வாழச் செய்யவும், திருத்தொண்டத் தொகை தரவுமே, திருக்கைலாயத்திலே சுந்தரர் உள்ளத்தில் காதல் தோன்றியது எனப் பாடுகின்றார் சேக்கிழார் பெருமான்.

பூவுலகிலே அவதரித்து அவ்விருவருடனும் இன்பம் நுகர்ந்து மீளுமாறு இறைவன் ஆணையிட்டபோது
"மையல் மானுடமாய் மயங்கும் வழி
ஐயனே தடுத்தாண்டருள் செய்"
என வேண்டி நின்றார் சுந்தரர்.

எம்பெருமான் அருளால், "மாதொருபாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்திலே" திருநாவலூரிலே சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் புத்திரராய்த் தோன்றிப், பின்னர் நரசிங்கமுனையர் என்னும் அரசரது அபிமான புத்திரராய் வாழ்ந்தார் சுந்தரர், நம்பியாரூரர் என்னும் இளமைத் திருநாமத்தோடு.

திருமண மண்டபத்திலே அடிமை ஓலை காட்டித் தடுத்தாட் கொள்ளப்பட்டமையும், திருவெண்ணெய் நல்லூர் வழக்குமன்றம் அடிமையே எனத்தீர்ப்பளித்ததுவும், ஆலயத்தில் இறைவன் மறைந்ததும் சுந்தரர் முற்பிறவித் தொடர்புணர்ந்து உருகிநின்றமையும் யாவரும் அறிந்த செய்திகளே.
"..... நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும்
ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ்பாடுக"
என்று ஆணையிடுகின்றார் பெருமான்.

"கோதிலா அமுதே உந்தன் குணப் பெருங்கடலை நாயேன்
யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுவேன்"

எனச் சுந்தரர் இரங்கி வேண்டிய போது "பித்தன்" என என்னை நீ ஏசியபடியால் அதனையே அடிமுதலாக வைத்துப் பாடு என்ற அருள்வாக்குக் கேட்டுப் "பித்தாபிறைசூடி" எனத் தொடங்கிப் பதிகம் பாடினார் சுந்தரர். இறைவனையே ஏசியமையால் "வன்தொண்டன்" என்ற திருநாமமும் பெற்றார். தலங்கள் தோறும் சென்று வழிபாடாற்றி வந்த சுந்தரர் திருவாரூர்ப் பெருமானின் திருக்கோயிலை அடைகின்றார். அங்கே "பரவையார்" என்ற திருப்பெயரோடு அவதரித்திருந்த கமலினியாரைக் கண்டு அதிசயிக்கின்றார்.
"கற்பகத்தின் பூக்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ....
அற்புதமோ, திருவருளோ அறியேன்"
என்று அதிசயித்து நிற்கின்றார்.

அவ்வாறே சுந்தரரின் அழகிய திருக்கோலத்தில் தனது உள்ளத்தைப் பறிகொடுத்த பரவையாரும்
"முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால்
தன் நேரில் மாரனோ, தார்மார்பில் விஞ்சையனோ..."
எனக் காதல் உணர்வால் துடிக்கின்றார். இறைவன் அருளால் இருவருக்கும் சிறப்பாகத் திருமணம் நடைபெறுகின்றது.

"தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்" என்று இறைவனே திருவாய் மலர்ந்ததோடு, என்றும் தாம் தடுத்தாட் கொண்ட மணவாளக் கோலத்துடனேயே இருக்குமாறும் கட்டளையிடுகின்றார். இதனால் "தம்பிரான் தோழர்" என்று சுந்தரர் அழைக்கப்பெறுகின்றார்.

"மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரண் எனத் தொழுமே"

எனக் கூறுகின்றது சைவசித்தாந்தம். சிவனடியார்களைச் சிவனாகவே கருதி வழிபடும் வழக்கம் இன்று சைவசமய வழிபாட்டில் முக்கிய இடம்பெறுவதோர் அம்சமாகும். அடியார் பக்தியில் சிறந்து விளங்கியவர் சுந்தரர். திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருத்தொண்டு செய்த தலம் எனத் திருவீரட்டத்தான ஆலய வீதியில் கால்பதிக்க அஞ்சி, அதன் வெளிவீதியிலுள்ள ஒரு மடத்திலேயே அவர் தங்கியிருந்து ஆலய வழிபாடு செய்கின்றார். அவ்வாறே ஞானசம்பந்தப் பெருமான் அவதரித்த சீர்காழித் திருத்தலத்திலும் கால்பதிக்க அஞ்சுகின்றார் சுந்தரர். இவை அடியார்கள் மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பையும், அவர்கள் மேல் வைத்திருந்த பக்தியையும் எமக்கு நன்கு எடுத்துக்காட்டுகின்றன.

ஒருநாள் அவர் திருவாரூர்த் தியாகேசப் பெருமானைத் தரிசிக்க அங்குள்ள ஆலயத்திற்குச் செல்கின்றார். அங்குள்ள தேவாசிரிய மண்டபத்தில் அடியார்கள் பலர் அமந்திருக்கின்றனர். மானசீகமாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தி ஆலயத்தினுள்ளே செல்கின்றார். சிந்தனை முழுவதிலும் அடியார்களைப்பற்றிய எண்ணமே நிறைந்திருக்கின்றது. அடியார்களுக்குத் தான் அடியான் ஆகும் நாள் எந்நாளோ என்ற ஏக்கம் பிறக்கின்றது. அவர்களைப் பாடுமாறு இறைவனே "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என அடியும் எடுத்துக் கொடுக்கின்றார். அவ்வடியையே முதலடியாகக் கொண்டு "திருத்தொண்டத் தொகை" பாடுகின்றார் சுந்தரர். அதில் அறுபது தனியடியார்களும், ஒன்பது தொகையடியார்களும் இடம் பெறுகின்றனர். "தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர" என்ற அவருடைய அவதார நோக்கம் நிறைவேறுகின்றது.

சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகை பதினொரு பாடல்களைக் கொண்டது. அதனை மேலும் சிறிது விரித்துத் "திருத்தொண்டர் திருவந்தாதி" பாடினார் நம்பியாண்டார் நம்பி. அதில் தொண்ணுற்றைந்து பாடல்கள் இடம் பெறுகின்றது. பெரிய புராணம் தோன்றுவதற்குச் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியுமே மூலமாகும். திருத்தொண்டத் தொகை கூறும் அறுபது நாயன்மார்களுடன் சுந்தரரையும் அவருடைய தந்தைதாயாரையும் சேர்ந்து அற்பத்து மூன்று நாயன்மார்களுடைய வரலாறு கூறுவதாகப் பெரியபுராணம் அமைகின்றது.

பல அடியார்களது வரலாறு கூறும் பெரியபுராணத்தின் காவிய நாயகனாக சுந்தரரையே சேக்கிழார் அமைக்கின்றார். நூலின் பல்வேறு பகுதிகளிற் சுந்தரர் வரலாறு இடம்பெறுகின்றது. திருமலைச்சருக்கத்துடன் ஆரம்பமாகும் நூல் வெள்ளையானைச் சருக்கத்துடன் முடிவடைகின்றது. அதாவது திருக்கைலையிலிருந்து பூவுலவுக்கு வந்த வரலாற்றுடன் தொடக்கி மீண்டும் திருக்கைலாயத்திற்குச் சென்ற வரலாற்றுடன் சுந்தரரது வரலாறு கூறுவது போன்றே பெரியபுராண அமைப்பு முறை அமைந்துள்ளது. மேலும் தடுத்தாட்கொண்ட புராணம், ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், சேரமான் பெருமாள் நாயனார் புராணம் என்பவற்றிலும் சுந்தரர் வரலாறு தொடர்ந்து கூறப்படுவதையும் நாம் அவதானிக்கலாம்.

