திரு. சின்னையா நல்லையா

Full Name: சின்னையா நல்லையா
Title: ஆசிரியர்‏
Born: 11/06/1920 நயினாதீவு
Native: நயினாதீவு
Residence: Canada
Occupation: ஆசிரியர்‏
Education:
Awards:
Spouse: சொர்ணாம்பாள்

வாழ்க்கை வரலாறு

பிறப்பு

இவர் மங்களநாயகம் சின்னையா தம்பதியினருக்கு புத்திரனாக 1920 ஆம் ஆண்டு ஆனி மாதம் 11 ஆம் திகதி பிறந்தார்.

கல்வி

இவருக்குத் தில்லையம்பல வித்தியாசாலை தலைமை ஆசிரியர், திரு வே விசாகர் அவர்களால் ஐந்தாம் வயதில் ஏடு தொடக்கப்பட்டது. இவர் தனது ஆரம்பகால கல்வியை (முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை) தில்லையம்பல வித்தியாசாலையில் (நயினாதீவு நாகபூஷணி வித்தியாசாலை) ஆரம்பித்தார். அப்போது அப்பாடசலையில் ச. ந. கந்தையா (பெரிய வாத்தியார்) தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் அங்கே 8ஆம் ஆண்டுவரை கல்விகற்றார். 8ஆம் வகுப்பு என்ற கனிஷ்ட வித்தியாலயத்தராதரப்பரீட்சை அரசினர் கல்விக்காரியாலயப் பரீட்சைப் இரண்டும் பொதுப்பரீட்சையாகவே 1933ம் ஆண்டு நடாத்தப்பட்டது. அப்பரீட்சையில் வெற்றி பெற்ற முதலாவது மாணவர் திரு.சின்னையா நல்லையா ஆவார்.

பின்னர் 15 ஆவது வயதில் அகில இலங்கை சிரேஷ்டகல்வித்தராதரப்பத்திர வகுப்பை கோப்பாய் சாதனாபாடசாலையில் பெற்றுக்கொண்டார். அகில இலங்கை ஆசிரியர் தராதரப்பத்திரப் பரீட்சையில் திருநெல்வேலி முத்து தம்பிவித்தியாசாலையிற்கற்று வெற்றி பெற்றார். அதிலிருந்து திருநெல்வேலி அசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பிரவேசப்பரீட்சையில் 1937ம் ஆண்டு முதலாம் மாணவராகத்தெரிவு செய்யப்பட்டார்.

கோப்பாய் அரசாங்கப் பயிற்சிக் கல்லூரியில் (1935) சேர்ந்து கல்விகற்றார். 1939ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 1ம் திகதி பயிற்சிக்கப்பட்ட ஆசிரியராக்கப்பட்டார். இவர் தனது 19 ஆம் வயதினிலேயே நன்கு பயிற்றப்பட ஆசிரியராக திகழ்ந்தார். பயிற்றப்பட்ட ஆசிரியராகப்பயிற்சி பெற்றுக்கொண்ட போது அக்கல்விசாலையிற் கற்பித்தவர்கள் அக்கலாசாலை அதிபர் உயர்திரு.சி.சுவாமிநாதன், உபஅதிபர் உயர்திரு.பொ.கைலாசபதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகியவர்கள். அவர்கள் கொடுத்திருந்த நற்சாட்சிப்பத்திரங்களில் ஆசிரியப்பயிற்சிக்குரிய பாடங்கள் எல்லாவற்றிலுமே முதலாம் மாணவனாக மதிக்கப்பட்டவர் திரு.சி.நல்லையா. இவர் ஆரம்பகால பிரவேச பண்டிதர் வகுப்பில் வே. கந்தையா ஆசிரியரோடு கல்வி பயின்றார். பின்னர் பால பண்டிதர் மற்றும் பண்டிதர் பட்டங்களையும் பெற்றார். இவர் பயிற்சிக் கல்லூரியில் எல்லாப்பாடங்களிலும் படிப்பித்தல் முறையிலும் விசேட சித்தி பெற்றார். நயினாதீவு மாணவர்களான திரு.சின்னையா நல்லையா, திரு.வே.கந்தையா என்ற இரு மாணவர்களே யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கத்தால் நடாத்தப்பட்ட அகில இலங்கை பிரவேச பண்டிதர்ப்பட்டம் பெற்றவர்கள். அதன் பின்னர் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கத்தால் நடாத்தப்பட்ட அகில இலங்கை பாலபண்டிதர்ப்பட்டமும் பெற்றுப் கொண்டவர் திரு.சின்னையா நல்லையா. அப்பரீட்சையில் ஒரு விசேடபரிசில் யாழ்ப்பாணச்சரித்திரம் என்ற பாடத்தில் அகில இலங்கையிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றதனால் இவருக்கு வழங்கப்பட்டது.

தொழில்

சைவ வித்தியா விருதிச்சங்க முகமையாளரான இராஜரட்ணம் இவரது திறமையைக் கண்டு இவரை இவர் படித்த நாகபூசணி வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராக நியமித்தார். ஒரு மாதம் அங்கு சேவை ஆற்றியபின் புங்குடுதீவு இராஜராஜேஷ்வரி (கண்ணகியம்மா) வித்தியாசாலையில் தலமை ஆசிரியராக நியமனம் பெற்றார், பின்னர் எழுவதீவு முருகவேள் வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராக கடமையாற்றினார், அதன் பின்னர் முதலைபாலி அரசினர் பாடசாலையில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார், அடுத்து கல்கின்ன அரசாங்க மகா வித்யாலயத்தில் 1941 இல் இருந்து தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். அக்காலத்தில் அவருடைய மாத ஊதியம் 39 ரூபாய் ஆகும், இதன் தற்கால பெறுமதி எறக்குறைய 39 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனைத் தொடர்ந்து இவர் பல பாலசாலைகளில் தலைமை ஆசிரியராகக் கடமை ஆற்றினார். இவர் அரசாங்க பாடசாலைகளில் தலமை ஆசிரியராக நியமித்த வரலாறு கீழே தரப்பட்டுள்ளது.

