Mr. Somasundaram Thillainathan

Full Name: சோ.தில்லைநாதன்
Title:
Born:
Native: நயினாதீவு
Residence: கொழும்பு
Occupation: ஆசிரியர்‏, அதிபர்
Education: B.A., Dip. in Edu., SP.Tr.(Primar), SLPS-I
Awards:
Spouse:

வேலணைக் கோட்டக்கல்வி அலுவலர் உயர்திரு. சோமசுந்தரம் தில்லைநாதன் (B.A., Dip. in Edu., SP.Tr.(Primar), SLPS-I )

சேவை விபரம்

1. இ/பெல்மதுளை தமிழ் வித்தியாலயம் இ உதவி ஆசிரியர் ( 16/01/1970 – 31/12/1979 )
2. இ/ஒபத்தா அ.த.க.வித்தியாலயம் பதில் அதிபர் ( 01/01/1980 – 02/05/1982 )
3. யா/நயினாதீவு ஸ்ரீ நாகபூஷனி வித்தியாலயம் உதவி ஆசிரியர் ( 03/05/1982 – 19/09/1982 )
4. யா/நயினாதீவு ஸ்ரீ கணேச வித்தியாலயம் உதவி ஆசிரியர் ( 20/09/1982 – 31.12.1988 )
5. யா/நாவாந்துறை றோ.க.வித்தியாலயம் உதவி ஆசிரியர் ( 01/01/1989 – 31/10/1990 )
6. (ஐ) யா/நயினாதீவு மகா வித்தியாலயம் அதிபர்
(ஐஐ) நயினாதீவு கொத்தணிப் பாடசாலைகள் கொத்தணி அதிபர்.(நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு)
(ஐஐஐ) பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கைநெறி சிரேஷ்ட விரிவுரையாளர் ( N.ஐ.நு.தீவகநிலையம்) 01/01/1990 – 24/11/1996
7. நெடுந்தீவு கோட்டக்கல்வி பணிமனை கோட்டக்கல்வி அலுவலர் ( 25/11/1996 – 10/01/1999 )
8. வேலணைக் கோட்ட கல்விப் பணிமனை கோட்டக்கல்வி அதிபர் ( 11/01/1999 – 28/02/2007 )

தொடர்ந்து கல்வித் தொண்டாற்ற வாழ்த்துபவர்கள்

தொடந்தும் கல்வித்தொண்டாற்ற வேண்டும் சிறந்த ஓர் ஆசிரியரால்தான் அதிபராக, நிர்வாக சிறப்பாகக் கடமையாற்றலாம் என்பதற்கு முன்னுதாரணமானவர் வேலணைக்கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.சோ.தில்லைநாதன். ஆரம்ப வகுப்புப் பிள்ளைகளுக்கு அக்காலத்திலேயே தேர்ச்சிகள் பலவற்றையும் ஊட்டி நன் மாணவராக்கினார். அதனைத் தொடர்ந்து அவர் மேல் வகுப்பு மாணவர்களுக்கும் கல்வியறிவைப்புகட்டிச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார்.இதன் பயனாக கடவுளால் வழங்கப்பட்ட பெறுமதி மிக்க பரிசுதான் இலங்கை அதிபர் சேவை வகுப்பு 1 ஆகும்.நயினாதீவு மகா வித்தியாலயத்தில் சிறந்த அதிபராகக் கடமையாற்றி அப்பகுதி மாணவர்கள் சிறந்த சமூகவியல்பினராக உதவினார் என்றால் மிகையாகாது. கஷ்டப் பிரதேசமான நெடுந்தீவில் கோட்டக்கல்வி பணிப்பாளராகச் சிறப்புற கடமையாற்றிய திரு.சோ.தில்லைநாதன், வேலணைக்கோட்டத்திலும் தன் முத்திரையைப் பதித்துள்ளார்.அவர் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கல்வித்தொண்டாற்ற வேண்டும் என்பது கல்விச் சமூகத்தினரின் வேண்டுகோளாகும்.ஓய்வு காலத்திலும் கல்வித் தொண்டாற்றி சிறச்த தேகாரோக்கியத்துடன் கடமையாற்ற வாழ்துகின்றேன்.
வே.தி.செல்வரத்தினம்
மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்டம்.