ஞாயிறு ஊரிலே சங்கிலியாரைக் காண்கின்றார் சுந்தரர். பூர்வஜென்மத் தொடர்பால் அவர்பால் உள்ளம் ஈர்க்கப்படுகின்றது. "தன்னைப் பிரிந்து செல்லமாட்டேன்" எனச் சுந்தரர் சத்தியம் செய்து தந்தால் மாத்திரம் திருமணத்திற்குச் சம்மதிப்பதாகக் கூறுகின்றார் சங்கிலியார். "எம்பெருமானே நான் திருக்கோயிலிலே வந்து சத்தியம் செய்யும்போது நீர் மூலஸ்தானத்தில் இல்லாது வீதியிலுள்ள மகிழமரத்தடியில் இருத்தல் வேண்டும்" என வேண்டுகின்றார் சுந்தரர். அதற்குச் சம்மதித்த இறைவன் சங்கிலியார் கனவில் தோன்றி மகிழமரத்தடியில் சத்தியம் செய்ய வைக்கின்றார். சத்தியத்தை மீறியமையால் சுந்தரர் கண்ணிழந்து வருந்துகின்றார். முதலில் இடது கண்ணும் பின்னர் வலது கண்ணும் பாடிப் பெறுகின்றார்.

சங்கிலியாருடன் கொண்ட தொடர்பறிந்து கோபம் கொண்ட பரவையார் சுந்தரரை ஏற்க மறுக்கின்றார். தோழனுக்காக பரவையிடம் இருமுறை தூது சென்று அவர்களை இணைத்து வைக்கின்றார் இறைவன். இறைவனைச் சுந்தரர் தூதனுப்பிய செய்தி கேள்விப்பட்டுச் சினங் கொள்ளுகின்றார் ஏயர்கோன் கலிக்காம நாயனார். இறைவன் கலிக்காமருக்குச் சூலைநோய் கொடுப்பதும், சுந்தரராலேயே அது தீரும் எனக் கனவில் கூறுவதும், கலிக்காமரின் வருகையறிந்து வாளால் வயிறு கீறிக் கலிக்காமர் இறப்பதும், அவ்வாளாலேயே தம்மை மாய்க்கச் சுந்தரர் துணிவதும், உயிர்த்தெழுந்த கலிக்காமர் சுந்தரர் கையைப் பிடித்துத் தடுப்பதும், ஒருவரையொருவர் தழுவி வணங்குவதும், தோழனுக்காக இறைவன் ஆடிய திருவிளையாடல்களாகும். "தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்குடனாகி" என இப்பருங்கருணைத் திறனை நினைந்துருகுகின்றார் சுந்தரர்.

உடையவன் இறைவன். அவனுடைய உடைமை தம்மை அவனுக்கே அர்ப்பணித்துவிட்ட பக்தர்கள். தம்முடைய உடைமையைப் பாதுகாப்பது அவனுடைய பாரமாகிவிடும். அதனால் சுந்தரரின் தேவைகளை அறிந்து நிறைவு செய்ய வேண்டிய கடப்பாடும் இறைவனையே சேர்ந்துவிடுகின்றது. குண்டையூர்க்கிழார் கொடுத்த நெல்லை பரவையிடம் சேர்த்தமை, செங்கற்களைப் பொன்கட்டிகளாக்கியமை, திருமுதுகுன்றத்தில் ஆற்றிலிட்ட பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் சேர்ப்பித்தமை, போன்றவையாவும் பாரம் ஏற்றதின் வெளிப்பாடுகளேயாகும். சுந்தரர் வழிநடந்திளைத்தபோது தண்ணீர்ப் பந்தலும் போதிசோறும் வைத்து அயர்வு தீர்த்தமையும் உடைமையைக் காக்கவேண்டிய உடையவன் செயலே எனலாம்.

