உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப் போற் கலைப் பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்.
இங் கமரர் சிறப்புக் கண்டார். (பாரதியார்)

இந்நூலில் உ ள்ள ஆக்கங்கள் யாவும் சிறுவர் முதல் முதியவர் வரை விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் இலகு தமிழ் உரைநடையில் எழுதப்பட்டுள்ளன. மரபு வழித் தமிழையும் இலக்கண இலக்கியங்களையும் சமய நூல்களையும் நுணுகிக் கற்றதன் வெளிப்பாடாக இக் கட்டுரைகள் மிளிர்கின்றன.

வானொலி ஒலிபரப்புக்காகவும், நாட்டிய நாடகமாக நடிப்பதற்கும் என எழுதிய கையெழுத்துப் பிரதிகளினதும், வேறும் சில நூல்களில் முன்பு எழுதியிருந்த கட்டுரைகள் சிலவற்றினதும் தொகுப்பாகவே இந் நூல் வெளி வருகின்றது.

தெய்வத் தமிழையும் திருமுறைச் செல்வங்களையும் இரு கண்களாகப் போற்றிய எம் தந்தையின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் ஆக்கங்களையே தொகுத்து வெளிவரும் "வித்துவம்" என்னும் நூலை எங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கிய எங்கள் தெய்வத்துக்குச் சமர்ப்பணமாக்குகின்றோம்.

இந் நூலுக்கு உரை எழுதிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கும் திரு.கு.சோமசுந்தரம் அவர்களுக்கும் இந் நூலை அழகுற அச்சிட்டுதவிய பதிப்பகத்தாருக்கும் நன்றிகள் பலப்பல. இந் நூல் உருவாகுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் மிகப்பல.

குடும்பத்தினர்