மிக நல்ல மனிதர்

"என்ன விடயமானாலும், எந்தப்பிரச்சனையானாலும் தில்லைநாதன் 'சேர்'இடம் கதைத்தால் நல்லது; அவர் சொல்வது சரியாக இருக்கும்.' என்ற அபிப்பிராயம் தீவக கல்வி வலயத்தில் பலரிடம் உண்டு. இவருடன் பழகிய சில மாதங்களுக்குள் இவரின் நற்பண்புகளைக் கண்டு வியப்படைந்தேன். எண்ணத்தால் செயலால் நல்லதையே செய்ய வேண்டும் என்று விரும்பியவர். ஆசிரியராக, அதிபராக, கொத்தணி அதிபராக, கோட்டக்ல்வி அலுவலராக தீவக கல்வி வலய மாணவர்களுடன் தமது சேவையை இணைத்துக்கொண்டவர். வசதியான இடத்தை நாடாது,கல்வி தேவையுள்ள இடத்தை நாடிச்சேவை செய்தவர். வேலணைக்கோட்டக் கல்வி அலுவலராக கடமையாற்றினாலும் ஏனைய எமது கோட்ட மாணவர்களினதும் நலன்களைப் பெரிதாக மதித்தவர். இன்று கல்விப் பணிமனையில் இருச்து ஓய்வுபெற்றுவிட்டார்.அவர் தமது ஓய்வு காலத்தில் மிக்க மகிழ்வுடன் வாழவேண்டுமென வாழ்த்தும் பலருடன் நானும் இணைந்து கொள்கின்றேன்
ஆ.ராஜேந்திரன்,
வலயக் கல்விப் பணிப்பாளர், தீவகக் கல்வி வலயம்.

ஆளுமை மிக்க கல்வி அலுவலர்

தொழில்களில் முதன்மையானதும் போற்றத்தக்கதுமான ஆசிரியத் தொழிலை தெய்வமாக கொண்டு தன் பணியை செவ்வனே ஆற்றி தீவக மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அயராது உழைத்து வந்தார். நயினை ஸ்ரீ நாகபூஷனி அம்மன்பால் சிறந்த பக்தி கொண்ட இவர் சக உத்தியோகத்தர்களை அன்பாலும், பண்பாலும் கவர்ந்து கொண்டவர்.மாணவர்களுக்கு நல்லாசானாய், குருவாய் நின்று வழிகட்டி நல்வழிப்படுத்தியவர்.காலப்போக்கில் தன் திறமையாலும், உழைப்பாலும் உயர்ந்து அதிபராகவும், கோட்டக்கல்வி அலுவலராகவும் உயர்வு பெற்று இன்று தன் சேவையில் இருந்து ஓய்வுபெறும் திரு.சோ.தில்லைநாதன் அவர்களின் சேவை பாராட்டத்தக்கதும் போற்றத்தக்கதாகும். அவரது ஓய்வு காலம் சிறப்பாக அமைய புங்குடுதீவு பிரதேச அதிபர்கள் சார்பாக வாழ்த்துகின்றேன்.
க.தர்மகுணசிங்கம்
அதிபர், யா/புங்குடுதீவு ம.வி

கல்வியுலகில் ஓர் ஒப்பற்ற சேவையாளன்

தீவகக் கல்வி வலயத்தின் வேலணைக் கோட்டக் கல்வி அலுவலராக நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வுபெறும் திரு.சோ.தில்லைநாதன் அவர்கள் உயர்ந்த கல்விஞானமம் மென்மையான அணுகுமுறையும் வித்தியாசமான நிர்வாகத் திறனும் நிறைந்தவர். ஆசியராக, அதிபராக , கல்வி அலுவலராகத் தனது சேவையின் நீண்டகாலப் பணியைத் தீவகத்தில் தான் பிறந்ந மண்ணின் மகன் என்ற உணர்வோடு அர்ப்பணித்தவர். தீவக இலங்கைத் தமிழர் ஆசிரிய சங்கத்தின் உறுப்பினராக இருந்ததுடன் கிளைச்சங்கத்திற்குப் பொருத்தமான வேளைகளில் ஆலோசனைகளையும் ஆதரவையும் தந்தார். ஆசிரியர்கள், அதிபர்கள், ஊழியர்களின் பிரச்சனைகளை மனிதாபிமானத்துடன் அணுகித் தீர்த்து வைத்த பெருந்தகை.இவர் தமது ஓய்வு காலத்தில் தேக நலனும், நீண்ட ஆயுளும் பெற்று வாழவேண்டுமென இறையாசி வேண்டுகின்றோம்
எஸ்.கே.சண்முகலிங்கம்
செயலாளர், இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம். தீவக வலயம்.