அதனால் சுந்தரர்
"தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் சார்பினும் தொண்டர் தருகலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தலால் இடர் கெடலுமாம்
அம்மையே சிவா லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுறவில்லையே"

என்று எமக்கு அறிவுரை கூறுகின்றார். இம்மையே தரும் சோறும் கூறையும் அதுமாத்திரமா அம்மையில் சிவலோகமும் கிட்டும். ஆதலில் பொய்மையாளரைப் பாடாது எம்பெருமானையே பாடுங்கள் என்கிறார்.

"பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானை"
எனவரும் தேவார அடிகளும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.

சிறுகுழந்தைகள் வயிற்றிலும், முகத்திலும் உதைவதும், அடிப்பதும், கூடப் பெற்றோர்க்குப் பெருமகிவூட்டும் செயல்களாகும். அவ்வாறு உன்னடியவர்கள் கல்லால் எறிந்தாலும், செருப்பால் உதைத்தாலும், ஏசினாலும், திட்டினாலும், இவை போன்ற பல்வேறு “குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும்
கொள்கை கண்டு நின் குரைகழல் தொழுதேன்"
என்கின்றார். தொழுதது மாத்திரமன்று பூரணமாக உனக்கே என்னைத் தந்துவிட்டேன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்கின்றார்.

"விற்றுக் கொள்வீர்; ஒற்றியலேன்; விரும்பியாட்பட்டேன்" எனக் கூறுவது அப்பெருமானுக்கே ஆட்பட்ட பூரண சரணாகதி நிலையைப் புலப்படுத்துகின்றது.

சுந்தரர் செய்த அற்புதங்களும் இத்தினத்தில் நாம் நினைவு கூறத் தக்கன. முதலையுண்ட பாலகனை மீட்க "உரைப்பார் உரையுகந்து" எனத் தொடக்கி "காரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே" எனத் திருப்புக் கொளியூரிலுள்ள அவிநாசிப் பெருமானை வேண்டிப் பாடிக் கடந்தகால வளர்ச்சியோடு பிள்ளையை முதலை உமிழ வைத்த அற்புதம் எண்ணியெண்ணி வியப்புற வைப்ப தொன்றாகும்.

சேரமான் பெருமாளின் வேண்டுதலை ஏற்று அவருடன் சேரநாட்டுக்குச் செல்லப் புறப்பட்டபோது காவேரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஓடங்கள் செல்லமுடியாத வெள்ளப்பெருக்கு. சுந்தரர் பெருமானை வேண்டிப் பாட, காவிரியாறு இரண்டாகப் பிரிந்து, இருவரும் கடந்து செல்ல வழி விட்டமையும் நினைவு கூறத்தக்க தொன்றாகும்.

ஒரு திருமணத்தை மணப்பந்தலில் வந்து ஒலைகாட்டித் தடை செய்த இறைவனைக் கொண்டே பரவையாரையும், சங்கிலியாரையும் தம்மோடு சேர்ப்பிக்க வைத்த சுந்தரர் பெருமையை "ஓரு மணத்தைத் தடைசெய்து வல்வழக்கிட்டுரை செய்த உவனைக் கொண்டே இரு மணத்தை" நிறைவேற்றுவித்த பெருமான் என்று பாடுகின்றார் சிவஞான முனிவர்.

சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் எழாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன. அப்பதிகங்கள் இறைவனோடு தமது உள்ளத்தைச் சுந்தரர் இணைத்து நின்று பாடியவை என்பதற்குச் சான்றாக அமைகின்றன. நால்வர் பெருமக்களையும், சைவசமய நாற்பாதங்களாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிகளிலும் வாழ்ந்தவர்களாகக் குறிப்பிடுவது மரபு. அம்மரபில் யோக நெறியில் வாழ்ந்தவராகச் சுந்தரர் குறிப்பிடப்படுகின்றார். மனையாளுடன் கலவியின்பம் தூய்த்தமையையும் "பன்னாளும் பயில் யோகம்" என்றே சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார்.