 • 1. புத்தளம் முதலைப்பாளி அரசினர் தமிழ்ப்பாடசாலை தலமையாசிரியர் (1941 – 1942)
 • 2. கண்டி கல்ஹின்னை அரசினர் தமிழ்ப்பாடசாலை தலமையாசிரியர் (1943 – 1951)
 • 3. புத்தளம் கரைத்தீவு அரசினர் அரசினர் தமிழ்ப்பாடசாலை தலமையாசிரியர் (1951 – 1953)
 • 4. மாத்தளை உக்குவௌ அரசினர் தமிழ்ப்பாடசாலை தலமையாசிரியர் (1954 – 1957)
 • 5. மாத்தளை மண்தண்டாவெல அரசினர் தமிழ்ப்பாடசாலை தலமையாசிரியர் (1957 – 1959)
 • 6. வவுனியா கரையாமுள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ்ப்பாடசாலை தலமையாசிரியர் (1959 – 1961)


இவர் உக்குவளை அரசாங்க பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றிய சமயத்தில் தமது பாரியாரோடு சேர்ந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்ட படிப்பில் தேர்வெழுதி விசேட சித்தி பெற்று இருவரும் பி. ஏ. பட்டமும் பெற்றனர், அத்தோடு ஆங்கில எஸ். எஸ். எல். சி. தேர்வெழுதி விசேட சித்தி பெற்றார்.

இதன்பின் இவர் வட்டாரக்கல்வி அதிகாரியாகப் பல இடங்களில் நியமிக்கப்பட்டார். 1961 ஆம் ஆண்டு (Hatton) தலவாக்கொல்லையில் சேக்கியூற் எடுகேசன் ஒபிசர் (Circuit Education Officer) ஆக உயர்வு பெற்று கடமையாற்றினார். பின்னர் முல்லைதீவில் சேக்கியூற் எடுகேசன் ஒபிசர் ஆக கடமையாற்றினார். இவர் வட்டாரக் கல்விப்பரிசோதகராக நியமித்த வரலாறு

 • 1. தலவாக்கொல்லைக் கல்வி வட்டாரம் (1961 – 1965)
 • 2. முல்லைத்தீவுக் கல்வி வட்டாரம் (1965 – 1968)
 • 3. ஊர்காவற்துறைக் கல்விவட்டாரம் (தீவுப்பகுதி) (1968 – 1971)
 • 4. வவுனியா கல்விவட்டாரம் (1971 –)
 • 5. யாழ்ப்பாணக் கல்விவட்டாரம்


இதன்பின் இவர் கல்வித்திணைக்களக்கல்வி அதிகாரியாக உயர்வு பெற்று முதலில் வவுனியா கல்வித்திணைக்களத்தில் கல்வி அதிகாரியாக 1973 இலிருந்து 1976 வரை பணியாற்றிப், பின்னர் 1976 முதல் 1979 வரை யாழ்ப்பாணம் கல்வித்திணைக்களத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார்.

திரு நல்லையா அவர்கள் தான் தலைமையாசிரியராய் இருந்தபோதும், வட்டாரக் கல்வியதிகாரியாக இருந்த போதும், பின் பிரதேசக் கல்விப்பணிப்பாளராகச் சேவையாற்றியபோதும், தன்னால் செய்யக்கூடிய சேவைகள் எதையும் தவறவிடமால் செய்து மகிழ்ந்தார். அவர் பாடசாலைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் செய்த சேவைகள் அளப்பரியன. சேவையே தன் மூச்சாக வாழ்ந்த ஒரு பெருமனிதர்அவர். தான் செய்த சேவைகளை நினைத்து இன்றும் மகிழ்ந்து வாழ்கிறார் என்றால் மிகையாகாது.

1979 ஆம் ஆண்டு தமது சேவையில் இருந்து இளைப்பாறிய இவர் 1981 ஆம் ஆண்டு பாரியாரோடு கனடாவை வந்தடைந்தார்.

இல்லறம்

இவர் நயினாதீவு சொர்னாம்பாளை 1943 ஆம் ஆண்டு திருமணம் செய்து அதன் பேறாக டாக்டர் சிவானந்தன்(1945) மகபேறு மருத்துவ நிபுணர் (கொழும்பு மருத்துவ பல்கலைக் கழகம்), இயந்திர பொறியியலாளர் சிவனாதன்(1946), கட்டிட(Civil) பொறியியலாளர் சிவனேசன்(1948), மருத்துவ செவிலி (Nurse) சிவராணி (1950), கணணி நிபுணர் (Computer Consultant) சிவமணி(1951), கணக்காளர் சிவராசன்(1952), போக்குவரவுதுறை அதிகாரி சிவாஜி(1956), சிவவாணி(1957), சிவவேணி(1958), சிவரமணி(1961), சந்திரா(1960) ஆகியோரைப் பிள்ளைகளாகப் பெற்றார்.

இவர் தற்பொழுது கனடா ஒன்ராரியோ மாநிலத்தில், மிஸ்சிசாகா எனும் இடத்தில் தனது துனைவியாருடனும் உறவினருடனும் வசித்துவருகின்ரார்.

ஆக்கம்: கோபாலசுந்தரம் (S. Gopalasundaram)
Reviewed By: Dr. Sumathy Ilango