கண்ணியம் மிக்க கனவான்

''தில்லைநாதன் சேர்' அவர்களுடன் பழகிய நாள்களும், பகிர்ந்து கொண்ட அனுபவங்களும் என்றும் மனதிற்கு இதத்தருவன. 1996இல் பிறந்த மண்ணுக்காக மீள் திரும்புகையில் பின்னர் ஏற்பட்ட உறவுகளில் நான் மிகவும் விரும்பி நேசிக்கும் மிக அற்புதமான கண்ணியம் மிக்க கனவானாக வாழ்ந்து வருபவர். பல்துறைப் பரிமாணங்களில் எங்களுக்கு வழிகாட்டியவர். எங்களில் ஒருவராக நின்று கல்விக்காலத்தில் பணியாற்றிய ஒரு பண்பாளர்.வேலணைக் கோட்டத்தில் மாத்திரமன்றி தீவக கல்விச் செயற்பாடுகளில் இவரது பங்கும் பணியும் மிகக் காத்திரமானதாக அமைந்திருந்ததை தீவக மக்கள் மறக்க மாட்டார்கள். எத்தகைய மக்களுக்கு கல்வியை வழங்கவேண்டுமோ அத்தகைய பிரதேச மக்களுக்காக பணியாற்றிய செய்தியை இவரது சேவையாற்றிய இடங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இவருடைய கல்விப் பணிக்கு இது ஓர் உரைக்கல்லாக அமைந்துள்ளது. இத்தகைய பண்பாளர்கள் எமது கல்விப்புலத்தில் இருந்து ஓய்வு பெறுவது இட்டு நிரப்ப முடியாத இடைவெளியாகவே இருக்கும். ஓய்வுகாலம் நலமாக, வளமாக, மகிழ்வாக அமைய வேண்டுமென்று எல்லாம் வல்ல நயினை நாகேஸ்வரித் தாயை வணங்கி வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்
வேலணைப் பிரதேச அதிபர்கள் சார்பாக
பொன்னம்பலம் அருணகிரிநாதன்,
அதிபர், வேலணை மத்திய கல்லூரி.

இருளான காலத்தில் ஒளி ஏற்றியவர்.

உயர் திரு திரு.சோ.தில்லைநாதன் அவர்கள் ஆசிரியராக, உபஅதிபராக, அதிபராக, கொத்தணி அதிபராக, கோட்டக்கல்வி அதிகாரியாக உயர் பதவி வகித்து ஓய்வுபெறும் இந்நாளில் சேவை நலன் பாராட்டி பத்திரிகைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பவதில் நயினாதீவு மகாவித்தியாலய கல்விச்சமூகத்தின் சார்பில் மகிழ்ச்சியடைகின்றேன். எமது கிராமத்தின் மூன்று பாடசாலைகளிலும் கடமையாற்றியவர்.சிறந்த மென்பந்தாட்ட வீரன். கொத்தணி முறை இருந்த காலத்தில் அனலைதீவு,எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளின் பாடசாலைகளைச் சிறந்த முறையில் நிர்வகித்தவர்.தீவகம் குடாநாட்டுடன் தொடர்பற்ற காலத்தில் கல்விப் பணிப்பாளர் இரா.சின்னத்தம்பியுடன் இணைந்து தீவகத்தில் அப்போது இருந்த 5000 மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு ஊக்கம் அளித்தவர்.அதனால் இன்று பலர் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாகவும், ஆசிரியரர்களாகவும் மற்றும் பல் தொழில்துறைகளிலும் உள்ளார்கள். அத்துடன் அப்போது தீவகத்தில் பட்டப்பின் கல்வி கற்க முடியாது இருந்த 40 பட்டதாரிகளுக்காக நயினாதீவு மகாவித்தியாலயத்தில் இரா.சின்னத்தம்பி கல்விப்பணிப்பாளருடன் இணைந்து விசேடமாக தேசிய கல்வி நிறுவனத்தின் அனுமதியுடன் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கி மாணவர்கள் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கல்வி பூர்த்தி செய்யப் பெரும் பங்காற்றியவர்.தற்போது நயினாதீவு கிராமத்திலுள்ள கல்விச்சமூகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு இவருக்குரியது.
நயினாதீவுப் பிரதேச அதிபர்கள் சார்பில்
சொர்ணலிங்கம் பகீரதன்,
அதிபர், யாஃநயினாதீவு ம.வி.