சிதம்பரத் திருத்தலத்திற்குச் சென்ற சுந்தரர் நடராசப் பெருமானின் ஆனந்த தாண்டவக் காட்சியை ஆனந்த பரவசராய் நின்று தரிசித்த நிலையை,
"ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப் பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையை ஆகக் குணமொரு மூன்றும்
திருந்து சாத்வீகமே யாக
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப் பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்"

என்று அருமையாகச் சித்தரித்துக் காட்டுகின்றது பெரியபுராணம்.

தமது பதினெட்டாவது வயதிலே சுந்தரர் கைலையை அடைந்தார் என்பர். இறைவன் விண்ணுலகிலிருந்து வெள்ளையானையைப் பூவுலகுக்கு அனுப்பினார். திருவஞ்சைக் களம் என்னும் திருப்பதியில் நின்று தம்மை அழைத்தருளுமாறு வேண்டித் "தலைக்குத் தலைமாலை" என்னும் திருப்பதிகம் பாடிய போதே அவ்வற்புதம் நிகழ்ந்தது. தேவர்கள் வந்து தமது தோழராகிய சுந்தரரை வெள்ளையானையில் ஏற்றிச் செல்வது கண்டு, தாம் ஏறிவந்த குதிரையின் காதில் சேரமான் பெருமாள் நாயனார் ஸ்ரீ பஞ்சாட்சரத்தை ஓத, அக்குதிரையும் வானில் எழுந்து வெள்ளையானையின் அயலிற் கூடி விண்ணுலகம் சென்றதாக வரலாறு கூறுகின்றது.

இக்காட்சியைக் காணும் பேறு கிட்டவில்லையே என எண்ணி ஏங்கி நிற்கின்றார் வடலூர் வள்ளலாராம் இராமலிங்க சுவாமிகள். திருவருட்பாவில் இடம் பெறுகின்ற அப்பாடல் வருமாறு:
"வான் காண இந்திரனும் மாலயனும் மாதவரும்
தான் காண இறையருளால் தனித் தவள யானையின் மேல்
கோன் காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
நான் காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே"

இவ்வாறு சென்ற சுந்தரர் திருகைலாய மலையை நெருங்கும் போது ஒரு ஒளிப் பிழம்பாக இறைவனை நோக்கிச் செல்கின்றார். அம்மலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்த உபமன்யு முனிவர் எழுந்து சிரமேற் கூப்பிய கையினராய் அந்த ஒளிப் பிழம்பைத் தொழுது நிற்கின்றார். உடனிருந்த முனிவர்களும் எழுந்து தொழுகின்றனர். சிவபெருமானைத் தவிர வேறொருவரையும் தொழுதறியாத முனிவர், ஒளிப்பிழம்பு கண்டு தொழுதது அவர்களுக்கு ஆச்சரியத்தை விளைக்கின்றது. உபமன்யு முனிவரிடையே கேட்டுவிடுகின்றனர் காரணத்தை. சிவன் வேறு, சுந்தரர் வேறு என்றற்ற நிலையையும், அவர் வரலாற்றையும் உபமன்யு முனிவர் அந்த முனிவர்களுக்கு எடுத்துரைப்பதான அரிய உத்தியைக் கையாண்டு பெரியபுராணத்தைத் தெய்வத் தமிழில் எடுத்துரைக்கும் சேக்கிழார் பெருமையும் இத்தினத்தில் நாம் நினைவுகூர வேண்டியதொன்றாகும்.

பெரியபுராணம் தோன்றிச் சைவமக்களுக்கு வாழ்வாகவும், வழிகாட்டியாகவும் விளங்க வேண்டுமென்பதற்காகக் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அவதரித்துத் திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகளது பெருங்கருணையை நினைந்து "வாழி திருநாவலூர வன்றொண்டர் பதம் போற்றி" என வணங்கி வாழ்த்தி நிற்போமாக.

வித்துவான் சி. குமாரசாமி