தன்னலம் கருதாதவர்

அன்பும் பண்பும் நிறைந்த மதிப்பார்ந்த வேலணைக் கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடைமையாற்றி இன்று ஓய்வுபெறும் உயர் திரு.சோ.தில்லைநாதன் அவர்கள் தீவக வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் மகத்தானவை. இந்நாளில் வெளிவரும் சேவை நயப்பு மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பேருவகை அடைகின்றேன். குறிப்பாக தீவகம் யாழ்.நகருடன் துண்டிக்கப்பட்ட காலத்தில் நயினாதீவு மாணவர்களுக்கு சிறந்த ஆசியராக, அதிபராக, வழிகாட்டியாகத் தொழிற்பட்டு பொதுப்பரீட்சைகளையெல்லாம் உரிய காலத்தில் நடத்தி சீரிய பணியாற்றியவர். நெடுந்தீவுக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பொறுப்பையும் சந்தோஷமாக ஏற்று நற்பணியாற்றியவர்.தீவக வலயம் 1998ல் ஆரம்பித்த வேளையில் முக்கிய தூண்களில் ஒருவராக இவர் திகழ்ந்துள்ளார் என்றால் அது மிகையாகாது. நெடுந்தீவு, நயினாதீவுப் பாடசாலை மேற்பார்வைக்குச் சென்றபோது பல இரவுகளை நாம் இவருடன் கழித்திருக்கின்றோம். இந்நாள்களில் இவருடைய விருந்தோம்பல் பண்பு எம்மை வியப்பில் ஆழ்த்தும். இவருடைய சுவாரஸ்யமான கதைகளுடாக எமக்கு பொழுதுபோவதே தெரிவதில்லை. வேலணைக் கோட்டக்கல்வி கோட்டத்திலும் அனைத்து நிகழ்ச்சிகளையும் உரிய காலத்தில் நடத்தி அதிபர், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மத்தியில் நற் மதிப்பை பெற்றவர். தனது குடும்ப நலனைக்கருதாது தீவகத்திலேயே தொடர்ந்து பணியாற்றிய இவருக்கு ஏற்பட்ட உடல்நிலைக்குறைவினால் வயது வரு முன்னரே ஓய்வுபெறுவது தீவக கல்விவளர்ச்சிக்கு பேரிழப்பாகும்.நயினை நாகபூஷணியின் அருட்கடாச்சத்தினால் இவர் பூரண குணமடைந்து மனைவி, மக்களுடன் நீண்ட காலம் பல சிறப்புகளுடன் வாழ அம்பிகையின் திருவடிகளைப் பிராத்திக்கின்றேன்
ப.விக்னேஸ்வரன்
வலயக்கல்விப் பணிப்பாளர். வலிகாமம் கல்வி வலயம், மருதனார்மடம்.

சமூகத்தொண்டுகள்

1. நயினாதீவு சமூகபொருளாதார கல்வி கலாச்சார அபிவிருத்திச்சங்கத்தின் கல்விக்குமுத் தலைவராக இருந்து வருடா வருடம் சங்கத்தின் சார்பாக பரிசளிப்பு விழாக்களை நடாத்துவதுடன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் எமது கிராமத்தின் வறிய மாணவர்களுக்கும் சங்கத்தின் சார்பாக நிதியினைப்பெற்று உதவி வருகிறார்.
2. நயினாதீவு மணிபல்லவ கலாமன்றத்தின் போட்டிகளுக்கான செயலாளராகவும், பொற்றாமரை மலர்க்குழுவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்
3. அகில இலங்கை சமாதான நீதவானாக இருந்து எம்மவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்து வருகின்றார்.

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாரும்
நற்றவ வாணிலும் நனி சிறந்தனவே'